Sunday, December 22, 2019

#திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 
06.மார்கழி 
" *வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை* "

புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!

புள்ளும் சிலம்பின காண் = புள் என்றால் பறவை! பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன! கூவாமல் ஏன் சிலம்புகின்றன? சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்!
அதே போலத் தான், பறவைகளும் விட்டு விட்டுக் கூவுது! 

புள் அரையன் கோயிலில் = பட்சி+ராஜன் = புள்+அரையன்! எப்படி அழகா வடமொழியில் இருந்து தமிழுக்கு மாத்திடறா பாருங்க கோதை?
புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!
புள்+அரையரையன் = கருடனுக்கும் அரசன் = பெருமாள்!

இன்றைக்கும் வில்லிபுத்தூரில் அது புள்ளரையன் கோயில் தான்! பெருமாளுக்கும் கோதைக்கும் நிகராக, அதே ஆசனத்தில், கருடனும் சரி சமமாக நிற்கிறான்! பொதுவாக, கருடன் பெருமாளைப் பார்த்தவாறு, எதிர்ப்புறத்தில் சேவகனாய்த் தானே நிற்பான்? இங்கு மட்டும் அப்படி இல்லை! ஏன்?
அரங்கனில் கலந்து விட்டாள் கோதை! ஆனால் தந்தைக்கோ ஊரறிய மகளின் கண்ணாலம் பண்ணிப் பார்க்க ஆசை! ரங்க மன்னாராக வில்லி வந்து ஊரறியக் கரம் பற்றுகிறேன்-ன்னு சொல்லிட்டான் அரங்கன்! ஆனால் மண நாளன்றோ அரங்கன் வர லேட்டாகுது! அரங்க வாசிகள் அவனை விட்டால் தானே? சும்மா....ஊர் வேலையே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி?

இங்கோ இந்த ஊர் வேற மாதிரி பேச ஆரம்பிக்குது! கருடன் வேத சொரூபம்! அவனுக்கு உண்மை விளங்கி விட்டது! ரங்க மன்னாரைப் பரபர-வென்று புயல் வேகத்தில் பறந்து அழைத்து வருகிறான்! அந்த வேகம் ரங்க மன்னாருக்கே பயத்தைக் கொடுத்ததாம்! கல்யாணத்துக்கு சீவிச் சிங்காரிச்சி வந்தான் அரங்கன்! அடியவன் கருடனோ வேர்த்து விறுவிறுத்து வந்தான்! பார்த்தாள் ஆண்டாள்! சேர்த்தாள் ஆசனத்தில்!
தன் வருங்காலக் கணவன் கண்ணன்! இன்னும் கண்ணாலமே ஆகலை! அவன் பணியாட்கள் மேல், அவனைக் காட்டிலும் அவளுக்குள்ள பரிவு தான் என்ன!
இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் சமத்துவம் பேசுகிறோம்! ஆனால் அதை ஆண்டாள் அன்றே செய்தாள்!
இன்றும் முதலாளி அம்மாவோடும், முதலாளி ஐயாவோடும், தொழிலாளி கருடன், ஒரே சிம்மாசனத்தில், தோளோடு தோள் நிற்கிறான்!

கோதை!  உனக்குத் தான் எத்தனை முகங்கள்! எத்தனை அகங்கள்! அதில் சமத்துவமும் ஒன்றோ? ஆண்டாள் திருவடிகளே சரணம்!

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = தூய்மையான வெள்ளை நிறச் சங்குகள்! அவையெல்லாம் நம்மை விளிக்கின்றன! அந்தச் சத்தம் கூடவா காதுல விழலை?

பிள்ளாய் எழுந்திராய் = அட, எழுந்திருடீ பொண்ணே!

பேய் முலை நஞ்சுண்டு = பூதனை என்னும் கம்சனின் பேய் அவனைக் கொல்ல வந்ததே! அவள் முலைப்பால் குடித்து மலைப்பாம்பு அல்லவா மலைக்க வைத்தான்?

கள்ளச் சகடம் கலக்கு அழிய = வண்டிச் சக்கரமாய் வந்தான் சகடாசுரன்! அவன் கலக்கையும் ஒரு கலக்கு கலக்கினானே நம்ம கண்ணன்? 

கால் ஓச்சி = காலை ஓச்சினானாம் சக்கரமாய் வந்த சகடன் மீது!
அப்போ கண்ணனைக் காத்தது யார்? அவன் திருவடிகள் தானே! இதான் திருவடிப் பெருமை!

* நம்மையும் காத்து,
* அவனையும் காத்து,
* அவனுக்கும்-நமக்கும் பாலமே இந்தத் திருவடிகள் தான்! திருவடிகளே சரணம்-ன்னு வரிக்கு வரி சொல்வது இப்போ நல்லாப் புரிந்திருக்குமே?

 
வெள்ளத்து அரவில் = பாற்கடல் வெள்ளத்தில், அரவமான பாம்பின் மீது
துயில் அமர்ந்த வித்தினை = துயில்+"அமர்ந்த" மூல புருஷன்!

பரமபதத்தில் அமர்ந்த கோலம்! பாற்கடலில் கிடந்த கோலம்! அதான் ஒரு சேரப் பாடுகிறாள்!
வெள்ளத்து அரவில் = துயில்! வித்தாக இருக்கும் பரத்தில் = அமர்ந்து!

இறைவனின் நிலைகள் ஐந்து! 
1. பரத்தில் = அமர்ந்தும்,
2. வியூகத்தில் = கிடந்தும்,
3. விபவத்தில் = நடந்தும்,
4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!

இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்!

அந்த வித்தினை "உள்ளத்தில்" கொண்டு, முனிவர்களும்+யோகிகளும்,
லேட்டாயிருச்சே-ன்னு அலறி அடிச்சிக்கிட்டு எழுந்திரிக்காம, சீக்கிரமாகவே விழித்துக் கொண்டு, "அரி" என்ற பேர் அரவம் = ஹரி ஓம்! ஹரி ஓம்!
அது உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!!

 அனைவரின் "உள்ளமும் புகுந்து", அவர்கள் மனங்களை எல்லாம் "குளிர்வித்து", அடியார்களுக்கு நலம் எல்லாம் "அருள" வேணுமாய், ஆண்டாள்-அரங்கனை, வேண்டிக் கொண்டு அமைகிறேன்! "அரி" என்ற பேர் அரவம்! ஹரி ஓம்!

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment