Sunday, January 12, 2020

27.மார்கழி-27: #திருப்பாவை #கோதைமொழி


27.மார்கழி-27:  #திருப்பாவை
#கோதைமொழி



“ *உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு* ”

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!

பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!

ஆண்டாள் ஒரு மிகச் சிறந்த பெண் மேலாளர்! Team Player! பக்தி-பிரபத்தி நிறுவன CEO!
* பாசுரங்கள் 1-5 = நோன்பின் விதிகளைச் சொன்னாள்! Vision Statement! Specifications! அதைக் கொடுத்தாத் தானே நாமும் தெளிவாக வேலை பாக்க முடியுது! Spec இல்லீன்னா எம்புட்டு குழம்ப வேண்டி இருக்கும்?
* பாசுரங்கள் 6-15 = நோன்பு ஆரம்பம்! அத்தனை பேரையும் வீடு வீடாகப் போய் எழுப்பி, தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்! Human Resource = Mobilization, Optimization & Motivation! (HR-MOM)

* பாசுரங்கள் 16-25 = கண்ணன் வீட்டில் பிராஜெக்ட் நடக்குது! வாயிற் காப்போன், நந்த கோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை-ன்னு மொத்த டீமும் இருக்கு!
* பாசுரம் 26 (நேற்றைய பாசுரம்) = Project Delivery! கருவிகள் எல்லாம் கேட்டு வாங்கி, டெஸ்டிங் எல்லாம் முடிச்சி.....SUCCESS!!!

* பாசுரம் 27 (இன்றைய பாசுரம்) = Success! அதனால் இன்னிக்கி PROJECT PARTY! 🙂 - பாற் சோறு, மூட நெய் பெய்து...முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோ....

* நோன்பு ஆரம்பிக்கும் போது நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பாற் சோறு, மூட நெய் பெய்து"...
* நோன்பு ஆரம்பிக்கும் போது மையிட்டு எழுதோம், மலரிட்டு முடியோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பல்கலனும் யாம் அணிவோம்"...

இப்போ நோன்பு முடிகிறது அல்லவா? அதனால், நன்றாக அலங்காரங்கள் செய்து கொண்டு, அலங்காரப் ப்ரியனை ஆசை ஆசையாக அணுகுகிறார்கள்!
மையிட்டு, மலர் இட்டுக் கொள்கிறார்கள்! அவன் அலங்காரத்துக்கு ஒப்பாக, அவன் கண்ணுக்கு இனிமையாக, கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்!

பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி,
உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி,
பொங்கலை அவனுக்கும் ஊட்டி, தாமும் உண்டு மகிழும்.....அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிக்குங்க! எப்படி இருக்கு?

இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்! அன்னிக்கிப் பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! 
இது மிக மிக விசேடமான பாசுரம்! இனிமேல் "கோவிந்த" கோஷம் தான் அடுத்தடுத்த பாசுரங்களில்!

* கோ = பசு, உலகம், உயிர், அரசன், தலைவன், துறவி! கோ-விந்த = இந்தக் கோவினை எல்லாம் காப்பவன்! சகலத்தையும் காப்பவன்!
* இப்படிக் காத்தல் பூர்வமாய், அபய ரட்சாகாரமாய் இருக்கும் திருநாமம் "கோவிந்தா"! மிக மிக மங்களமான திருநாமம்!

அதான் மலையேறும் போது, "கோவிந்தா, கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே திருமலை ஏற அடியவர்க்கு உத்தரவிட்டார் இராமானுசர்!
நாமும் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே பதிவு ஏறுவோமா?

* ஆபாட மொக்குலவாடா, அடுகடுகு தண்ணலவாடா = கோவிந்தா கோவிந்தா!
* வட்டிகாசுல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா = கோவிந்தா கோவிந்தா!

கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா = உன்னோடு இணங்காதவரையும் இணங்க வைத்து, வணங்க வைக்கும் கோவிந்தா!

யாரெல்லாம் கூடார்? கூடாதவர்கள்?
* இறைவனைப் பற்றிய ஆர்வமே இல்லாதவர்கள்! (ஞானம், கர்மம், பக்தி இல்லீன்னா கூட, சரி பரவாயில்லை, ஓக்கே தான்! ஆனால் ஆர்வம் வேணும்! அந்த ஆர்வம் = போற்றும் ஆர்வம்/தூற்றும் ஆர்வம், ரெண்டுமே :)))

* உலகுழல் ஆசாமிகள் = சமூகப் பொறுப்பே இல்லாதவர்கள்! உலகியலில் "மட்டுமே" செக்கு மாடு போல உழல்பவர்கள்!
(தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு விடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் - என்பார் பாவேந்தர் பாரதிதாசன்)

* தப்புக் கணக்கு போடுபவர்கள் = இறைவனின் எளிமை/ நீர்மை/ செளலப்யம்/ எல்லாருடனும் எளிதாகப் பழகும் தன்மை - இதைப் பார்த்துட்டு, இவனைச் சுலபமா டபாய்ச்சிடலாம் என்று தப்புக் கணக்கு போடுபவர்கள்!

