#திருப்பாவை
#கோதைமொழி 23.மார்கழி-
“ *யாம் வந்த காரியம், ஆராய்ந்து அருள்* !
மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!
இந்தப் பாசுரத்தின் முழுமையும், ஆளரிப் பெருமாளை, ஆண்டாள் சேவிக்கிறாள் என்பது ஆச்சார்யர்கள் வாக்கு! கண்ணனைச் சிங்கமாகவே பல இடங்களில் பார்க்கிறாள் கோதை
மாரி மலை முழைஞ்சில் = மழைக்காலத்தின் போது, மலைக் குகையில்
மன்னிக் கிடந்து உறங்கும் = அமைதியாப் படுத்துத் தூங்கும்
"சீரிய" சிங்கம் = "பெருமை" மிக்க சிங்கம்!
அறிவுற்று, தீ விழித்து = திடீர்-ன்னு பசி மிகுதியால் அறிவுற்று, கண்ணில் தீ பறக்க
வேரி மயிர் பொங்க = வேர் மயிர்! வேர்க்-கால் மயிர், ரோமம் எல்லாம் பொங்குதாம்! பொங்கிப் புடைப்பா நிக்குதாம்!
எப் பாடும் பேர்ந்து உதறி = அந்தப் பிடரி மயிரை, ஒரு உலுக்கு உலுக்கி, நிக்குது! கழுத்தைச் சிலுப்பிக்குது! சோம்பல் முரிக்குது!
மூரி நிமிர்ந்து = மூரி-ன்னா முதுகுப் பக்கம் இருக்கும் சின்ன திமில்! அது நிமிருதாம்! மூரி=முரித்தல்-ன்னும் கொள்ளலாம்!
அப்படி முரிச்சி, நிமிர்ந்து நிக்குது! ராசா நிமிர்ந்துட்டாருய்யா! தயார்!!!!!
முழங்கிப் புறப்பட்டு = முழங்கி"ப் புறப்படுது! சிங்கம் "கர்ஜிக்கும்" என்று வடமொழியில் சொல்லுவாங்க! தூய தமிழில் சிங்கம் முழங்கும்-ன்னே இனி சொல்லுங்க!
எப்படி ஆண்டாள் காட்டும் டிஸ்கவரி சேனல்? ஃபோட்டோகிராபி in தமிழ் ஆண்டாளுக்கே சொந்தம்!
போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா = அப்படிச் சிங்க நடை நடந்து வா,உன் சிம்ம கதியில், அத்தனை பேரும் ஈடழியணும்! மனம் பறி கொடுக்கணும்!
பூவைப் பூ வண்ணா = காயாம் பூவைக் போல நீ கருத்த சிங்கம் நீ பொன்னிறச் சிங்கம் இல்லை! கருநிறச் சிங்கம்!
* உன் கோயில் நின்று = உன் கோயில் அரண்மனையில் கம்பீரமா "நின்று"
* இங்ஙனே போந்து = அப்படியே கம்பீரமா "நடந்து" வா!
* கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து = உறுதியா, திம்-முனு இருக்கும் அரியாசனத்தில் வந்து "இருந்து" (அமர்ந்து)
யாம் வந்த காரியம், "ஆராய்ந்து" அருள் = நாங்க உன்னைத் தேடி வந்த காரியங்களை எல்லாம் "ஆராய்ந்து" அருள்!
பேரரசன் ஒருவன் சபைக்கு வந்து அமரும் காட்சியை, அப்படியே கம்பீரத் தமிழில் காட்டுகிறாள் கோதை!
கோதைத் தமிழ் கம்பீரத் தமிழ்!
இறைவன், ஆலயங்களில், பொதுவாக நான்கு கோலங்களில் சேவை சாதிப்பான்!
* நின்றான் = உன் கோயில் "நின்று" => திருவேங்கடம், காஞ்சி, திருமாலிருஞ்சோலை (மதுரை) போன்ற தலங்கள்!
* இருந்தான் (அமர்ந்தான்) = சீரிய சிங்காசனத்து "இருந்து" => திருக்கடிகை (சோளிங்கபுரம்) போன்ற தலங்கள்!
* கிடந்தான் = மன்னிக் "கிடந்து" உறங்கும் => திருவரங்கம் போன்ற தலங்கள்!
* நடந்தான் = இங்ஙனே "போந்து", "புறப்பட்டு" => திருக்கோவிலூர் போன்ற தலங்கள்! (நடந்து, உலகளந்த பெருமாள்)
நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான்! அதையும் இந்தப் பாட்டிலேயே கொண்டாந்து காட்டி விட்டாள் கோதை!
யாம் வந்த "காரியம்" = ஆகா! " *காரியமாத்" தான் இறைவன் கிட்ட போறோமா?* *தப்பில்லை! கண்ட பேரிடம் செல்லாமல், இறைவனிடம் செல்கிறோமே* ! முதல்ல அப்படித் தான் ஆரம்பிக்கும்! ஆனால் பெருமாளின் செளந்தர்யமான கருணையால், கொஞ்ச நாளில் மாறிவிடுவோம்!
