Sunday, December 29, 2019

தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூராரும், காயிதே மில்லத்தும்



________________________________________

கடந்த 1950, 1960 தமிழக அரசியலைக் குறித்து குறிப்புகளை தேடும்போது ஒன்று மனதில் பட்டது. பொது வாழ்க்கையில் தூய்மையோடு, நேர்மையான, எளிமையான தலைவராக இருந்த ஓமந்தூரார், சென்னை ராஜதானி பிரதமர் பதவியிலிருந்து (அன்றைக்கு முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) அவரே மன வேதனையோடு விலகினாரே?  விவசாயிகளின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் அவர் தங்கியிருந்த கூவம் இல்லத்திலிருந்தே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, வாலாஜா சாலையில் உள்ள தர்பார் ஓட்டல் (இன்றைய அண்ணா சிலைக்கு எதிரில் - எல்லீஸ் சாலை துவக்கத்தில்) அருகே இருந்த வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வடலூர் வள்ளலார் இல்லத்தை நோக்கி சென்றுவிட்டாரே? நேர்மையான ஓமந்தூரார் அன்றைய பிரதமர் பதவியில் இருக்க முடியாமல், அன்றைக்கு மொட்டை கடிதாசி(அப்போது cableலும் உண்டு )எழுதி அன்றைய பிரதமர் நேருவிடம் கோள் மூட்டிய விஷயங்களை எல்லாம் படிக்கும்போது வேதனை அளிக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.  

இந்த சூழலுக்கு யார் காரணம்? என்பதை தமிழக மக்களுக்கு தெரியவேண்டும். 

அதேபோல கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அற்புதமான மனிதநேய தலைவர். 

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.  1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
 1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற துணையாக இருந்தார்.

கேரள மஞ்சேரி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டபோதும், வெறும் வேட்பாளர் மனுவை மட்டும்தான் தாக்கல் செய்வார். பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறுவார்.  தமிழகத்தில் பிறந்து கேரள மண்ணில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் இல்லை. திருநெல்வேலி பேட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்.  

நானே கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே பஸ்ஸுக்காக காத்திருந்ததை பார்த்துள்ளேன்.  நீண்ட இஸ்லாமிய தொப்பி வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் யாரையும் சந்திக்கும்போது அன்பாக பேசுவார்.

தேர்தலுக்கு மக்களிடம் வேஷம்போட்டு வாக்கு கேட்காமல், வெற்றி பெற்றவுடன் தொகுதியிலேயே இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பணியை செய்வார்.  இப்படி ஒரு மாமனிதரை யாராவது பார்த்ததுண்டா?

ஓமந்தூராருக்கு ஏற்பட்ட அந்த வேதனை இன்று வரை வெளிவரவில்லை.  அது மட்டுமல்ல ஓமந்தூராரை யாரென்று கேட்டால் இன்றைக்கு பலருக்கு தெரியவில்லை. சினிமாவில் நடித்த ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், விஜயகாந்தையும், கொண்டாடுகின்ற மக்கள் தியாக சீலர்களை நினைத்துப் பார்க்காமல் இருப்பதுதான் இன்றைக்கு புரையோடிய அரசியல் நிலை.

மக்கள் சிந்திக்க வேண்டும்.  ஒரு நோய் நொடி என்றால் யார் நல்ல மருத்துவர் என்று விசாரித்து அவரை பார்ப்பது போல, அதைவிட முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாடு. நாட்டை ஆட்சி செய்து பரிபாரம் செய்யவேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டாமா? 

எத்தனை பேர் ஓமந்தூராரையும், காயிதே மில்லத் உடைய அணுகுமுறைகளை அறிந்துள்ளார்கள்?  அப்படிப்பட்ட தலைவர்களை நாம் கொண்டாட வேண்டாமா?வ உ சி,  குமாரசாமி ராஜா,ஜீவா,கக்கன், சேலம் வரதராஜ நாயுடு, மதுரை வைத்தியநாத அய்யர், திராவிட இயக்க முதல் பெண் அலமேலு மங்கதாயார் அம்மாள்,கேவிகே சாமி என பலர்.......
இப்படி பல தியாக தமிழக தலைவர்களை நமக்கு தெரிவதும் இல்லை என்பது சமுதாய குற்றம் . நமது மக்கள்தான் இறையாண்மை.அந்தஇறையாண்மையை பொருத்தமானவர்களிடம் வழங்க வேண்டும். இறையாண்மை ஒன்றும் கேளிக்கை, வேடிக்கை பொருள் அல்ல.

ஓமந்தூரார் பதவி விலகிய காரணம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு யார் பொறுப்பாளிகள் என்பதை அறிய வேண்டும்.  அன்றைக்கே மொட்டை கடிதாசி வந்துவிட்டது தமிழக அரசியலில்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

#ksrposting 
#ksradhakrishnanposting #தமிழகஅரசியல் #ஓமந்தூர்ராமசாமிரெட்டியார் #காயிதேமில்லத்
29-12-2019.

No comments:

Post a Comment