* இறைவனை வெறுப்பவர்கள் = இறைவனின் வைபவம், பெருமைகளை வெறுக்கும் துவேஷிகள்! அவன் பெருமையால் தங்கள் பெருமைகள் மறையுமோ? என்னும் சுயநலமிகள்! இதில் தூற்றுவோர் வரமாட்டார்கள்! அவர்கள் சமூகக் காரணங்களுக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ தூற்றுபவர்கள்! அவ்வளவு தான்! ஆனால் உள்ளுக்குள் வெறுப்பு வைத்துக் கொண்டு அலைய மாட்டார்கள்!

துவேஷிகள், ஆத்திகர்-நாத்திகர் இருவரிலுமே உண்டு!
ஆத்திகரில்: ருக்மி = துவேஷி, துரியோதனன் = தூற்றுவோன்!
நாத்திகரில்: கம்சன் = துவேஷி, சிசுபாலன் = தூற்றுவோன்!
இப்படிக் கூடாதாரையும் கூட்டும் கோவிந்தன்! கூடாரை வெல்லும் கோவிந்தன்! எதிரியையும் தன் மோகனத்தால் கிறங்கடிக்கும் கோவிந்தன்!

உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு = உன்னைப் பாடித் தானே, நாங்க நோன்புப் பொருளான பறையைப் பெற்றோம்! அந்தக் கருவியைக் கொடுத்தவனும் நீயே! உழைப்பு மட்டுமே எங்களது!
ஆனா நாங்களே உன்னுடைய கருவியாச்சே! அப்படிப் பார்த்தா, எங்க உழைப்பும் ஒரு வகையில் உன்னுடைய உழைப்பு தான்!

யாம் பெறும் சம்மானம் = அந்த உழைப்பினால், இப்போது நாங்கள் சன்மானங்கள் பெறுகிறோம்!

நாடு புகழும் பரிசினால் நன்றாக = அந்தச் சன்மானம், சும்மானா சன்மானம் இல்லை! மோட்ச சன்மானம்! இறையன்புச் சன்மானம்! ஏதோ விருப்பப்பட்டவங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்கிட்ட சன்மானம் இல்லை! நாடே புகழும் சன்மானம்!
 

* சூடகமே = கை வளைகள் (Bracelet)
* தோள் வளையே = வங்கி என்னும் தோள் வளை (பரதநாட்டிய கை வங்கி)
 

* தோடே = பெண்கள் காதணி (ஆண்கள்=கடுக்கண்)
தோடுடைய செவியன் பதிகத்தையும் ஒப்பு நோக்குங்கள்!
சம்பந்தப் பெருமான் உமை அன்னையைத் தான் முதலில் தோடு-ன்னு பாடி, அப்புறம் செவியன், ஈசனைப் பாடுகிறார்! 🙂

* செவிப் பூவே = காதின் ஓரத்தில் மாட்டிக் கொள்ளும் சின்ன பூப் போல மின்னும் ஆபரணம்! 

* பாடகமே என்று அனைய = கால்களில் மாட்டிக் கொள்ளும், மெல்லிய ஜல்-ஜல் ஆபரணங்கள்!

* பல்கலனும் யாம் அணிவோம் = இப்படிப் பல விதமான அணி கலனும் அணிவோம்!
* ஆடை உடுப்போம் = நல்ல ஆடைகளை உடுப்போம்!

அதன் பின்னே பாற் சோறு = நீருக்குப் பதில், பாலால் சோறு பொங்கி
மூட நெய் பெய்து = அதில் வாசனையான நெய்யை, விட மாட்டோம்-பெய்வோம், அருவி போலப் பெய்வோம்! 🙂

முழங்கை வழி வாரக் = பொங்கலில் நெய் வழியுதா? நெய்யில் பொங்கல் வழியுதா? 🙂
இப்படி பொங்கலும் நெய்யும், முழங்கை வரை வழியுது! அந்த அளவுக்கு வளப்பமாக, மகிழ்ச்சியாக (இன்று மட்டும்) உண்போம்!

தினமுமே இப்படி உண்ண முடியுமா? உடல் நலம் தானே குறைவற்ற செல்வம்! இன்னிக்கு மட்டும் விதி விலக்கு! ஏன்?
* 16ஆம் பாசுரம் = உன் வீட்டு வாசல், வாயிற் காப்போனில் இருந்து ஆரம்பித்தோம்!
* 26ஆம் பாசுரம் (நேற்று) = 16-ஆம் பாசுரத்தில் இருந்து எண்ணினால் பதினோராம் நாள் = ஏகாதசி! எனவே விரதம்!
* 27ஆம் பாசுரம் (இன்று) = துவாதசி! விருந்து! துவாதசி பாரணை-ன்னு சொல்வோமே! அது!

இத்தனை நாள் நோன்பிருந்தோம்! அதனால் தான் இன்று கொண்டாட்டம்!
கூடி இருந்து, குளிர்ந்து = இந்தக் கொண்டாட்டங்களில்,
எல்லாரும், ஒருவர் விடாமல், எந்தச் சாதி-மத-சமய-பண-கொள்கைப் பேதங்களும் இன்றி,
அடியவர்களாய்-அன்பர்களாய் ஒன்றாகக் கூடி இருப்போம்!
குளிர்ந்து இருப்போம்! மனம் குளிர்ந்து இருப்போம்!

நீயும் எங்களுடன் கூடி, நாங்களும் உன்னுடன் கூடி.....
மனம் குளிர்ந்து, குளிர்ந்து.....ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...