Friday, January 10, 2020

திருப்பாவை #கோதைமொழி 25:மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 25:மார்கழி
 “ *திருதக்கசெல்வம்*

 ” 

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய்  ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
 

ஒருத்தி மகனாய்ப் பிறந்து = பிறந்ததோ தேவகியின் மகனாய்!
ஓர் இரவில் = ஒரே ராத்திரியில்....
ஒருத்தி மகனாய் = யசோதை மகனாய் மாறி விட்டான்!
ஒளித்து வளரத் = ஊர் அறியாமல் ஒளிக்கப்பட்டு வளர்ந்த குழந்தை!

* குழந்தைக்காக, தாய் ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவளே தாய்!
* இறைவனுக்காக, மோட்ச ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவனே பக்தன்!

வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!
வெறுமனே பஞ்சபாத்திரம் வைத்துக் கொண்டு ஜலம் விடுபவனே அவன்! அனுட்டான சீலன்! அவனுக்குத் தாய் மனது இல்லை! பக்த மனது இல்லை!!
தரிக்கிலான் ஆகித் = தாங்க மாட்டாதவன் ஆகி
தான்-தீங்கு நினைந்த = தனக்குத் தானே கெட்டது நினைத்துக் கொண்டான்! கம்சன்!

அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்றில்லை என்கிறார் ஐயன் வள்ளுவன்! சதா பொறாமை பிடித்து, தாங்க மாட்டாமல், அலைந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்?
தான்-தீங்கு நினைந்த கதையாய் முடியும்! தனக்குத் தானே தீங்கு நினைத்துக் கொண்ட கதையாய் முடியும்!

கருத்தைப் பிழைப்பித்துக் = கம்சனின் எண்ணத்தை, பிழை எனக் காட்டினான்! அவன் நினைத்ததை நடக்க ஒட்டாமல் செய்தான்!
கம்சன் கருத்தைப் பிழைப்பித்தான்! நம்மைப் பிழைக்க-வைத்தான்!

கஞ்சன் வயிற்றில் = கம்சனின் வயிற்றில் 
நெருப்பென்ன நின்ற நெடுமாலே = அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற பெருமாளே! என்ன அழகான சொல்லாட்சி, கருத்தாட்சி பாருங்க!
வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே-ன்னு நாட்டுப்புறத்தில் சொல்வதை, கோதை எப்படித் தமிழ் ஆக்குறா பாருங்க! வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே = நெருப்பென்ன நின்ற!

உன்னை அருத்தித்து வந்தோம் = உன்னை (சென்ற பாசுரத்தில்) அர்ச்சனை செய்தவாறே வந்தோம்!
பறை தருதியாகில் = எங்களுக்கு நோன்புப் பொருளான பறை தரணும்-னு நீ நினைச்சீன்னா,
திருத்தக்க செல்வமும், சேவகமும் = "நீங்காத செல்வம்”
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்", "திருத்தக்க செல்வம்"!

எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்! ஆனால் யாருக்காக?
நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?
* குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?

தான், தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?
கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை! எப்படி இப்படி ஒரு ஆத்ம ஞானம்?

அதான் செல்வத்துள் செல்வம் = மழலைச் செல்வம்! தான் கொண்டு வந்த உயிர்...தன்னைத் தனக்கே, "நம்மை நமக்கே", உணர்த்துகிறது!
* செல்வத்துக்கே தக்க செல்வம் = "திரு"வுக்கே தக்க செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இது வரை சேர்த்து வச்ச செல்வத்துக்கே, செல்வம் என்றால் என்ன-ன்னு உணர்த்துகிறது! சம்பாதிச்சு வச்ச செல்வத்துக்கே, செல்வமாயும், செல்லமாயும் வந்து அமைகிறது = மழலைச் செல்வம்!

அது மட்டுமா? மனிதனுக்கு ஆத்மா தான் உண்மையான செல்வம்! அது தான் எப்பவும் கூட வரப் போவுது! அந்த ஆத்மாவை அறியணும்-ன்னா முதல் படி என்ன? "தான்" என்பதை நீக்கணும்! "என்னை" இழந்த நலம்-ன்னு சொல்லுவாரு அருணகிரி!
இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step செல்வம் = மழலைச் செல்வம்!

இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?
அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை! இந்தப் பாட்டு முழுதும் தேவகி-யசோதை-குழந்தை மனநிலை தான்! தேவகிக்கும், யதோதைக்கும் தக்க செல்வமாய் வந்தவன்=திரு+தக்க+செல்வம்!
தேவகிக்கும், யசோதைக்கும் செல்வத்துள் செல்வம் என்றால் என்ன என்று உணர வைத்தவன்=திரு+தக்க+செல்வம்!
அவன் சேவகத்தை, தேவகி, யசோதை இருவருமே செய்தார்கள்!
அவன் சேவகத்தை, யாமும் "பாடி"...வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

திரு என்பவள் ஸ்ரீ சப்த மாத்திரத்தாலே குறிக்கப்படுபவள்! அன்னை மகாலக்ஷ்மி! செல்வத்துக்கு எல்லாம் செல்வம் அவள்! ஆனால் அவளுக்கே செல்வம் எது?
* ஸ்ரீ-க்கே செல்வம் எது? = ஸ்ரீ-மன்-நாராயணன்!
* திருவுக்கே செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இப்படித் த்வய மந்திரமான பொருளும் இங்கே இதற்குக் கொள்ள வேணும்! அப்போ தான் முழுமை பெறும்!

நம்மை நமக்கு உணர்த்தும் 1st Step செல்வம் = மழலைச் செல்வம்!
நம்மை நமக்கு உணர்த்தும் Final Step செல்வம் = ஸ்ரீ = திருத்+தக்க+செல்வம்!

* ஸ்ரீ இல்லாத நாராயணன் = வெறும் நாராயணன்!
* நாராயணன் இல்லாத ஸ்ரீ = கற்பனை கூடப் பண்ணிப் பாக்க முடியாது! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
இப்படி இந்தச் செல்வத்துக்கு, அந்தச் செல்வம்!
அந்தச் செல்வத்துக்கு இந்தச் செல்வம்! = திரு+தக்க+செல்வம்!

திரு+தக்க+செல்வமும், சேவகமும் யாம் பாடி = இந்த இரு செல்வங்களுக்கான "சேவகமே" = கைங்கர்யம்! திருத்தொண்டு!
அதைப் பாடினால், செய்தால், வருத்தம் தீரும்! வருத்தம் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாய் வரும்! அதான் வருத்தமும் தீர்ந்து+மகிழ்ந்து!

1. சேவகமும் யாம் பாடி,
2. வருத்தமும் தீர்ந்து,
3. மகிழ்ந்து,
4. ஏல்-ஓர் எம் பாவாய்!
எங்கள் சேவகங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏல் கொள் பெருமாளே! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...