Sunday, July 21, 2019

கலைக்களஞ்சியம் 1947இல் உருவானதன் அனுபவம்

கலைக்களஞ்சியம் 1947இல் உருவானதன் அனுபவம்
---------------------------------------------
ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திற்கு (Encyclopedia Britannica) நிகராக தமிழில் இன்றைக்குள்ள வசதிகள் இல்லாத நேரத்தில் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்க அவினாசிலிங்க செட்டியார் 1947 இல் திட்டமிட்டு 1968 வரை பணிகளை செய்து 9 தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. இதுவொரு பெரிய சாதனை. அவினாசிலிங்க செட்டியாருடைய மேற்பார்வையில் பெரியசாமித் தூரன் தலைமை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. தெ.போ.மீனாட்சி சுந்தரத்தினுடைய ஒத்துழைப்பு இதில் முக்கியமானது. பு.மு.ரத்தினசபாபதி முதலியார், ஜ. ராஜு முதலியார், ந.சுப்பிரமணியன், ந.கி.நாகராஜன், பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, உ.அ.பாஷ்யம் அய்யங்கார், ப.மு.சோமசுந்தரம்பிள்ளை ஆகியோருடைய உழைப்பால் உருவானது தான் தமிழ் கலைக்களஞ்சியம்.
சுமார் 20 ஆண்டுகள் உழைப்பில் பல சிரமங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கு இடையே இந்த தமிழ் களஞ்சியத்தின் தொகுப்பு தமிழுக்கு வந்தது காலத்தின் பெரிய அருட்கொடை. இதனுடைய கர்த்தா ம.ப.பெரியசாமித்தூரன் தன் நினைவுக் குறிப்புகளில் கலைக்களஞ்சியத்தின் பணிகளை குறித்து எழுதியது.
“என்னுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். பெரியவர்களுக்கான கலைக்களஞ்சியம் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம் ஒவ்வொன்றையும் வெற்றி பெற முடித்தேன். ஆகையால், இந்த அனுபவத்தைக் கொண்டு பொதுவாகவும் துணிச்சலாகவும் சொல்லமுடியும். நான் அந்த இரண்டு கலைக் களஞ்சியங்களை வெற்றிபெற முடித்துவிட்டேன் என்ற தற்பெருமையோ, தலைக்கனமோ கொள்ளவில்லை. மாறாக நான் அவைகளில் ஏற்பட்டுள்ள பிள்ளைகளை நீக்காமல் தவறிவிட்டேனே என்ற குற்ற உணர்வோடு தான் சொல்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்; அவற்றின் பொறுப்பிலுள்ள தலைமை ஆசிரியருக்கோ, பதிப்பாசிரியருக்கோ எவ்விதமான வேலையும் வைக்கக்கூடாது என்று எப்பொழுது துணை ஆசிரியர்கள் நன்கு அவர்கள் கடமைகளை செய்கிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு எந்தவிதமான வேலை கொடுத்து, குறித்த காலத்தில் வேலை வாங்குவது என்று திறம்பட மேற்பார்வை செய்ய முடியும்.

தலைமை ஆசிரியருக்கு மேலும் பலவகையான கடமைகள் உண்டு. எந்தெந்த நாட்டிலே எவர் வல்லுநர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த நாடுகளில் உள்ள விலங்குக் காட்சி கூடங்களிலிருந்து கலைக்கூடங்களிலிருந்தும் மற்றும் கவர்ச்சியான போட்டோக்களை வரவழைத்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்க் கலைக்களஞ்சியம் சிறப்புற அமையும். உள்நாட்டிலே எவரெல்லாம் பண்டிதர்களாக இருக்கிறார்களோ அவர்களின் முகவரிகளை தேடி கண்டுபிடித்து ஏற்ற பொருள் கொடுத்து ஒத்துழைக்கும்படி செய்ய வேண்டும். நன்றாக படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. தலைமையாசிரியர் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்கலாம். ஆனால் அவருக்கு பொதுவாக எல்லாத் துறைகளைப் பற்றியும் எல்லாப் பொருள்களைப் பற்றியும் சிறிதளவாவது இருக்க வேண்டும். ஒரு துறை நமக்கு பொறுப்பில்லை என்று வாளா இருக்கக்கூடாது. முன்னரே கற்றுத் தெளிந்த அறிவு இல்லாவிட்டால் அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். ஐயப்பாடுகள் பல தோன்றும். அவற்றிற்காக கலங்கக்கூடாது. கற்றறிந்த பேராசிரியர்களை அணுகி அவற்றை விளக்கும்படி தூண்டவேண்டும்.

