அமெரிக்கா - ஈரான் சிக்கலில் இந்தியாவின் நிலை?
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
ஈரான் ராணுவத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமாணியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் கொன்றது வளைகுடா பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்ற பொய்யானதொரு காரணத்தைக் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் குவாத் பிரிவின் தலைமை கமாண்டரான சுலைமாணியையும், ஈராக்கின் மக்கள் அணிப் படைகளின் துணைக் கமாண்டர் அபு மகதி அல் முகாந்திசையும் பாக்தாத் நகரின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளனர்.
இப்படி மற்றொரு நாட்டின் தலைவர்கள், முக்கியத் தளபதிகளை அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலை செய்வது ஒபாமா காலத்தில் இருந்தே நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஏமன் போன்ற நாடுகளில் உள்ள பல தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் இப்படிக் கொல்லப்படுவது தொடர்ந்து செய்திகளாக வருகிறது. ஈரான் நாட்டின் அதிகாரபூர்வ ராணுவத் தளபதி ஈராக் நாட்டில் போர்க் குழுக்களுக்குள் உள்ள முரண்பாடுகளைக் களைவது குறித்து ஈராக்கின் அழைப்பின் பேரில் நடைபெறும் கூட்டத்துக்காக பாக்தாத் சென்றபோதுதான் அமெரிக்கா இப்படிச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதல் ஈரான் நாட்டை மட்டுமல்ல, ஈராக்கையும் கொதிப்படைய வைத்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே ஈரானின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது. ஒருகட்டத்தில் ஈரான் கையெழுத்திட்ட அணுசக்தி உடன்பாட்டை ஈரான் ரத்து செய்தது. இதனால் ஈரானை நெருக்கும் பொருட்டு பல்வேறு புதிய தடைகளையும் விதித்து வந்தது அமெரிக்கா. தற்போது இந்தத் தாக்குதலைச் செய்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதன் பின்னணியில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மனத்தில் வைத்துதான் என்றும், மேலும் அமெரிக்க செனட் சபையில் ட்ரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதிலிருந்து திசை திருப்பவுமே என்று தகவல்கள் கிடைக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஈரான், ஈராக்கில் கடும் பின்விளைவுகளைச் சந்திக்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும், ஈராக்கிலிருந்து அமெரிக்கா மற்றும் மற்ற நாட்டு படைகளின் முகாம்களையும் களைத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டுமென்று ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது அமெரிக்காவுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்தச் சிக்கல் மேலும் உலகளவில் பகைமையையும், போர்ச் சூழலையும் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரானைத் தனிமைப்படுத்த நினைத்து தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க அதன் நட்பு நாடுகள் தயங்கி வருகின்றன. சுலைமாணியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று 30 லட்சம் பேர் பங்கேற்றதாகச் செய்திகள். அன்றைய தினம் ஈரானின் ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது வளைகுடா பிராந்தியத்தில் ஒருவித போர்ப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பேரல் ஒன்றுக்கு 70 டாலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்படவுள்ளது. இப்போதே கடுமையான பொருளாதாரச் சிக்கலில் தவித்துவரும் இந்தியா, இந்தச் சுமையைத் தாங்குவதற்குத் தயாராக வேண்டிய சூழலில் உள்ளது. இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெயின் பெரும் பகுதி ஈரானிடமிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையும், பின்விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா எண்ணெய்த் தேவையில் தன்னிறைவைப் பெற்றுவிட்டோம் என்று அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் சவூதி அரேபியா எண்ணெய் வளத்தையே நம்பியிருந்தது. இனிமேல் நியோம் நகர் திட்டத்தில் துபாய் பாணி பொருளாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துள்ளது.
இதில் இஸ்ரேலை மேற்கு நாடுகள் இதுவரை பயன்படுத்தியது. இனிமேல் இஸ்ரேலை எந்தளவுக்கு மேற்கு நாடுகள் கொண்டாடும் என்று தெரியவில்லை. ஏவுகணைத் தாக்குதலால் பெரிய சேதங்களும் தடுக்கப்பட்டுப் போர்ச் சூழல் இல்லாமல் ஆனது ஒரு திருப்தியான விஷயம் தான்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முட்டி மோதினாலும் அவர்களுடைய அமைதியான வாழ்வு அந்த பூமியில்தான். ஏறத்தாழ 60 லட்சம் சதுர கிலோமீட்டர் தென்மேற்கு ஆசியாவில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை இஸ்ரேல் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற பிரச்சினை தான் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை ஆகும். இதற்கும் நடைபெற்ற தாக்குதலுக்கும் சில தொடர்புகள் உண்டு என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இன்னொரு கருத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். மத்திய கிழக்கு ஆசியா என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டாலும், புவியியல் ரீதியாகச் சரியாக ஆசியாவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கலாம்.
1. கிழக்காசியா – சீனா, ஜப்பான், கொரியா
2. தென்கிழக்கு ஆசியா – தாய்லாந்து, சிங்கப்பூர்
3. தெற்காசியா – இந்தியா, இலங்கை
4. மத்திய ஆசியா – உஸ்பெஸ்கிஸ்தான், டஷ்கிஸ்தான்
5. வட ஆசியா – ரஷ்யா
6. தென்மேற்கு ஆசியா – சவூதி அரேபியா, ஈரான், இஸ்ரேல்
இப்படியான புவியரசியலில் மதம், அரசியல் அணுகுமுறைகள், கால மாற்றங்கள், கலாச்சாரங்கள் போன்றவை வித்தியாசமானவை. மற்ற கண்டங்களைப் போல ஒற்றுமையில்லாமல் பன்மையில் ஒருமை என்ற நிலைப்பாட்டில் ஆசியா இயங்குகிறது. இந்தச் சூழலில் எண்ணெய் வளம் வளைகுடா நாடுகளில் முக்கியத்துவம் பெற்று உலகப் பொருளாதாரத்தையே கோலோச்சுகிறது.
இதுபோன்ற சிக்கலான கண்டத்தில் பிரச்சினைகளின் தீர்வுகளை எளிதில் எட்டிவிட முடியாது. ஈரானில் புரட்சி நடந்து 40 வருடங்கள் சியோனிச அரசை வீழ்த்தும் பலத்தைப் பெற்ற இஸ்ரேலையும் அழிக்க ஈரான் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறது. ஆனால், இஸ்ரேலோ சிறிய நாடாக இருந்தாலும் இந்தச் சிக்கல்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதைப் போல தன்னை திடப்படுத்தி அனைத்து சோதனைகளையும் தாண்டுகிறது. தென்மேற்கு ஆசியாவில் ஈரானையும், அதன் ஷியா வகுப்பினரையும் இஸ்ரேலின் எல்லையிலேயே நிறுத்தக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சன்னி இஸ்லாமிய அமைப்பு ரீதியான நாட்டை உருவாக்கி ஷியா முஸ்லிம்களை உருக்குலைத்து இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இஸ்ரேலோ ட்ரம்ப்பை வைத்து இந்தச் சிக்கலை உருவாக்கி சுலைமாணியைக் கொன்று பதற்ற நிலையை உருவாக்க சூத்திரத்தாரியாக இருக்கலாம்.
இந்தச் சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு, பாதுகாப்பு என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு இன்றைக்கு மேற்காசிய நாடுகளின் ஆதரவாக இருப்பது இஸ்ரேல். ஆனால், இந்தப் பதற்றத்துக்குப் பிறகு மேற்காசியாவில் அமெரிக்கா திரும்பவும் கால் வைக்குமா என்பது கேள்விக்குறி. அந்த நிலையில் பாதுகாப்பாகத் தன்னுடைய ராணுவ கமுக்கங்களுக்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள டீகோ கார்சியா தீவுகளைத் தான் மேற்காசியாவின் பிரச்சினைக்கு தன் தளமாக அமைக்கலாம். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கமும், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் இருத்தலும், பிரெஞ்சு நாட்டின் போர்க் கப்பல்கள் இந்தக் கேந்திரத்தில் சுற்றி வருவதும், ஜப்பான் நாட்டினுடைய வணிக மற்றும் சில ஆதிக்கங்களும், பிரிட்டனின் நடமாட்டங்களும் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.
இந்த நிலையில் மறைமுகமாக பல சிக்கல்கள் இந்தியாவுக்கு ஏற்படலாம். இந்தப் பார்வையில் இந்திய அரசு அமெரிக்கா, ஈரான், மேற்காசிய சிக்கல்களை பார்த்து தன்னுடைய அணுகுமுறைகளையும், சில தீர்மானங்களையும் முன்கூட்டி எடுக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் அமெரிக்கா, ஈரான் பிரச்சினையின் பின் தாக்கம் கவனமாகக் கையாளப்பட வேண்டும். ஐநாவினுடைய வார்த்தைகளுக்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. ஐநாவின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டுமென இந்தியா விருப்பப்படுகிறது. அந்த விருப்பம் மட்டும் இல்லாமல் அதற்கான பார்வையும், இலக்கும் உலக புவியரசியல் ரீதியாக இந்தியா அணுக வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு
மூத்த வழக்கறிஞரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவர். திமுகவின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். கதைசொல்லி என்ற இலக்கிய இதழின் இணை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். பொதிகை – பொருநை – கரிசல் பதிப்பகம் மூலம் பல்வேறு நூல்களைப் பதிப்பிக்கிறார். rkkurunji@gmail.com
No comments:
Post a Comment