Friday, January 3, 2020

கட்டபொம்மன் பிறந்த நாள்

Radhakrishnan KS
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று.

வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.




பிறப்பு: ஜனவரி 3, 1760 

பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: அக்டோபர் 16, 1799

தொழில்: மன்னர், போராட்ட வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

ஆங்கிலேயர்களுடன் மோதல்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,

“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?

“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

போர் 

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.

இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

இறப்பு 

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்கள் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே பிரதிபலித்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், பலருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே நிவைக்கு வருவார். அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.

மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்

கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.
கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவு கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 இல், கட்டபொம்மன் அவர்களுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது.
அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இரு நூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது.
இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.
1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...