வெளிவந்த தொகுதிகள் பற்றி என்ன கருத்து தெரிவிக்கிறார்கள்; அவற்றைப் பொறுமையுடன் கேட்டுக் கொள்ள வேண்டும். நியாயமாக இருந்தால் அவற்றை பின்பற்ற தயங்கக்கூடாது.

பொதுவாக, ஒரு துறையில் பல பொருள்கள் இருக்குமானால் யார் யாரை அவற்றைப் பற்றி எழுதுவதற்கு தூண்டி கட்டுரை பெற வேண்டும். இந்த பொருட்களை யார் யாருக்குக் கொடுக்கலாம் என்று முன்னதாகவே முடிவு செய்துவிடக் கூடாது. சாதி, சமயம் முதலியவைகளெல்லாம் அறவே நிறுத்திவிட வேண்டும். இவர் கலைக் களஞ்சியத்துக்கு எழுதினால் சிறப்பாக இருக்கும் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். 

மேலும் தலைமையாசிரியருக்கு அளவுகடந்த பொறுமை இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை குறிக்க விரும்புகிறேன். ஒரு அன்பர் கலைக் களஞ்சியத்தில் உள்ள தமது கருத்துக்கு மாறுபட்டவையும் பற்றி ஒருநாள், விடாது சற்று சீற்றத்தோடு பேசிக் கொண்டிருந்தார்.

நான் பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்தேன். இவையெல்லாம் அவர் கருத்துப்படி மூன்றாம்தர கட்டுரைகளாகும். ஏன் அவற்றை ஒரேடியாக விலக்கிவிடக் கூடாது என்று கேட்டார். நமக்குள்ள புலமையை வைத்துக் கொண்டு தானே பணி செய்ய வேண்டும். தாங்கள் சொல்வது போல விலக்கிவிடுவது எளிது. ஆனால் கலைக் களஞ்சியம் உருவாகாது. பூசல்களும் மோதல்களும் தான் எஞ்சி நிற்கும் என்று பலவிதமாக விளக்கிக் கொண்டிருந்தேன். முடிவாக தலைமை ஆசிரியர் பதவிக்கு நீங்களே தகுதியானவர் என்று புகழுரையோடு முடிந்தது அந்த நிகழ்ச்சி.

கலைக்களஞ்சியத்துக்கு ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட அளவு வரிகள் என்று முன்னாலேயே திட்டமிடப்பட்டு இருக்கவேண்டும். அப்பொருள் பற்றிய ஆர்வமிகுதியால் கொடுத்த அளவுக்கு மேல் மூன்று நான்கு மடங்கு எழுதிவிடுவார். அதை பதிப்பிக்கும் போது கருத்துக்கள் மாறாமல் எழுத வேண்டியதிருக்கும். கட்டுரை எழுதியவர்கள் மிகச் சுருக்கமாக இருக்கிறது என்று இயற்கையாக கோபம் வரும். அவற்றைப் பற்றி எல்லாம் மனம் நோகாத வரும் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்னும் அச்சுவேலை பிளாக் முதலியவை உண்டாகும் எந்த அளவில் அவற்றை உண்டாக்கலாம் என்பன போன்ற பல கடமைகள் தலைமை ஆசிரியருக்கு உண்டு. நான் தற்பெருமையாக சொல்லவில்லை. படிப்பு, கலைக் களஞ்சியப் பணி செய்யும்போதே மிக அதிகமாயிற்று என்று கூறலாம். 

ஆங்கிலத்திலே எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. நூல்நிலையத்துடனோ, புத்தக வெளியீட்டாளருடனோ இடைவிடாது தலைமையாசிரியர் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒரு துறையில் புது நூல் ஒன்று வெளிவருமானால் கலைக்களஞ்சியத்தில் அவை பயன்படுமானால் உடனே படிக்கத் தயங்கக்கூடாது. இவ்வாறு பல பணிகள் இருப்பதால் தான் தலைமை ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட துறையைக் கொடுத்து கட்டி வைக்க கூடாது என்று சொல்கிறேன். ஒரு பொருள் பற்றி கட்டுரையாளர் எழுதியது பொதுமக்களுக்கு சற்று கடினமாக தோன்றினால் உடனே அப்பொருள் பற்றி தெளிவாக புரிந்து கொண்டு எளிதாக அமைக்க முயலவேண்டும். 

