Friday, January 3, 2020

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 18.மார்கழி  

  “ *மாதவிப்* 
 *பந்தல்* *மேல்* , *பல் கால் குயிலினங்கள் கூவின* 
 “

உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி, உன் மைத்துனன் பேர் பாடச்,
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!

நேற்றைய பாட்டில் வீட்டில் எல்லாரையும் எழுப்பிய கோதை, முக்கியமான ஒருத்தியை மட்டும் மறந்து விட்டாளோ? நந்தகோபன், யசோதை, பலதேவன், கண்ணன் என்று எல்லாரையும் எழுப்பியவளுக்குத் திடீரென்று ஒரு ஷாக்!
அச்சோ! அவசரத்தில் தவறு செய்து விட்டோமோ? உடனே சுதாரித்து விடுகிறாள்!

முக்கியமான "அந்த" நபரை எழுப்பாமல், கண்ணனை எழுப்புதல் கூடாது அல்லவா?
* "அந்த" நபரை எழுப்பிவிட்டு,
* "அந்த" நபரின் துணைக் கொண்டு கண்ணனை எழுப்பினால்,
* அருள் நிச்சயம், பொருள் நிச்சயம், 

 அறம்-பொருள்-இன்பம் நிச்சயம்! விருப்பமெல்லாம் நிச்சயம்!

பிராட்டியைப் பற்றிக் கொண்டு, அவள் புருஷகாரத்தால், பெருமாளைப் பற்றச் சொல்லிக் கொடுக்கிறாள் கோதை!

அச்சோ, இப்ப என்ன செய்வது? உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-ன்னு ஆல்ரெடி பாடியாச்சே!
அதனால் என்ன? அதுக்குத் தான் என்றும்-உள-தென்தமிழ், என்றும்-உளது-என் தமிழ் இருக்கே! தெய்வத் தமிழ், அது கை கொடுக்கும்!
* உம்பியும் நீயும் உறங்கேல்! ஓர் எம் பாவாய் என்றும் பாடலாம்!
* உம்பியும் நீயும் உறங்கு! ஏல்-ஓர் எம் பாவாய் என்றும் பாடலாம்!

* உறங்கேல் = தூங்காதே!
* உறங்கு-ஏல் = தூங்கு! தூக்கத்தை ஏல் (ஏற்றுக் கொள்)

கண்ணனை எழச் சொல்வது போல், "சொல்லியும் சொல்லாமலும்" விட்டுவிடலாம் அல்லவா? 
நாம எதுக்கு, போயும் போயும் அவனை எழுப்ப வேண்டும்? அவன் தூங்கட்டும்! அவனை, எழுப்ப வேண்டியவள் எழுப்பட்டும்! அப்போ தானாய் எழுந்து விடுவான்! எழுந்தே ஆக வேண்டும்!
இப்போ, நாம் எழுப்ப வேண்டியவளை, எழுப்பத் துவங்குவோம்! நப்பின்னை நங்காய் திருவே, துயில் எழம்மா!!

இது கோதை செய்யும் செல்ல யுத்தி: அறிந்தும் அறியாமலும் = சொல்லியும் சொல்லாமலும் = உறங்கேல், உறங்கு-ஏல்! 🙂

உந்து மத களிற்றன் = மத யானை போல் உந்துபவன், முந்துபவன்!
மதம் பிடித்த யானை நடக்காது! முந்தும்!
அது முந்த முந்த, மதம் வழிந்து வழிந்து உந்தும்!

ஓடாத தோள் வலியன் = எங்கும் ஓடி விடாமல், அவனுடன் என்றும் இருக்கக் கூடிய தோள் வலிமை கொண்டவன்!
பொதுவாச் செல்வம் என்னும் திருமகள் ஒரு இடத்தில் தங்க மாட்டாள்!
ஓடிக் கொண்டே இருப்பாள்! ஒரே விதி விலக்கு: வீர லட்சுமி!
சுத்த வீரனிடம் நிலையாய்த் தங்குவாள்! நம் நந்தகோபன் சுத்த வீரன்!

நந்த கோபன் மருமகளே நப்பின்னாய் = அந்த நந்தகோபனின் மரு+மகளே! நப்பின்னைப் பிராட்டியே! (தாயே, இப்பாவையில், இப் பாவை உன்னை முதன் முதலில் அறிமுகஞ் செய்கின்றேன்! நீயே காப்பு!)

அது என்ன கண்ணனின் மனையாளே-ன்னு பாடலாமே? யசோதையின் மருமகளே-ன்னு பாடலாமே? ஏன் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்?
(இன்றும் வீடுகளில் மருமகள்கள் மாமனாரிடம் ஒத்துப் போய் விடுவர்! மருமகன்கள் மாமியாரிடம் ஒத்துப் போய்விடுவர் தானே!:))
கண்ணன் இன்னும் தலைவன் ஆகவில்லை! நந்தன் தான் இப்போ அங்கே தலைவன்!
தலைவனின் மகள் என்றால் அது தனித்த அடையாளம் அல்லவா! தனித்த பாசம்! தனித்த உரிமை! அதான் நந்தகோபன் மரு+மகளே!

மரு=பரிசு! பெரும் பரிசாய் வந்த மகள்=மரு+மகள்! வாராது வந்த மகள்!
* நப்பின்னைப் பிராட்டியார் குலத்துக்கே பரிசாய் வந்த மரு+மகள்! செல்வ+மகள்!
* கண்ணனின் முழுமுதல் காதல் துணைவி!
* ஆயர்ப் பாடியில் இருக்கும் வரை, அவள் மட்டுமே கண்ணனின் உரிமைக்காரி! அவள் உடலாய் உள்ளமாய் அவன்! அவன் உடலாய் உள்ளமாய் அவள்!

நப்பின்னையை தமிழர் மரபான ஏறு தழுவி வென்றான் கண்ணன்! அதனால் வந்த மரு+மகள், பரிசு+மகள் = நப்பின்னைப் பிராட்டியார்!
அவன், தானே, முதன் முதலில் விரும்பி அடைந்து சொத்து, தமிழ்க் குல தனம் = எங்கள் நப்பின்னை! மற்றையோர் எல்லாம் அவனை நாடிப் பின்னாளில் வந்தனர்! ஆனால் இவனே நாடி, முன்னாளில் பெற்றவள் நப்பின்னை!

நப்பின்னை = தமிழர்களின் தலைமகள்!
 *குறிஞ்சிக்கு ஒரு வள்ளி! முல்லைக்கு ஒரு நப்பின்னை! = இவர்கள் இருவரும் தமிழ்க் குலதனம்* 
!
* நப்பின்னையாள் தமிழ்க் கடவுள் மாயோனின் மனை விளக்கு!
* வள்ளியாள் தமிழ்க் கடவுள் சேயோனின் மனை விளக்கு!

ஆழ்வார்கள் பலரின் ஈர உள்ளத்திலும், கோதையின் உள்ளத்திலும் பெரும் மதிப்பு பெற்றவள் இந்த நப்பின்னை = நல்+பின்னை = நற்+பின்னை!
பின்னை என்று இருப்பதால் இவள் பின்னால் வந்தவள் என்று பொருளாகி விடாது!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு = ஏர் முதலில் தோன்றியது, உலகு பின்னால் தோன்றியது-ன்னா பொருள்? ஏர் முன்னே செல்ல, உலகு பின்னால் செல்லும் அல்லவா!

அதே போல் கண்ணன் முன்னால் செல்ல, அவன் கொள்கையில், அவன் வெற்றிகளில் பின்னே செல்வாள்! அதனால் இவள் பின்னை! அவன் வெற்றிகளுக்கு இவள் பின்னை!
நல்ல+பின்னை=நப்பின்னை! ஆனால் இவளே முன்னை!
கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கும் வரை, அவனை ஆண்ட ஆண்டாள் இவளே!
நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!

கந்தம் கமழும் குழலி, கடை திறவாய் = வாசனைகள் மணக்கும் கூந்தல்காரி! கதவைத் திற!

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் = சேவல்கள் ஒன்றல்ல, ரெண்டல்ல! இப்போ பலதும் விழித்துக் கொண்டு, எல்லாம் இடத்திலும் கூவுகின்றதே! நீ கேட்கலை? பார்க்கலை?

மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண் = மாதவிப் பந்தலில், பல விதமான குயில்களும் கூவுகின்றனவே! நீ கேட்கலை? பார்க்கலை?
* மாதவி = வசந்தமல்லி/செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்! அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு உலகம் முழுதும் மணம் வீ்சுது!

ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
* சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
* சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
* துருவன்/பிரகலாதன் போன்ற பக்த/அன்பு உள்ளங்களும்,
* ஆஞ்சநேயர் முதலான சரணாகத/தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.

* இப்படி அவர்கள் வந்து அமரும் செண்பகக் கொடியானது வேத/வேதாந்த சாகை!
அதில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல், இன்பமாக அமர்ந்து கொண்டு, அவரவர் தமதம அறிவறி வகைவகையாக பகவானைப் பாடிப் பரவும் கோஷப் பந்தல் என்றே குறிக்கிறார் வியாக்யானங்களில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் மாதவிப் பந்தலை இன்றும் காணலாம்! 

பந்து ஆர் விரலி = பூப்பந்துகளைச் செருகி வைத்துக் கொள்ளும் நீட்டு நீட்டு விரல்-டீ ஒனக்கு!

உன் மைத்துனன் பேர் பாட = உன் மைத்துனன் நம்பி மதுசூதனன் பேர் பாடுகிறோமே! கேட்கலை? பார்க்கலை?

அதான் "மச்சான்/மைத்துனன்" என்ற சொல்லையே கோதை பல இடங்களில் புழங்குகிறாள்! கனவில் கூட,"மைத்துனன்" நம்பி மதுசூதனன் கைத்தலம் பற்ற கனாக் கண்டேன் என்று தான் பாடுகிறாள்! 

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப = நப்பின்னை, நங்காய், திருவே! வாம்மா! உன் தாமரைக் கைகளில், வளையோசை கலகல கலவென ஒலிக்குதே!

வந்து திறவாய் மகிழ்ந்து = வா, வந்து கதவைத் திற! நல்லா மகிழ்ச்சியாய் திற!

மகிழ்ச்சி உள்ளே வரணுமா?
உள்ளே வர, உள்ளக் கதவைத் திற!

ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...