Friday, December 27, 2019

திருப்பாவை #கோதைமொழி 11.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 11.மார்கழி

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!

செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!

சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! 

குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!
நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?

பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! 
நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? 
ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...