பொதுவாக கட்டுரை வழங்குபவர் பேராசிரியராக இருப்பார். அவற்றை திறமையோடும் கட்டுரையாளர் உள்ளம் நோகாமல் திருத்த முயல வேண்டும். எனது கட்டுரையை திருத்த இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பொதுவாக உள்ளத்தில் தோன்றுவது இயல்புதான். அந்த நேரத்தில்தான் விளங்காத பொருளைப் பற்றியும் விளங்கிக் கொள்ளும் முயற்சி கைகொடுத்து உதவும். ஒன்று கூறும் முன்னை நான்கு கருத்துக்களை எடுத்துக் கூறினால் இவருக்கும் அப்பொருள் பற்றி நல்ல அறிவு இருக்கிறது என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிடும். பின்னர் எல்லாம் எளிதாக முடிந்து விடும். இதற்கு முன்னர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். கலைக் களஞ்சிய பணி கடல் போன்ற மிகப் பரந்த ஒன்றாகும். அதில் பணிபுரிவது ஒரு பெரிய அனுபவம்.

கலைக்களஞ்சிய பணியை எழுதினால் போதும் என்று எண்ணிவிடக்கூடாது. அப்பெரிய பணியை அதற்குள் அடக்கிவிட முடியாது. இது படிப்பவர்களின் இடையே ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்கிவிடலாம். பல்வேறு துறைகளுக்குப் பலவகையான உத்திகளைக் கொண்டு சமாளிக்க வேண்டியது தலைமை ஆசிரியரின் பொறுப்பாகும். எனது அருமை நண்பர் ஒரு கூட்டத்திலேயே சொல்லியதை இந்த இடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது கலைக்களஞ்சிய பணிக்கு நிறைய பொருள் (தலைப்புகள்) தேட வேண்டும். பொருள் தேடி விட்டால் மட்டும் போதுமா? ஆர்வமும், தகுதியும் உள்ள துணை ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் சொன்னார். “ஒரு கை ஓசை விட முடியுமா?” பொருள் தேட வேண்டும்; தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே இரண்டு முக்கியமான கரங்களைக் கொண்டு தட்டினால்தான் ஓசை உண்டாகும்.

கலைக்களஞ்சிய பணியில் ஆர்வமுள்ள துணை ஆசிரியர்கள் எப்படியோ எனக்கு வாய்த்தனர். இந்த சமயத்திலே சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பணி மிக சிறப்பானது என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அவரைப் போல தாமுண்டு தமது பணி உண்டு என்று முழுமனதாக பணிசெய்தவர்கள் இக்காலத்தில் இருக்கிறார்களா என்பதே ஐயமாக உள்ளது. திரு. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் விலங்கியல், தாவரவியல், உயிரியல் என்ற துறைகளுக்கு பொறுப்பேற்றிருந்தார். அத்துறைகள் கலைக்களஞ்சியத்தில் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவரை எப்போதும் நான் மறப்பதில்லை. இவருக்குக் கலைக்களஞ்சியம் 9 பகுதியில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தால், அதிக இடம் கொடுக்க முடியவில்லையே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது.

கண்களில் படலம் விழுந்து படிக்க முடியாது போன காலத்திலும் அவர் தமது பகுதியைப் பொறுத்தவரையில் பூதக்கண்ணாடியின் மூலமாக நிறைய திருத்தத்தை பார்வையிட்டு இருந்தார். தலைமை ஆசிரியரின் பொறுப்பாக 9 தொகுதியில் முடித்து விடவேண்டும் என்ற முக்கியமான கடமை இருந்தது. ஏனென்றால் ஒரு தொகுதி அதிகமாகிவிட்டாலும் ஒரு லட்ச ரூபாய் தேட வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, சுமார் 250 பக்கங்களில் முடித்துவிட, கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா தொகுதிகளிலும் சுமார் 750 பக்கங்கள் கொண்ட ஒரே அளவில் அமையும். பத்தாம் தொகுதி, சுமார் 200 பக்கங்கள் கொண்டதாக இருந்தால் அப்போது 9 தொகுதிகளில் வரிசையாக அடுக்கி பார்த்தபோது சமஅளவு உடையதாக இருக்கும்.

