Saturday, December 21, 2019

#திருப்பாவை #கோதைமொழி

05.மார்கழி

  " *தூயோமாய் வந்து,தூமலர் தூவித் தொழுது* "

மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!

மாயனை = மாயோன் என்னும் தமிழ்ப் பெரும் தெய்வம்!

அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் முதற் பெரும் பதிவு எது? தமிழின் கண்ணாடி எது? *தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எது? = தொல்காப்பியம்* !
இதில் மாற்றுக் கருத்தே இல்லை! அது தன் பொருளதிகாரத்தை எப்படித் துவங்குகிறது?

 *மாயோன் மேய காடுறை உலகமும்,* 
சேயோன் மேய மைவரை உலகமும்,
...
இப்படித் *தமிழ் இலக்கணத்தின் துவக்கமே மாயோன்* ! ஆண்டாளும் இந்தப் பாசுரத்தை "மாயனை" என்றே துவக்குகிறாள்!

இயற்கை வழிபாட்டின் படி, மாயோன் முல்லை நிலக் கடவுள் ஆனான்!

முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் = காடு பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? = பச்சை மாமலை போல் மேனி!
முல்லை: பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
முல்லை: சிறுபொழுது = மாலை! = மால்! திருமால்!
முல்லை: ஆயர்கள் நிலம்! = ஆயர் தம் கொழுந்தே!
முல்லை: தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் தான் பசுக்களை மேய்த்தான்!
முல்லை: விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிந்தான்!

இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகத் தான் மாயோன்/திருமால் அறிமுகமானான்!

தொல்காப்பியருக்குப் பின் வந்த காலம்....சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு நிற்கும் காட்சியை இளங்கோ வர்ணிக்கிறார்! திருவரங்கக் காட்சிகள் தனியாகச் சொல்லப்படுகின்றன!

புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பரிபாடல் என்ற எல்லாச் சங்க நூல்களிலும் திருமாலைப் பற்றிய பலப்பல குறிப்புக்களைக் காணலாம்.

வில்லியில் இருந்து வடக்கால வந்தாக்கா "வட" மதுரை!
அந்த மண்ணின் மைந்தன் யாரு? = அட, நம்ம அழகரு!

மாயனை, மன்னு, வட மதுரை மைந்தன் = கள்ளழகர்!

ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை = பால் உணவை அடிப்படைத் தொழிலாக வைத்திருக்கும் ஆயர் குலம்! பால் போல அவிங்க மனசும் வெள்ளை! அந்த ஆயர் குலத்துக்கே விளக்கேற்ற வந்தவன் கண்ணன்! ஆயர் குலத்தில் "தோன்றினான்"!
அவன் பிறக்கவில்லை! கர்ப்பத்தில் வந்து "தோன்றினான்"!
முருகனை "உதித்தான்" என்கிறார் கச்சியப்பர்! கண்ணனைத் "தோன்றினான்" என்கிறாள் ஆண்டாள்! ஒரு திருக் கண்ணன் வந்து, உதித்தனன் உலகம் உய்ய! 🙂

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை = தாய்க்கும், தாய் மண்ணுக்கும் பெருமை தேடித் தந்தவன் கண்ணன்! தாயின் குடலை (வயிறை) விளங்கச் செய்தான்!

தாமோதரன் = தாம+உதரன் = கயிறு+வயிறான்!
தன் வயிற்றைக் கயிற்றால் கட்டிய தாயின் வயிற்றை விளங்கப் பண்ணியவன் திருவடிகளே சரணம்!

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது = நல்ல மனசோட வந்து, நல்ல மலர்களைத் தூவித் தொழுவோம்! 
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = இதுக்குப் பேரு தான் உண்மையான தொழுகை!

போய பிழையும்/புகு தருவான்/நின்றனவும், தீயினில் தூசாகும் = இப்படி வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால்.....

* இது வரை மூட்டை கட்டி வைத்துள்ள பாவங்களும் ( *சஞ்சிதம்* ),
* அதிலிருந்து, இந்தப் பிறவிக்கு மட்டும் எடுத்த வந்த கட்டுச்சோறு பாவங்களும் ( *பிராரப்தம்* ),
* இனி மேல் Fixed Deposit-இல் போட்டுக் கொள்ளப் போகும் பாவங்களும் ( *ஆகாம்யம்* )

என்று அத்தனையும்...தீயினில் தூசாகும்! தீயினில் தூசாகும்! 

பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!

தென்-வில்லி ஆண்டாள் திருவடிகளே சரணம்!
வட-மதுரைக் கள்ளழகன் திருவடிகளே சரணம்!

#பிடித்து_பகிரல்

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...