Monday, March 30, 2020

#கடந்த1970_வரை_திருமணங்கள் #சொந்த_வீடுகளில்_மகிச்சியாக #நடந்தது.#பகட்டு_பெருமைக்கு #மண்டபம்_தேடியது_கரோனா_அதை #உடைத்து....

#கடந்த1970_வரை_திருமணங்கள் #சொந்த_வீடுகளில்_மகிச்சியாக #நடந்தது.#பகட்டு_பெருமைக்கு #மண்டபம்_தேடியது_கரோனா_அதை #உடைத்து....
————————————————-
திருமணங்கள் திரும்பவும் வீடுகளில் வைரஸ் நோயினால் நடத்துகின்றனர். எனக்கு அறிந்த வரை 1978 -79 வரை வீடுகளிலேயே திருமணங்கள் நடந்தன. எங்கள் பகுதி கிராமங்களில் மணமேடை என்பது நிரந்தரமாக முற்றத்தில் 7க்கு 6 அளவில் கட்டப்பட்டு 2 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும். நான்கு புறமும் சிகப்பும்  வெள்ளையுமாக கோடுகள் அடிக்கப்பட்டிருக்கும். அதை அழகுப்படுத்தி மேடையில் திருமணம் நடத்துவார்கள். பெரிய நீண்ட பந்தல் என இரண்டு நாட்கள் இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள்,
வேலைகள் நடத்துவார்கள். சமையலுக்கு தவசிப் பிள்ளை என்பவர் கிடைப்பது அரிதாக இருக்கும். கோவில்பட்டி, சங்கரன்கோவில், சிவகாசி,இராஜபாளையம் போன்ற நகரில்  இவர்களுக்காக அலைய வேண்டும். இதே போல் சமையல் பாத்திரங்களுக்கும் முகூர்த்த காலத்தில் மெனக்கெட வேண்டும். அரிசி, பருப்பு போன்றவை வீட்டிலேயே இருப்பதால் பிரச்சினை இல்லை. அதிகமான காய்கறி என்றால் கோவில்பட்டியில் இருந்து தான் வாங்கிவர வேண்டும். விடிய விடிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டு சமையல் வேலைகள்  நடந்துக் கொண்டேயிருக்கும். வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் குவிந்து விடுவார்கள். அவர்கள் கிராமத்தில் உள்ள மோட்டார் பம்புகளை திறந்துவிட்டு குளிப்பது வாடிக்கை. ஒவ்வொரு பம்பு செட்டிலும் கோபால் பல்பொடி பொட்டலங்களும் மைசூர் சாண்டல் சோப்புகளும் தயாராக இருக்கும். ஒரு பாட்டிலில் எண்ணெயும் ஊற்றி வைத்து விடுவார்கள். முன்பு என் தந்தையார் காலத்தில் இரண்டு வாரம் திருமண நிகழ்ச்சிகள் நடந்தது 

குளிக்க சாப்பிட,சீட்டு விளையாட என நேரம் போய்க் கொண்டிருக்கும். பெண்கள் குளிப்பதற்கு தயாராக மறைவுகள் கட்டப்பட்டிருக்கும். அது ஒரு பக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கும். இப்படியெல்லாம் என்னுடைய வீட்டில் திருமணம் நடக்கும்போது பார்த்ததுண்டு. அன்றைக்கு உற்றார் உறவினர் நட்புகளிடம் ஆழமான, எதார்த்தமான, பாமரத்தனமான அன்புப்பெருக்கம் இருந்தது.  எப்படியோ அதையெல்லாம் இன்றைக்கும் அசைப் போட்டால் நிலைமை திரும்ப வந்து விடுமா என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது.  காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிவிட்டன. இப்போது திருமணங்கள்மண்டபங்களில் நடக்கிறது. 9 மணி திருமணத்திற்கு 8.30க்கு  நெருங்கிய  உறவினரே வருகின்றார்கள். பத்து  மணிக்கு சாப்பிடாமல் திரும்பி விடுகிறார்கள். இப்படித்தான்  இன்று உறவுகள் இருக்கின்றன. வீடுகளில் நடந்த திருமணத்தில் ஒரு உயிர்ப்பும் ஜீவனும் இருந்தது.  மண்டபங்களில் நடந்த திருமணங்கள் போகிற போக்கில் ஒரு சம்பிரதாயமாக  பகட்டாக ஆடம்பரமாக இருக்கின்றது. திருமணம் என்பது பகட்டில்லாமல் நிறைவாக மகிழ்ச்சியாக உற்றார் உறவினர்கள் அன்பு செலுத்தும் நட்பு வட்டத்தோடு நடந்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

தி. ஜானகிராமனுடைய நாவல்களில் தஞ்சை வட்டார வீடுகளில் நடக்கும் திருமணத்தைப் பற்றி அற்புதமாக சிலாகிப்பார்.கு. ஆழகிரிசாமியும் கரிசல்
மண்  திருமணங்களை  தனது படைப்புகளில் கூறுவார்

உத்தமர் காந்தி வீட்டு திருமணத்தை இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்தேன். நேருவுக்கும் பட்டேலுக்கும் கூட அழைப்பு இல்லாமல் தன் உறவினர் மத்தியில் சிறப்பாக நிறைவாக காந்தியடிகள் நடத்தினார். 

இன்றைக்கு கரானா வைரஸ் என்ற நிர்பந்த நிலையில் வீடுகளில் திருமணங்கள் நடக்கிறது. பழமை திரும்பினாலும் இது தொடருமா என்பது கேள்விக்குறியும் கூட. இன்றைய சமுதாயம் பகட்டு போலி வெட்டி பந்தாக்கள் எதார்த்த நிலை புரியாமல்  தேவையில்லாமல் வாடிக்கையாகிவிட்டது. அன்றைக்கும் இந்த மாதிரி தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் எனபதை மனதில் கொள்ள வேண்டும். வேறு என்ன சொல்வது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...