தலைமை ஆசிரியருடைய திறமை இங்கு தான் அதிகமாக வெளிப்படும். ஒவ்வொரு பாரத்தையும் கணக்கெடுத்துக் கொண்டேவர வேண்டும். எதை நீக்கலாம் எந்த பொருள் மிக தேவையானது என்று தீர்மானிப்பது தலைமையாசிரியர் முக்கியமான பணி. இது போன்ற மேலும் பல பணிகள் இருக்கின்றன. அவற்றை விவரிப்பது இயலாதது. தலைமையாசிரியர் பொறுப்பு பலதரப்பட்டது. அதை நேரில் இருந்து பார்த்தவருக்கே புரியும்.

தமிழில் தான் முதன்முதலில் பெரியளவில் எல்லா துறைகளையும் கொண்டு கலைக்களஞ்சியம் வெளியாயிற்று. அபிதான சிந்தாமணி என்று ஒரு நூல் கலைக்களஞ்சியம் போலவே வெளியாயிற்று. அபிதான கோசம் என்று தலைப்புக் கொண்ட மற்றொரு நூலும் அகரவரிசையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மற்றொரு நூல் ஆகும். ஆனால் அபிதான கோசம் என்பது அகரவரிசையில் தமக்கு தெரிந்த உண்மைகளைத் தொகுத்து வெளியான ஒரு பெரும் நூல் ஆகும்.

இதில் பல துறைகளுக்கும் சேர்ந்த பொருள்களைக் கொண்டு வெளியான ஒரு நல்ல நூலாகும். தனி மனிதனின் முயற்சியால் இந்த நூல் துவக்கப்பட்டது. அந்த வகையில் இது பாராட்டத்தக்கதாகும். இருந்தாலும் சட்டம், கணிதம், வான இயல் போன்ற பகுதிகள் இதில் இடம்பெறவில்லை. 

மற்ற துறைகளிலும் முக்கியமாக சேர்க்கப்பட வேண்டிய பொருள்கள் இதில் காணப்படவில்லை. அபிதான கோசம் என்ற நூல் பெரிதும் இலக்கியத்தையும் முக்கியமாகக் கொண்ட நூலாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலும் அபிதான கோசத்திற்கு காலத்தால் பிற்பட்டதாயினும் இது எல்லாக் கலைகளையும் கொண்ட கலைக்களஞ்சியம் என்ற பெயருக்கு ஏற்றதாக இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் தான் முக்கியமான எல்லாத் துறைகளையும் தாங்கி மேலும் அவற்றில் முக்கியமான பொருள்களைக் கொண்டு வெளியிடப்பட்ட முதல் முயற்சியாகும்.  Encyclopedia Britannica என்ற புகழ்பெற்ற நூலுக்கு சமமாக இதை கூறலாகும். 

தமிழ் வளர்ச்சிக் கழகம் அலுவலகம் சென்னை பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே அமைந்து இந்த பணிகளை மேற்கொண்டது. முதன் முயற்சி என்ற காரணத்தாலும் தனித்தனி துறைகளில் நூல்கள் பல வெளியிடப்படாத காரணத்தாலும் இது குறைபாடுடையது என்று சொன்னாலும் மேல்நாட்டு கலைக்களஞ்சியங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம் என்றே சொல்லுகிறேன். எடுத்துக்கொண்ட பலபல துறைகளிலும் பல முக்கியமான பொருள்களை போயிருக்கின்றன.

இருந்தாலும் தமிழ்க் கலைக் களஞ்சியத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அழகுக் கலைகள் சம்பந்தமாக பல பொருள்கள் இங்கே இடம்பெற்றுள்ளன. மேல்நாட்டு கலைக் களஞ்சியங்களிலே இவற்றை காண முடியாது. எடுத்துக்காட்டாக மோகினி ஆட்டம் என்று மலையாளத்திற்கே உரிய சிறப்பான கலை இருக்கிறது. அதை பற்றிய விவரங்களை தமிழ் கலைக் களஞ்சியத்தில் காணலாம். இதைப் போன்ற பல சிறப்புகள் தமிழ் கலைக் களஞ்சியத்தில் உண்டு.”

#பெரியசாமித்தூரன்
#கலைக்களஞ்சியம்
#Tamil_Encyclopedia
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2019

No comments:

Post a Comment