*ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்* !
வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??
கோயிலுக்குப் போனால் பொதுவா என்ன வேண்டுவோம்? நான் "நல்லா" இருக்கணும், என் குடும்பம் "நல்லா" இருக்கணும், என்னை "நல்லபடியா" வச்சிருப்பா தெய்வமே! - இதெல்லாம் பொதுவா எல்லாரும் சொல்லுறது தான்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்!
பல சமயம், ரெண்டு எதிரெதிர் வேண்டுதல்கள் கூட எழும்பும்!
* மழை வரக் கூடாது-ன்னு மீனவன் வேண்டுவான்! மழை நல்லா வரணும்-ன்னு விவசாயி வேண்டுவான்!
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
நாம்: கோதை, இந்த வேண்டுதல் சிஸ்டம் எப்படி வேலல செய்கிறது? உண்மையில் வேலை செய்கிறதா?
கோதை:நிச்சயமாக நடக்கிறது - எப்படியா? அவரவர் வேண்டுதலை அவரவரே நிறைவேற்றிக் கொள்வார்கள்!
நாம்: அட, அப்புறம் இறைவன் எதுக்கு?
கோதை: இறைவன் ஒரு சுமை தாங்கி!
ஒரு வேலை செய்யும் போது, அது நடந்துருமா, நடந்துருமா-ன்னு யோசிச்சிக்கிட்டே வேலை செய்ய முடியாது! நம்ம கையும் வேலை செய்யணும்! மூளையும் வேலை செய்யணும்! அது நடக்கணுமே-ங்கிற ஆதங்கத்தை, போட்டு குழப்பிக்கிட்டே வேலை செய்ய முடியுமா? திட்டமிட முடியுமா?
நான் இது "பண்ணப்" போறேன்! அதுக்கு, என் மனசை நன்கு அறிஞ்ச நீ தான் சாட்சி! - இந்த Memorandum Of Understanding (MOU) - புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் = வேண்டுதல்/Prayer!
ஆனா, சில பேரு வேண்டிக்கிட்டும், அவங்களுக்கு எதுவும் நடக்கிறது இல்லையே? ஏன்??
சுமையைச் சரியா இறக்கி வைக்கலை-ன்னு அர்த்தம்! சுமைதாங்கி மேலே இறக்கி வச்சா அது பாதுகாப்பா இருக்குமோ?-ங்கிற பயம்! அரைகுறையா இறக்கி-வைச்சும் இறக்கி வைக்காமலும் இருக்காங்க-ன்னு அர்த்தம்! இதுக்கெல்லாம் கோதை என்ன சொல்லுறா? அவ என்ன வேண்டுதல் வேண்டுறா? அவ மட்டும் வேண்டுதலை எப்படி வெற்றிகரமா நடத்திக் காட்டுறா?
* அவள் வேண்டுவது கருவிகளை! விளைவுகளை அல்ல!
* அவள் வேண்டுவது நோன்புப் பொருட்களை! நோன்பை அல்ல!
தன் நோன்பை, தான் தான், நோற்க வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும்! அவளுக்காக அதை இறைவன் நோற்க மாட்டான் என்பதும் தெரியும்! அவன் உடனிருப்பான் அவ்வளவே!
உழைச்சாத் தான் ஒரு பொருளின் அருமை தெரியும்! நோற்றால் தான் இறைவனின் அருமை தெரியும்! அதான் நோன்பைச் செவ்வனே நோற்க, நோன்புப் பொருட்களை வேண்டுகிறாள்! ஆறு கருவிகளை வேண்டுகிறாள்! அந்தக் கருவிகளின் மூலம் மன உறுதியை வேண்டுகிறாள்!
அவள் மனம், உறுதியாக உறுதியாக,
அவள் மணம் உறுதி ஆகிறது!
* கருவிகளை வேண்டுங்கள்! விளைவுகளை அல்ல!
* நோன்பு பொருட்களை வேண்டுங்கள்! நோன்பை அல்ல!
* இறை அன்பை (மோட்ச வழிகளை) வேண்டுங்கள்! மோட்சத்தை அல்ல!
கோதை வேண்டியது அவனைத் தான்! அவன் கொடுக்கும் வரத்தை அல்ல! தாழாத எண்ணம், மாறாத உழைப்பை அவள் உழைப்பாள்! நீங்க உழைப்பீங்களா?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்! - வாங்க பாசுரத்துக்குப் போகலாமா?
மாலே! மணிவண்ணா! = திருமாலே, நீலமணி வண்ணா!
மார்கழி நீராடுவான் = மார்கழி நோன்பு நோற்பவர்களான நாங்கள் எல்லாரும்
மேலையார் செய்வனகள் = என்னென்ன "செய்யணும்" என்பதை எங்கள் ஆச்சார்யர்கள் சொல்லிக் கொடுத்துப் போயுள்ளனர்!
வேண்டுவன கேட்டியேல் = அப்படி நோற்பதற்கு உண்டான கருவிகளை, மன உறுதியை, உன்னிடமே வேண்டுகிறோம்! அவை என்னென்னு நாங்களே சொல்லுறோம், கேட்டுக்கோ!
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன = உலகத்தை எல்லாம் நடுநடுங்க வைக்கும் சத்தம்!
முரல்தல்-ன்னா மெல்லிய, ஆனால் இடைவிடாத சத்தம்! கூட்டமாக ஒரு சத்தம்!
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே = பால் வண்ணம் போல் பளீர்-ன்னு வெண்மையான உன் சங்கு! அதுக்குப் பேரு பாஞ்ச சன்னியம்!
திருவல்லிக்கேணி எம்பெருமான், சக்கரம் கூட ஏந்தாது, சங்கை மட்டுமே ஏந்திக் கொண்டு இருக்கான்! மீசையை முறுக்கி, சங்கை மட்டுமே ஏந்தும் அற்புதக் காட்சி அல்லிக்கேணியில்!
போல்வன சங்கங்கள் = அந்தப் பாஞ்ச சன்னியம் போல சங்குகள் எங்களுக்கு வேண்டும்!!
போய்ப் பாடு உடையனவே = போய் தொம்-தொம் என்று ஒலி எழுப்பும் பறை! பாடு உடையனவே = பாட்டைத் தாளத்திலேயே வச்சிருக்கும் பறை!
சாலப் பெரும் பறையே = நல்ல பெரிய பறை வேணும்!
பல்லாண்டு இசைப்பாரே = பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு-ன்னு இசைக்கும் நல்ல உள்ளங்கள் வேணும்! சத்-சங்கம் வேணும்! நல்ல மனசுள்ள அடியார் தொடர்பு வேணும்!
கோல விளக்கே, கொடியே, விதானமே = அழகிய விளக்கு, கருடக் கொடி, விதானம் (பந்தல்) - இதெல்லாம் எங்களுக்கு வேணும்!
உலகமே ஒடுங்கிய பின்னரும், ஒன்னும் தெரியாத பாப்பா போல், கால் விரலைச் சூப்பிக் கொண்டு இருப்பீயே! ஆல-மா-மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான்! அரங்கத்து அரவின் அணையான்! உன்னைப் பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும்!
நாங்க கேட்பதைக் கொடு! அதைக் கொண்டு எங்கள் முயற்சிகளை நாங்கள் செய்கிறோம்! உழைச்சாத் தான், உன்னோட அருமை தெரியும்!
* உன்னை, நாங்கள் வந்து அடைகிறோம்! நீ, எங்களை வந்து அடை!
எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏல் கொள்! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment