—————————————
இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஏ.கே.கோபாலன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று தான் இப்பதிவிற்கு அச்சாரம். நிழற்படங்கள் என்பவை சில நேரங்களில் நினைவுகளை அசைபோட வைக்கும் நிஜங்கள்.
ஏ கே.கோபாலன் கேரளாவை சேர்ந்தவர். எப்படி உணவு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் வாய் உண்பதற்கு முன்பாக வாசம் மூக்கை அடைகின்றதை போல அவரது பெயரை நினைத்த வேளையில் முகம் நினைவுக்கு வருவதற்கு முன்பாக அவர் அணியும் மேல்சட்டை கண்ணுக்கு தெரியும். ஆம், அவர் அணியும் மேல்சட்டை நாம் அணிவதைக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.
நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சட்டக்கல்லூரி விடுதியில் தங்காமல் பிராட்வே உள்ள சென்னை பல்கலைகழக கிளப்பில் தங்கி படித்தேன். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமி அங்கு வருவார். அந்த கிளப்க்கு எதிரேயுள்ள ஜனசக்தி அலுவலகத்திற்கும் அவர் வருவது வடிக்கை. அப்போது என் விடுதி அறைக்கு வருவதுண்டு.தொழிற்சங்க உறுப்பினர்களும், இயக்கத் தோழர்களும் சந்தித்த்துக் கொள்ளக் கூடிய இடமாக ஜனசக்தி அந்த சிவப்பு கட்டிடம் இருந்தது. கட்சி 1964 பிரியும் வரை ஏ.கே.கோபலன் அவர்களும் அங்கு வருவார்.
அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு திரு. *ஏ.கே. கோபாலன்* மீது பல வழக்குகளைத் தொடுத்தது. அந்த வழக்குகளையெல்லாம் *ராவ் & ரெட்டி* நிறுவன வழக்கறிஞர்கள் அவருக்காக வாதாடினார்கள். இந்த ராவ் & ரெட்டியின் அலுவலகம் சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்புறம் உள்ள தம்பு செட்டித் தெருவில் உள்ள ஆந்திரா இன்சூரன்ஸ் கட்டிடத்தில் இன்னமும் இயங்கி வருகிறது. இந்த படத்தில் உள்ள அலுவலகத்திற்கு தான் ஏ.கே.கோபாலன் அடிக்கடி வந்து செல்வார் என்று *சோ. அழகிரிசாமி* சொன்னதுண்டு.
மற்றொரு படம் எதிர்புறமுள்ள சிகப்பு கட்டிடத்தில் ஏ.கே.கோபலனின் நண்பர்கள் இருந்த அந்த கட்டித்திற்கும் சென்றதாக 1970 காலகட்டங்களில் சோ. அழகிரிசாமி என்னிடம் சொன்னார். ஏ.கே.கோபாலன் பொது வாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இவர் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை (Underground Life) வாழ்ந்தவர். இவர்தான் இந்தியா காபி ஹவுஸ் நிறுவனம் செயல்பட முக்கிய கர்த்தாவுமாவார். இந்தியா காபி இந்திய ஹவுஸ் அளவில் பிரபலமடைந்தது. இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள இந்தியா காபி ஹவுஸின் ஒவ்வொரு கிளையிலும் அவரின் படத்தை சிறியதாக மாட்டி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் தி.நகரில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள இந்தியன் காபி ஹவுஸ் கடையில் அவரது படம் பெரியதாக மாட்டி வைக்கப்பட்டுருக்கும். எப்போது சென்றாலும் சூடான பஜ்ஜி, மற்றும் மணக்கும் சுவையான காபியும் பித்தனைத் தட்டிலும், பித்தளை டவரா செட்டிலும் கொடுப்பார்கள்.
டெல்லியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் இவரது பெயரை சுமந்து ஏ.கே.ஜி பவன் இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்,இவரின் வழக்கின் தீர்ப்பு இன்று
முன் வழிகாட்டுதலுக்கு நீதிமன்றங்கள்
எடுத்துக்கொள்கிறது
பெஸ்ட் பார்லிமெண்டேரியன் என பெயர் பெற்றவர். இவர் தலைமறைவு வாழ்க்கை முடிந்து வெளியே வரும்போது இவரது முதல் மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்த சம்பவங்கள் எல்லாம் இவர் வாழ்வில் நடந்ததுண்டு. அதன்பின்னர்தான் சுசீலாவை மணந்தார். இவர் பாராளுமன்ற வாழ்க்கை குறித்துச் சொன்னது இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பால பாடம். பாராளுமன்றம் ஒரு சொர்க்கப்பூமி, அதன் சொகுசில் மயங்கிவிட்டால் உங்கள் கொள்கைகள் காற்றில் பறந்துவிடும். அதில் சிக்காமல் வாழவேண்டும் என்று சொல்வார். வாழ்ந்தும் காட்டியவர்.
கட்சியில் மிகப்பெரிய தலைவராக இருந்தும், அவர் இந்தியாவில் எதாவது ஒரு மூலையில் போராட்டம் நடந்தால் மக்களோடு மக்களாக போராட்டத்தில் இறங்கி கைதாவாராம். இதுகுறித்து அப்போது இஎம்எஸ்சிடம் செய்தியாளர்கள் ஏன் இப்படி ஏகேஜி செய்கிறார் என்று கேட்டபோது இ எம் எஸ் சொன்ன பதில் அது அவரால் மட்டுமே முடியும், அதனால்தான் அப்படி செய்கிறார் என்றாராம்.
#AKG #AKGopalan
#ஏகேகோபாலன்
#இந்தியபொதுவுடமைக்கட்சி
#இந்தியன்_காபி_ஹவுஸ்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
09-01-2020.
No comments:
Post a Comment