Friday, December 20, 2019

04: மார்கழி- பாவையும் வள்ளுவமும்

04:  மார்கழி- பாவையும் வள்ளுவமும்

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்,
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து,
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

இந்தப் பாசுரத்தில் நம் தமிழுக்கே உரிய "ழ"-வை, 11 முறை சொல்கிறாள்! 
 
குறள்-பாவை! இரண்டு இலக்கியங்களின் கட்டமைப்பைப் பார்க்கலாமா?

* கடவுள் வாழ்த்து = மார்கழித் திங்கள்/வையத்து வாழ்வீர்காள்/ஓங்கி உலகளந்த!
ஆதி பகவன் முதற்"றே" உலகு! = நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!
நற்"றாள்" தொழாஅர் எனின் = பரமன் "அடி" பாடி!
நிலமிசை "நீடு" வாழ்வார் = "நீங்காத" செல்வம் நிறைந்தேலோ!

* வான் சிறப்பு = ஆழி "மழைக்" கண்ணா!
நீரின்று அமையாது "உலகு" = வாழ "உலகினில்" பெய்திடாய்!

* நீத்தார் பெருமை = மாயனை மன்னு!
செயற்கரிய "செய்வார்" பெரியர் = குடல் விளக்கம் "செய்த" தாமோதரனை!

* அறன் வலியுறுத்தல் = அம்பரமே தண்ணீரே!
அன்று அறிவாம் என்னாது "அறம் செய்க" = அம்பரமே தண்ணீரே சோறே "அறம் செய்யும்"!
மனத்துக்கண் மாசிலன் ஆதல் = கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ!

என்று இப்படிப் பலவாறாக விரியும்! 

தெய்வத் தமிழ் மறையாம் திருக்குறளைக் கோதை படிக்காமல் தான் இருந்திருக்க முடியுமா? அதுவும் கடவுள் வாழ்த்தில், கடவுளைச் சொல்லாமல், அடிக்கு அடி, அடியைப் (திருவடியை) பேசும் திருக்-குறளை, திருப்-பாவைக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?

1. வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
2. மலர்மிசை ஏகினான் "மாணடி" சேர்ந்தார்
3. வேண்டுதல் வேண்டாமை "இலானடி" சேர்ந்தார்க்கு
4. தனக்குவமை இல்லாதான் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
5. அறவாழி அந்தணன் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
6. எண்குணத்தான் "தாளை" வணங்காத் தலை
7. நீந்தார் இறைவன் "அடி" சேராதார்.
......என்று திருக்குறளில் எங்கு பார்த்தாலும் "திருவடிகள்" தான்!

குறள் நெறியில் வாழ்ந்தவள் கோதை! 

இன்றைய Water Cycle, Rain Water Harvesting கொள்கைகளை ஆண்டாள் அப்போதே வரைந்து காட்டிய நீர்ச் சுழற்சி ஓவியத்தைக் கொஞ்சம் பாருங்கள்! எத்துணை அழகு? அவள் எந்த வகுப்பறையில் போய் Hydro Cycle எல்லாம் படித்தாள்?

ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)

ஆர்த்தல் = ஒலி எழுப்பல்-ன்னும் கொள்ளலாம்! இல்லை, ஆர்=ஆரணங்கு=அணியும் பெண் என்றும் கொள்ளலாம்! நீர்த்துளிகள் எல்லாம் ஒன்னோட ஒன்னு, கோர்த்து கோர்த்து, அணிந்து அணிந்து ஏறுது-ன்னும் எடுத்துக்கலாம்!

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து (Condensation)
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! 
பத்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! 

ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னல் மின்னுது!
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடிக்குது!

முதலில் மின்னல்! அப்புறம் இடி-ன்னு அப்பவே காட்டுறா கோதை! 
அவளுக்குத் தெரியும் ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!
Light travels faster than sound! Light=3x10^8 m/s; Sound=343 m/s! 
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துது மழை! (Precipitation & Rain)
வாழ உலகினில் பெய்திடாய்! = நல்லாரும் பொல்லாரும் எல்லாரும் வாழ, உலகில் நல்லா மழை பெய்யட்டும்! அனைத்தையும் குளிர்விக்கட்டும்!

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில், மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
4. நந்தகம் என்னும் வாள்
5. கெளமோதகி என்னும் கதை

நாங்களும் மார்கழி நீராட = மழை பெஞ்சாத் தானே, மத்த ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்! 
அதான் நல்லபடியா நோன்பு நடக்க, மக்கள் நோன்புக்கு ஆதரவு காட்ட, வாழ உலகினில் "பெய்திடாய்" 
 
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்! 
எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! எனவே கண்ணனையே மழைக் கடவுளாக வணங்குகிறாள் கோதை! 

ஆழி மழைக் கண்ணா = கண்ணனால் பல மழைகளை அவளுக்குத் தர முடியும்!
* உள்ளத்துக்கு அன்பு மழை!
* உலகத்துக்கோ அருள் மழை.....நீர் மழையுடன் கூடிய கருணை மழை! அருள் மாரி! ஆழி மழைக் கண்ணா! 
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

பெரியாழ்வார் பாசுரம்
10 "ழ"

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் 
      கோவிந்தனுடைய கோமள வாயிற் 
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக் 
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக் 
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன் 
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் 
குழலை வென்ற குளிர் வாயினராகிச் 
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment