Tuesday, December 24, 2019

திருப்பாவை #கோதைமொழி

07.மார்கழி 

" *நாராயணன் மூர்த்தி கேசவன்* "

மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!

சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை! காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் "ரசிக்க" சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்! 🙂

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்! 
 
கீசு கீசு என்று எங்கும் = கீச் கீச் எனக் கத்தும் பறவைகள்! 
ஆனைச் சாத்தன் கலந்து = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு-ன்னு நாங்க சொல்லுவோம்!

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? = இந்தப் பறவைகள் பேசுதே! அது கூட காதில் விழாம அப்படி என்ன தூக்கம்?
பேய்ப் பெண்ணே! = பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்!
இவ பேய்த்தனமா தூங்குறா! எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு! பேய்-ஆழ்வார் ஆகி விடு! அதான் கோதை சொல்றா!

காசும் பிறப்பும் = * காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள்! காசு மாலை போல இருக்கும்! நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம்! அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க!
* பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும்! ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்! ஆமைத்தாலி-ன்னும் ஊர்ல சொல்லுவாங்க!

கலகலப்பக், கை பேர்த்து = கழுத்து மாலையும், கை வளையும் கல-கல-ன்னு ஓசை எழுப்ப, ஒரு கை அப்படியும், இன்னொரு கை இப்படியும் என மாறி மாறி வாங்கி!
பேர்த்து = மீண்டும் மீண்டும், மாறி மாறி! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்பதை ஒப்பு நோக்குங்கள்!

வாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது! 
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ = மத்துல தயிர் கடையும் சத்தம் கேட்கலையோ? 
நாயகப் பெண் பிள்ளாய் = யம்மாடி, நீ பெரிய வீட்டுப் (நாயகத்தின்) பொண்ணா இருக்கலாம்!
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? = நாராயணன்-மூர்த்தி-கேசவன் என்கிற திருநாமங்கள் பாட்டில் அடுக்கப்படுகின்றன!
நாராயணன் = திருவெட்டெழுத்து, அஷ்டாட்சர மகா மந்திரம்!
மூர்த்தி = இல்லத் தலைவன்! ஆலயத் தலைவன்!
கேசவன் = கேசி என்னும் அரக்கனைக் கொன்றவன்! அழகிய கேசத்தையும் உடையவன்!

தேசம் உடையாய் = ஒளி பொருந்தியவளே! தேஜஸ்வனீ!
திறவேல் = திறக்காதே-ன்னு அர்த்தம் எடுத்துக்காதே!
திற, ஏல்-ஓர் எம் பாவாய்! = கதவைத் திற!

 நாரணனை ஏல் (ஏற்றுக் கொள்)! நாரணனை ஓர் (ஆய்ந்து அறிந்து கொள்)! எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment