மிசா / அவசரநிலை காலம் – சில குறிப்புகள் (சென்னை மத்தியச் சிறை)
--------------------------------
தமிழக சிறைச்சாலைகளில் மிசா காலத்தில் திமுக, பழைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஆர்.எஸ்.எஸ், ஆனந்த மார்க், நக்சலைட்டுகள், ஜமா அத் ஏ இஸ்லாமி இந்த் போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவும் அங்குள்ள ஒன்பதாவது கொட்டடி இவர்களுடைய கேந்திரத் தலமாக இருந்தது.
திமுக தலைவர் எம்.கே.எஸ், முரசொலி மாறன், வீரமணி, எஸ்.எஸ்.மாரிசாமி, சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மதுராந்தகம் ஆறுமுகம், சோ.மா. ராமச்சந்திரன், முத்துராமலிங்கம், வேழவேந்தன், க.சுப்பு, ஸ்ரீபெரும்புதூர் இலட்சுமணன் எம்.பி, நீல நாராயணன், டி.கே.கபாலி, மா.வெ.நாராயணசாமி, ஆர்.டி.சீதாபதி, சா. கணேசன், பம்மல் நல்லதம்பி, மேயர் ஆறுமுகம், ஆலந்தூர் அபிரகாம், பழக்கடை ஜெயராமன், பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோ. கலிவரதன், ரமணி பாய், எஸ்.ஜி.வினாயகமூர்த்தி, நேதாஜி, நெல்லை ஜெபமணி மற்றும் சர்வோதய இயக்கத்தை சேர்ந்த ஜெகன்னாதன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த வி.ரெங்கசாமித் தேவர், ஜா.சுப்பாராவ், செங்கல்பட்டு கே.வி.கோசி, அம்பிகாபதி, சண்முகசேர்வை (எ) மணிமொழி (தவறாக கைது செய்யப்பட்டார்), அதிமுகவின் ஜேப்பியார், முரசொலி அடியார், சைதை சம்பந்தன், பெருஞ்சித்திரனார், மார்க்சிய இயக்கத்தை சார்ந்த கோதண்டராமன், கயிலை மன்னன், திருவேங்கடம் கணபதி, ஆர்.எஸ்.மணி, ரவைக்கண்ணன், அன்புமணி, மயிலாப்பூர் சுந்தரம், கோடம்பாக்கம் துரை, திருவல்லிக்கேணி குருபாதம், கோடம்பாக்கம் வேணு, கோடம்பாக்கம் குமார், பண்ருட்டி தண்டபாணி, பண்ருட்டி குப்புசாமி, தட்சிணாமூர்த்தி, ஆலந்தூர் கதிரேசன், லட்சுமிகாந்தன், கள்ளக்குறிச்சி ஏ.கே.தாகப்பிள்ளை, சிதம்பரம் பொன். சொக்கலிங்கம், கதிரவத்தேவர் போன்ற பலர். அறிந்தவரை பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். சிலரது பெயர்கள் கவனத்திற்கு வராமல் விடுபட்டிருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.அப்போது நடிகர் எம்.ஆர்.ராதா குற்றவாளியாக சிறையிலிருந்தார்.
பின்னாளில் செ. கந்தப்பன், மாயவரம் கிட்டப்பா, கோவை இராமநாதன், எல்.கணேசன், குத்தாலம் இராஜமாணிக்கம், சேலம் கு.சீ.வெங்கடாசலம் போன்றவர்கள் தமிழகத்தின் ஏனைய சிறைகளில் இருந்து சென்னை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
அதேபோல, சென்னை மத்திய சிறையிலிருந்து ஆற்காடு வீராசாமி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பாளையங்கோட்டை சிறையிலிருந்த வைகோ சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இன்றைய பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமறைவாக இராமானுஜம் என்ற பெயரில் ஒன்றுபட்ட நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் தங்கியிருந்தார். இப்படி அன்றைய சில செய்திகள்.
------------------
அப்போது சென்னை மத்திய சிறையை பார்வையிட வந்த ஒரு அதிகாரி (உள்துறை மூத்த அதிகாரி சுப்பிரமணியம் என்று நினைவு) முரசொலி மாறனுக்கு நண்பர், 1975 காலகட்டங்களில் தமிழக அரசுப் பணிகளில் இருந்தவர். ரைசிங் சன்னில் (Rising Sun) கட்டுரைகள் எழுதியவர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரிடம் முரசொலி மாறன் சிறையில் நடக்கும் அத்துமீறல்களைப் பற்றி முறையிட்ட பின்னர் தான் இதைக் குறித்து விசாரிக்க நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டதாக தகவல்.
அந்த அதிகாரி சுப்பிரமணியம் தான் இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தந்தையார் என்றும் அறியப்படுகிறது. ஆற்காடு வீராசாமி சிறை அதிகாரிகளிடம் குறைகளை முறையிடுவது வாடிக்கை, ஜேப்பியார் சமையல் பொறுப்பை கவனித்ததாகவும் சிலர் கூறினர்.
இப்படி சில தகவல்கள். ஏனெனில் நடந்த செய்திகள் சிலர் கவனத்திற்கு வருவதும் இல்லை. கடந்த கால நிகழ்வுகளை அறிய முற்படுவதும் இல்லை. முடிந்தளவு அறிந்த செய்திகளை நினைவுப்படுத்த வேண்டியது கடமையல்லவா!
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
02-12-2019.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#அவசர_நிலை_தமிழ்நாடு
#மிசா_தமிழ்நாடு
#MISA_Tamil_Nadu
#Emergency_Tamil_Nadu
No comments:
Post a Comment