Thursday, January 9, 2020

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 24. மார்கழி- 

*இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்* 

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் காவல்ுடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!

அன்று இவ்வுலகம் அளந்தாய் "அடி" போற்றி = இதுக்கு என்னா விளக்கம் சொல்லுறது? தானாவே புரியுது! அதான் தமிழ் அர்ச்சனையின் பெருமை!

அன்று "எல்லா" உலகமும் தானே அளந்தான்? அது என்ன "இவ்வுலகம்" அளந்தாய்-ன்னு பாடுறா? - தேவலோகம், தபோலோகம், சத்யலோகம்-ன்னு ஈரேழு பதினான்கு லோகங்கள் இருக்கே! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்!

* இப்படிப் பல லோகங்கள் இருந்தாலும், எம்பெருமானுக்கு நம் மீது தான் அதிக வாஞ்சை! அதான் முதல் அடியை "இங்கு" அளந்து துவங்குகிறான்! அதான் "இவ்வுலகம்" என்கிறாள்!
* பூலோகம்-ன்னு இங்கு வந்து தான் அவதாரம் எடுத்து நம்மோடு உறவாடுகிறான்! இந்திரனின் தேவ லோகத்திலோ, பிரம்மாவின் சத்ய லோகத்திலோ அவன் அவதாரம் எடுத்திருக்கானா? 🙂

அதனால் தான் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்! தேவர்களும், பரமபதம் அடையணும்-ன்னா, மண்ணுலகில் பிறந்து, வினை கழித்து விட்டுத் தான் மோட்சம் செல்ல முடியும்! அது தான் பூலோகத்தின் பெருமை! அவ்ளோ பெருமை, வாஞ்சை நம் மண்ணுலகின் மீது! - "இவ்வுலகம்" அளந்தாய், அடி போற்றி!

 
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி = தென் இலங்கைக்குச் சென்று, செருச் செய்து, செருக்கு அழித்தாயே! உன் "திறல்" போற்றி!

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி = அழியுமாறு, வண்டிச் சக்கரமாய் வந்த சகடாசுரனை உதைத்தாயே! உன் "புகழ்" போற்றி!

கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி = கன்று போல் வந்தான் வத்சா அசுரன்! அங்கே ஆச்சா மரம் என்னும் ஆ-மரமாய் நின்றான் கபித்தாசுரன்! கூட்டணி போட்டுக்கிட்டு வந்தாய்ங்க போல ரெண்டு பேரும்!
Catapult என்னும் உண்டிகோல் ஆடுவது போல், கன்றைச் சுழற்றி, மரத்தின் மேல் வீசினாயே! உன் வீரக் "கழல்" போற்றி!

இளங்கோவடிகளும் இந்த கிராம விளையாட்டில் மனம் பறிகொடுத்துப் பாடுறாரு! கன்று-குணில்-ஆ என்றே பாடுறாரு!
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ?-ன்னு சிலப்பதிகாரத்தில் வரிகள்!

கனியை உதிர்த்தானாம்! அதாச்சும் மரத்தில் இருக்கும் மாங்கா அடிப்பது போல், கன்றை வீசி, மாங்கா அடிச்சானாம் கண்ணன்! இளங்கோவின் கற்பனை அழகு!
சிலப்பதிகாரம் படிச்சிருக்கா போல கோதை! அதை அப்படியே எடுத்து ஆளுகிறாள் தன் பாசுரத்தில்!
 
குணில்-ன்னா வளைந்த மரக்கிளை, மரக்கிளையால் செய்த கருவி! உண்டிகோல்/கயிற்றுத் தடி போலன்னு வச்சிக்குங்களேன்!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி = கோவர்த்தன கிரி என்னும் குன்றையே குடை போல புடிச்சவனே! உன் "குணம்" போற்றி!

கண்ணன் ஒரு சமயப் புரட்சியாளன்! சமயத்தைச் சமூக அக்கறையாகக் கொண்டு சென்றான் கண்ணன்! போலியான ஆசாரங்களுக்கு வளைந்து கொடுக்காத அந்த "குணம்" போற்றி!

வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி = கண்ணன் கையில் வேல் இருக்கா? 
வெட்சி x கரந்தை = ஆநிரைகளைக் கவரும் பகைவருடன் போராடணும்-ல? அதான் முல்லை நிலத்து மாயோன் கையில் "வேல்"! கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு இன்னொரு பாட்டிலும் பாடுறா கோதை!

பழந்தமிழர் வாழ்வில் மாலவனும் வேலவனும் ஒன்னுக்குள்ள ஒன்னு! அவிங்கள பிரிக்க முடியவே முடியாது!
தமிழ்க் கடவுள் மாயோன் கையிலும் "வேல்"! தமிழ்க் கடவுள் முருகன் கையிலும் "வேல்"!
* வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்!
* வென்று, பகை கெடுக்கும் திருக்கை"வேல்" போற்றி! போற்றி!

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் = என்னிக்கும் உன் சேவையாய் இருப்பேன் பெருமாளே! உன் திருத் தொண்டினை ஏத்தி, தமிழ் அர்ச்சனை செய்து, பறை என்னும் நோன்புப் பொருளைப் பெற வந்திருக்கேன்! உன் சேவகமே சேவகம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்!

* அப்பா "பல்லாண்டு பல்லாண்டு"-ன்னு பாடினாரு! பொண்ணு "போற்றி போற்றி"-ன்னு பாடுறா!
* அப்பா பரமனைச் "ஏத்துவர்" பல்லாண்டே-ன்னு பாட, பொண்ணு, சேவகமே "ஏத்திப்" பறை கொள்வாம்-ன்னு பாடுறா!

இன்று யாம் வந்தோம், இரங்கு = இறைவா....இன்று நாங்கள் வந்தோம்! மனம் இரங்கு!
தனியாக, சுயநலமா வரலை! ஒன்னா, அடியார்களா, ஒன்று கூடி வந்திருக்கோம்! உன் சேவையே சேவை-ன்னு சேவிக்க வந்திருக்கோம்!

* இன்று யாம் வந்தோம் இரங்கு! எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
 

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ
இன்று யாம் வந்தோம் இரங்கு!
* அடி போற்றி!
* திறல் போற்றி!
* புகழ் போற்றி!
* கழல் போற்றி!
* குணம் போற்றி!
* வேல் போற்றி!

* செகத்து உதித்தாள் வாழியே!
* செப்பினாள் வாழியே!
* பெண் பிள்ளை வாழியே!
* பின் ஆனாள் வாழியே!

இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைச்சி இருக்கா இந்தப் பொண்ணு! மந்திரமா ஓதுவதற்கு என்றே இப்படி! இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
 

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...