பிறகும் "காரியமாத்" தான் போவோம்! என்ன காரியம்? = அவனே காரியம்!
சன்னிதியில் வேண்டிக்கணும்-ன்னு கூடத் தோனாது! நல்லா இருக்கியா பெருமாளே? பாத்து எவ்ளோ நாளாச்சு?-ன்னு பேசத் தான் தோனும்! 🙂
"ஆராய்ந்து" அருள் = பெருமாளே! நாங்க கேட்டதை எல்லாம் கொடுத்துறாதே! நாங்க எதுக்குக் கேக்கறோம்-ன்னு பாதி நேரம் எங்களுக்கே தெரியாது! 🙂
நேத்தெல்லாம் வயித்து வலி; இன்னிக்கு குழந்தை பலாச்சுளை கேக்குது! அம்மா கொடுத்துருவாளா? கொடுக்காமப் போனா அவ அரக்கியா?
அப்படியே அரக்கி-ன்னு குழந்தை திட்டினாலும் கொடுப்பாளா? பெருமாளே, நாங்க உன்னைத் திட்டினாக் கூட நீ சட்டை பண்ணாதே! ஆராய்ந்து அருள்! ஆராய்ந்து அருள்!
* பிரம்மா முதலான பல தெய்வங்களும், தவத்துக்குக் கட்டுப்பட்டு, "ஆராயாமல்" கொடுத்துத் தான் எத்தினை துன்பம்?
* பக்த கோலாகலன் எங்கள் சிவபெருமான் தலையிலேயே ஒருவன் கை வைக்கப் பார்த்தானே!
வேணாம்ப்பா! வேணாம்! நீ ஆராய்ஞ்சே கொடு!
புராண வரலாறுகள் படித்தால் தெரியும்!
தேவர்கள்-அசுரர்கள் ரெண்டு பேருமே பிரம்மாவை நோக்கித் தான் தவம் இருப்பாங்க! ஏன்-னா அவர் தவத்துக்குக் கட்டுப்பட்டவர்! அவர் கிட்ட எப்படியாச்சும் ஏதாச்சும் வாங்கிருவாங்க! தவத்துக்குக் கட்டுப்படாதார் இரண்டே பேரு தான்! = சிவபிரான், பெருமாள்!
பிரம்மாவால் தர முடியாத சில வரங்கள் வேணும்னா, அசுரர்களின் அடுத்த சாய்ஸ் சிவபெருமான் தான்! ஈசன் சோதனைகள் நிறைய கொடுத்தாலும், கோரமான தவத்தில் வென்று விட்டால் அள்ளி அள்ளிக் கொடுப்பவர்!
தன்னையே கொடுத்தாலும் கொடுத்துருவார்! அம்புட்டு கருணை!
இது தன்னலம் புடிச்ச தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நல்லாவே தெரியும்! தேவர்களால் கோரமாத் தவம் பண்ண முடியாது! அசுரர்கள் அதுக்கும் துணிஞ்சவங்க! அவ்ளவு தான் வித்தியாசம்!
ஆனா எங்கேயாச்சும், பெருமாளை நோக்கி யாராவது தவம் செஞ்சதா படிச்சிருக்கீங்களா?
அம்பாளும் கிட்டத்தட்ட அப்படியே! குடும்பப் பழக்கம் போல! :))
தேவன்-அசுரன் யாரும் பெருமாளை நோக்கித் தவம் இருக்க மாட்டான்! துருவன் முதலான பக்தர்கள் மட்டுமே இவரைக் குறித்து தவம் இருப்பார்கள்! அதுவும் "வரம்" வேண்டிய தவமா இருக்காது! "அவனை" வேண்டிய தவமாவே இருக்கும்!
பின்னே? ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்! மனசை ஆராய்ந்து அப்புறமா வரம் கொடுத்தா யாருக்குத் தான் புடிக்கும்?
* எங்களுக்கு நல்லதா?
* எங்க குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நல்லதா?
* எங்க வம்சத்துக்கு நல்லதா?
* எங்க நண்பர்கள்-உறவினர்களுக்கு இதுனால எதுவும் கெடுதல் வராதே?
* சமுதாயத்துக்கு இதுனால தீங்கு விளையாதே?
இது எல்லாத்தையும் ஆராயும் சக்தி எங்களுக்கு இல்லை! அதுனால நீயே ஆராயணும்! நீயே அருளணும்!
ஆராய்ந்து கொடு! அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, உன்னையும் கொடு!
எங்களை ஏல்-கொள், ஏற்றுக் கொள் பெருமாளே!
ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆள்+அரிப் பெருமாள் திருவடிகளே சரணம்! சரணம்!!
ஒத்தகருத்துடன் மாணிக்கவாசகர் திருவாசகம்
" என் வேண்டுதல், உன் விருப்பம்"
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment