Thursday, December 26, 2019

கிளாரிந்தா

#கோகிலா,  #கிளாரிந்தா ஆன கதை ! 

(இது ஒரு திருநெல்வேலி சமாச்சாரம்)
————————————————
கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த #பிராமணப்பெண். தஞ்சாவூரில்  1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை  அரண்மனையில் முக்கிய அதிகாரி. என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான்.  அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது.  சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.  
ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள்.
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. . ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார்.
             பின்னாளில் பாளையங்கோட்டைக்கு லிட்டில்டன் மாற்றலாகி வந்தார். அவரோடு கிளாரிந்தாவும் வந்து சேர்ந்தார். இருவரும் வாழ்வில் இணைந்து விட்டார்கள். கொஞ்ச நாளில் லிட்டில்டன் இறந்து விட்டார். அதன்பிறகு கிளாரிந்தா கிருஸ்தவ இறைப்பணியை செய்ய தொடங்கி விட்டார். தான் வாழ்ந்த வீட்டருகே ஒரு தேவாலயத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டினார். அருகே பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கிணறு வெட்டினார். தென்னிந்தியாவில் இவர் கட்டிய இந்த தேவாலயமே தென்னிந்திய திருச்சபையின் முதல் தேவாலயம். 1783 இல் துவங்கி, 1785 இல் முடிந்தது. முன்னாளில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த அதே சுவார்ட்சு பாதிரியார் தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது வினோதம் தான்.
        இந்த கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபை பதிவேட்டில் 40 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது. 1780 இல் எழுதப் பட்டது. கிளாரிந்தா வில் தொடங்கி அவரது சமையல்காரி சாராள், யோவான் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் 13 வகை சாதியினர். இந்தப் பட்டியலில் அக்காயி என்றொரு பிச்சைக்காரியின் பெயரும் அடங்கும்.
இந்த கோகிலா என்ற கிளாரிந்தா கட்டிய தேவாலயம் இன்றும் இருக்கிறது. இவர் வீட்டின் அருகே தோண்டிய கிணறு இன்றும் பாப்பாத்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் குப்பையைக் கொட்டி இப்போது பாழடித்து விட்டனர் மக்கள். 
இந்த கிளாரிந்தா தான் முதன்முதலில் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, ஆசிரியர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் வழங்கினார். அக்கால நாவலாசிரியர் அ.மாதவையா கிளாரிந்தா என்ற ஆங்கில நாவல் எழுதி இருக்கிறார். அதில் கோகிலா பற்றிய பல விபரங்கள் உள்ளன.
15 வயதில் இறக்க வேண்டிய பெண்ணான கிளாரிந்தா, தனது 60 ஆவது வயதில் பாளையங்கோட்டையில் இறந்தார்.

சென்னை மாகாணத்தில் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை எழுத வேண்டும் எனில், கோகிலா என்ற கிளாரிந்தாவின் வாழ்க்கையில் இருந்து தான் தொடங்கவேண்டும்.


 சாரா டக்கர் கல்லூரியின் முன்னாள் Prof சரோஜினி பாக்கியமுத்துவால் மொழிபெயர்க்கப்பட்டு கிருஸ்துவ இலக்கிய சங்கம், சென்னையால் வெளியிடப்பட்டது. 40 ஆண்டுகளுக்குமுன் வந்த அற்புதமான நூல் இரண்டாண்டுகளுக்கு முன் சாதிக்கின் அடையாளம் பதிப்பகம் மூலம் மறுபதிப்பாகவும் வந்துள்ளது.



 #கிளாரிந்தா
Radhakrishnan KS

#ksrpost
26-12-2019.


No comments:

Post a Comment