————————————————
தினமும் காலையில் அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயிற்சியும், வீட்டிற்கு திரும்பியதும் காலை நீட்டிக் கொண்டு தேநீர் அருந்தி தினமணி, தமிழ் இந்து, தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் ஆங்கில ஏடுகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிகள், மிண்ட், எகனாமிக் டைம்ஸ் என அனைத்து தினசரிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குளித்துவிட்டு வெளியே புறப்பட்டால் தான் அன்றைய தினம் முழுமையாக தெரியும். இன்றைக்கு பத்திரிக்கைகளை திருவான்மியூர் சென்று வாங்கிக் கொண்டு வரவேண்டிய சூழல். தினசரி பேப்பர் போடுபவரைக் கேட்டால் பேப்பர் போடும் யாருமே வேலைக்கு வரவில்லை என்று சொல்கிறார். இது ஒரு வித்தியாசமான வாழ்க்கை தான்.
பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்ற பொழுது இந்த மாதிரி தினசரிகள் எளிதில் கிடைக்கும். அது போன்றதொரு தனித்திருக்கும் வாழ்க்கையும் ஒரு வித்தியாசமான போக்காக இருக்கின்றது. கடந்த கால விஷயங்களை அசைப் போடுவதற்கு ஏற்ற வகையில் அமைதியும் ஆழ்ந்த வாசிப்புகள்,பழைய திரைஇசைப் பாடல்களை கேட்டுக் கொண்டு நேரம் நகர்கின்றது. நாம் அடுத்தவர்களுக்காக பாடுபட்டதும் அந்த கடப்பாடு அவர்களை எளிதாக எடுத்துக் கொண்டு நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், நாம் கண்ட நன்றியற்ற ரணங்களை எண்ணும் போது இதுவும் ஒரு சுகமான சுமைகளாகத் தான் உள்ளது.
எப்போதும் மகிழ்ச்சியாகவும் செல்கின்ற பாதை எப்போதும் எளிமையாகவும், ஏதோ பிறந்தோம், வெந்ததை தின்றோம், படுத்தோம், உறங்கினோம், எழுந்தோம் என இல்லாமல் அடுத்தவர்களுக்கு பாடுபட்டோம் அதனால் வந்த எதிர்வினைகள் ஏராளம் என்றாலும் படிப்பினைகளும் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் வேறாயினும் இன்றைக்கு அதை நினைத்துப் பார்க்கும்போது சிறுவயதில் கிராமத்தில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வேகாத வெயிலில் கரிசல் காட்டில் நுங்கு வெட்ட கிளம்பிவிடுவோம். வீட்டில் செருப்பு வாங்கிக் கொடுத்தாலும் அடம்பிடித்து செருப்பில்லாமல் வெறுங்காலில் நடந்து செல்லும் போது இரண்டு கால்களிலும் முள் குத்தி நடக்க முடியாமல் போகும். வீட்டுக்கு வந்தால் இதை எப்படி சொல்வது என்று பயந்துக் கொண்டு வீட்டுக்கு செல்லாமல் எங்கள் கிராமத்தில் முடிதிருத்துபவரிடம் சென்றால் அவர் முள்வாங்கி,ஊக்கினை வைத்து காலில் தைத்த முட்களை ஒவ்வொன்றாக பக்குவமாக எடுப்பார். கால் தோலினை மெல்ல கீறி குத்தியிருக்கும் முள்ளின் நுனியைப் பிடித்து மெல்ல ஆட்டி ஆட்டி எடுக்கும்போது வலியும் இருக்கும் அதனூடே சிறிய நிவாரண சுகமும் கிடைக்கும்.
அதுபோல இப்போது முன்நாளில் ஏற்பட்ட துயரங்களை நினைத்துப் பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. ஒரு மனிதனை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இந்த 21 நாட்கள் இயற்கையாகவே அமைந்துவிட்டது. கடந்து வந்த பாதைகள் இனிமேல் இருக்கின்ற காலம் எஞ்சிய நாட்கள் குறைவு தான் இந்த பூமிப்பந்தில். இனி என்ன செய்யப் போகிறோம், எப்படி இருக்கப் போகிறோம் கடந்த காலத்தில் கிடைத்த ஏமாற்றங்களில் இருந்து நமக்கு கிடைத்த வினைகளைக் கொண்டு நாட்டுக்கும் நமக்கும் பயனளிக்கும் வகையில் எஞ்சிய நாட்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற திட்டமிடுவதற்கான நம்மை சுய பரிசோதனை ஒரு காலக் கட்டம். இது அனைவருக்குமானது.
இன்று காலை Shakespeare யின் The Merchant of Venice படித்த போது மனதை ஈர்த்த வரிகள்......
SHYLOCK:
"If you prick us, do we not bleed?
If you tickle us, do we not laugh?
If you poison us, do we not die?
and if you wrong us, shall we not revenge?". (Act III, scene I).
—William Shakespeare, The Merchant of Venice.
Shakespeare is not for an age but for all the ages.....
-Ben Jonson(1572-1637)
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.03.2020
#ksrposts
#virus #lock_down_21days.
No comments:
Post a Comment