Friday, July 5, 2019

#புறநானூறு சுய நலம் உள்ள அரசுப் பணியாளருடன்........ #பிசிராந்தையார் (புலவர்)

#புறநானூறு சுய நலம் உள்ள அரசுப் பணியாளருடன்........

‘’காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, 
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!’’
திணை: பாடாண்
துறை: செவியறிவுறு.

ஆரம்ப நாட்களில் அரசு என்பது
பக்கத்து நாடுகளில் இருந்து 
வீரம் என்ற பெயரில் 
கொள்ளை அடிப்பதால்,
வேற்றவர் பொருள் வந்தால்
அதற்குச் சுங்கம் என்ற பெயரில் 
வரி வசூலிப்பதால்,
விவசாயிகளிடம் ஆறில் ஒன்று
என்று பெறுவதால் நடந்து வந்தது.
ஆனாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்
காலம் எல்லாம் விவசாயிகள் தாம்.
பிசிராந்தையார் தம் தேர்ந்த அறிவுத் திறத்தால்
ஒரு சிறந்த அரசு
எப்படி விவசாயிகளிடம் வரி வசூல் செய்வது
என்பதைக் கூறும்போதே
அனைத்துக் காலத்திற்கும்
பொருந்தும் வண்ணம் பாடுகிறார்.
**

மக்கள் அரசு, வரியை
எப்படி முடிவு செய்ய வேண்டும்? 
நன்கு விளைந்த நெல்லை அறுத்துக்
கவளமாக யானைக்குக் கொடுத்தால் 
ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில் 
விளைந்த கதிரும் 
பல நாளைக்கு ஆகும்; நூறு செய் நிலந்தான்;
ஆனால் அதற்குள் யானை 
தனியாக நுழைந்து உண்ணுமானால் 
அதன் வாயில் புகும்
நெல்லைக் காட்டிலும்
நான்கு கால்களால் கெடுவது மிகுதியாகும்.

இதுபோலவே 
அறிவுள்ள அரசன்
வரி வாங்கும் முறையை அறிந்து 
வரி வாங்கினால் 
அவன் நாடு வருத்தம் இல்லாமல் 
கோடி பொருளைக் கொடுக்கும்
தானும் மகிழ்ச்சியாகத் தழைக்கும்

ஆள்வோன் அறிவுச் சிறுமையாளனாகி,
நாள் தோறும் நன்மை தரும் 
நேர்மையான வழியைக் கூறாமல் 
ஆளும் அவன் விரும்புவதையே
தானும் கூறும்
ஆரவாரமிக்க 
அரசுப் பணியாளருடன் சேர்ந்து 
மக்களின் அன்பு கெடுமாறு 
பெரும் பொருள் திரட்ட விரும்பினால் 
யானை புகுந்த வயல் போல 
அவனும் உண்ண மாட்டான்; 
அவன் ஆளும் நாடும் அழியும்...

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-07-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...