Sunday, December 29, 2019

சென்னை_உயர்நீதிமன்றம் #காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.

#சென்னை_உயர்நீதிமன்றம் 
#காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.
————————————————-
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு எந்தெந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று; ஒவ்வொரு  நாள் விடியலில் 4  மணியிலிருந்து  5 மணிக்குள் அச்சடித்து வழக்கறிஞர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும்.  இதை காஸ்லிஸ்ட் என்று அழைப்பார்கள்.  இதற்கு கட்டணம் ரூபாய் 500. 25 பேர் சென்னை நகரில் பல்வேறு பகுதியிலுள்ள வழக்கறிஞர்கள் வீட்டிற்கு விடியற்காலை 2 மணிக்கு அச்சடித்து முடித்தவுடன் வழக்கறிஞர்கள் வீட்டிற்கு செய்தித்தாள்களை போல எடுத்துச் செல்வது 150 ஆண்டுகளாக வாடிக்கையான விஷயம். 

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் “நான் கடிகாரத்தைப் பார்த்து நடைப்பயிற்சிக்கு செல்வதில்லை. என்னுடைய பாதுகாவலர் காஸ்லிஸ்டை குடுத்து விட்டார் என்றால் விடியற்காலை 4.30 மணி என்று தெரிந்து நடைப்பயிற்சிக்கு சென்று விடுவேன். 

என்னுடைய அனுபவம் 20 ஆண்டுகளில் (1970-80களில்)2 முறை அச்சக பழுதால் காஸ்லிஸ்ட் வர தாமதமாக கிடைக்கும். இதற்காகவே உயர்நீதிமன்ற வளாகத்தில் மேற்கு வாயில் செல்லும் வழியில் அரசு நூல் விற்பனை நிலையத்தை ஒட்டி இந்த அச்சகம் இருந்தது. இன்றைக்கு அந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.  

கடந்த  வாரம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் அனைத்து நீதிபதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில்செலவுகளை குறைக்கும் வகையில் காஸ்லிஸ்ட் விநியோகிப்பதை ஜன.1  முதல்  நிறுத்த  முடிவு செய்யப்பட்டது.

கடந்த 1980களில் 21 நீதிமன்றங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இயங்கின. மதுரைக் கிளை அப்போது கிடையாது. 21 நீதிபதிகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தான் தனித்தனியாக  அமர்ந்து  வழக்கு விசாரணை செய்வார்கள். மீதி 4 நாட்கள் சில நீதிபதிகள் பெஞ்ச் அமர்வில் இருபார்கள். 

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75 வரை உயர்த்தப்பட்டது. ஆனால் 55 பேர் மட்டும் இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொறுப்பில் உள்ளனர்.

நான் வழக்கறிஞராக பதிவு செய்துப் பணிக்குச் சென்ற பொழுது என்னுடைய சீனியர் காந்தி தனித்தனித் தாள்களாக வந்த காஸ்லிஸ்டை கோர்ட் வாரியாக ஒழுங்குப்படுத்தி புத்தக வடிவில் தைத்து அதன் பின்புறம் உள்ள தாளில் எந்தெந்த நீதிமன்றத்தில் நமக்கான வழக்குகள் வருகின்றன  என்று  ஒவ்வொரு கோர்ட்டாக பார்த்து பின்பக்கம் கோர்ட் எண், வழக்கு எண் என்று எழுதி வைக்க வேண்டும். இது தான் வக்கீல் தொழிலில் நுழைவோருக்கு முதல் படி. அதேபோல வழக்குமன்றம் வாரியாக நாம் தைத்து தயார் செய்த பட்டியலில் கோர்ட் வாரியாக நம்முடைய வழக்குகளை டிக் செய்யவும் வேண்டும். இது பிரவுன் தாளில் (அப்போது சாணித் தாள் என்பார்கள்) அச்சிட்டு வரும். 1985க்கு  பிறகு வெள்ளைத்தாளில்  அச்சிட்டு அனுப்பினார்கள். இப்போது இந்த முறை நிறுத்தப்படுகின்றது. இனி இதை இணையத்தில் தான்  பார்க்க வேண்டுமாம். இணையதளத்தில் பார்க்கும் வசதி இருந்தபோதிலும், பல நேரங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக காஸ்லிஸ்டை பார்க்க இயலாத நிலையேஉள்ளது.  மேலும், மூத்த வழக்கறிஞர்கள் பலர்  பட்டன் செல்போனை  பயன்படுத்துவதால் அவர்களால் இணையதளத்தில் வழக்கு பட்டியலை பார்க்க முடியாது.  காஸ்லிஸ்ட்  தயாரிப்புக்கான தொகையை அரசு வழங்குவதோடு வழக்கறிஞர்களும் கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் உயர் நீதிமன்றத்துக்கு நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை.  எனவே  பழைய முறைப்படி   காஸ்லிஸ்டை வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு நேரில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#சென்னை_உயர்நீதிமன்றம் 
#காஸ்லிஸ்ட்

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-12-2019


No comments:

Post a Comment