Today -#World_Poetry_Day. #Poet_Iqbal
#பேராசிரியர்_அ_சீநிவாசராகவனின்
#சிந்தனை இதழில் #1949இல் வெளியானபத்தி...
#கவிஞர்_இக்பால்
-ஜனாபா எம்.கே.எச்.ஜமேஷா-
———————————————
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களில் இந்திய மக்கள் கருத்தையும் கவனத்தையும் ஒரு மதுர கானம் கவர்ந்தது. பள்ளிச் சிறுவர்கள் அதைப் பரவசத்தோடு பாடினார்கள். சின்னஞ்சிறுமியர்கள் சிந்தை குளிர, செவி குளிர, அதை இசைத்தார்கள். அரசியல் மேடைகளில் அது ஆர்வத்தோடு பாடப்பட்டது. தேச பக்தர்களின் உள்ளத்தை அது கொள்ளை கொண்டது. அந்தக் கவிதை ஹிந்துஸ்தானிகளின் இதயத்தையே தொட்டுவிட்டதென்று சொல்லலாம். அந்தக் கவிதைதான் இது:-
ஸாரே ஜஹா(ன்)ஸே அச்சா, ஹிந்துஸ்தா(ன்) ஹமாரா!
ஹம், புல்புலே ஹீ(ன்) இஸ்கீ, ஏகுலிஸ்தா(ன்) ஹமாரே!
இதன் பொருள் மிகவும் எளிமையானது. ‘எல்லா நாடுகளிலும் எங்கள் ஹிந்துஸ்தானம் சிறந்தது. அது எங்கள் பூங்கா. நாங்கள் அதிலுள்ள இசை பாடும் பறவைகள்!’ என்பதுதான் இதன் பொருள். இருந்தாலும் இந்த எளிய கீதம், உருது மொழிக்குப் புதிய சுவையைத் தந்தது. ஹிந்துஸ்தானத்திற்குப் புதிய உணர்வைக் கொடுத்தது. பாரத மக்களுக்குப் புதிய ஜீவனைத் தந்தது. கேட்போர் உள்ளங்களைக் களிப்பூட்டி, மயிர் சிலிர்க்கச் செய்து ஹிந்துஸ்தானத்தின் இதயத்தை ஆட்கொண்டது.
இந்த அமர கீதத்தைப் பாடி, அகில பாரதத்தில் அழியாத புகழை நிலைநாட்டியவரே கவிஞர் பெருமான் இக்பால்.
அந்தக் காலம் இந்திய மக்களிடையே நாட்டுப்பற்று நலிந்திருந்த காலம். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு – அவலப்பட்டு – நம்மவர் சுயதர்மத்தை மறந்து – சுதந்திரத்தை இழந்து – சோர்ந்துபோயிருந்த காலம். நம் நாட்டு மக்கள் தங்கள் பண்பாட்டிலும் பாஷைகளிலும் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கலைகளிலும் காவியங்களிலும் நம்பிக்கை இழந்து மேனாட்டு மோகத்தில் வீணாக அகப்பட்டு, பரிபவப்பட்டு பரிதவித்திருந்த காலம். நம்முடைய நாட்டிலும் வீட்டிலும் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, அந்நியரின் பழக்கவழக்கங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர்.
அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவர்களைத் தட்டியெழுப்பி, நம்முடைய பழம்பெரும் பாரத நாட்டிடம் ஆழ்ந்த பற்றும் அதன் எதிர்காலத்தில் அசையாத ந,பிக்கையும் உண்டுபண்ணிற்று இந்தக் கவிதை. விண்ணின் முகட்டைத் தொட்டுக் கொண்டிருக்கும் இமயமும், இமயமாகிய கன்னிக் காதலியை கனிந்து முத்தம் கொஞ்சும் விண்ணும், எக்காலத்தும் வற்றாது வளம் தரும் ஜீவநதிகளும், கோலக்குயில்கள் குரலிசைக்கும் சோலைகளும் இக்பாலின் இதயத்தைக் கவர்ந்து, இசைப் பறவையைப் பொற்சிறகு விரித்துப் பாடிப் பறக்கச் செய்தன. தெவிட்டாத தீஞ்சுவைக் கவிதைகளால் அவர் இன்னிசை பாடினார். இமயத்தின் அளக்கலாகாத் தன்மையையும், அது நம் தோழனாகவும் காவலாளனாகவும் தொண்டாற்றுவதையும் அவர் புகழ்ந்தார்.
பர்பத் ஓ ஸப்ஸே ஊஞ்சா, ஹம்ஸாய ஆஸ்மா(ன்)கா,
ஓ ஸந்த்ரீ ஹமாரா, ஓ பாஸ்பான் ஹமாரா –
இந்தியத் தாயின் மடியிலே தவழும் எண்ணற்ற நதிகளை அவர் வாயார வாழ்த்துகிறார். அவை தரும் வளத்தைக் கண்டு விண்ணின் சோலைகளும் பொறாமைப்படுகின்றனவாம்.
கோதீமே கேல்தீ ஹீ(ன்) ஜிஸ்கே, ஹஜாரோ நதியா(ன்)
குல்ஷன் ஹை ஜிஸ்கே தம்ஸே, ரஷ்கேஜஹா(ன்) ஹமாரா
“கங்கையின் காம்பீரியத்தையும் அதன் கரையில் வளர்ந்த நாகரிகத்தையும்” அவர் போற்றுகிறார். ஏன் அதனுடன் மகிழ்ந்து உரையாடவே செய்கின்றார்.
ஐ ஆபெருதே கங்கா, ஓ தின்ஹை யாததுஜ்கூ?
உத்ரா தெரே கினாரா, ஏகார்வா(ன்) ஹமாரா!
தன் நாட்டின் பெருமையிலும் பழைமையிலும் மனத்தைப் பறிகொடுத்துப் பரவசமடைகிறார் அந்தச் சுதந்திரக் கவி.
”கிரேக்க நாட்டின் பெருமை மங்கிவிட்டது. எகிப்து நாட்டின் எழில் தேய்ந்துவிட்டது. ரோம நாட்டின் வீரம் சிதைந்துவிட்டது. ஆனால், பாரதத் தாயின் புகழ் மட்டும் என்றும் சாஸ்வதமாக நிற்கிறது என்று உள்ளம் பூரிக்கிறார்.
யூனான் வ மிஸ்ர் வரூமா, ஸ்ப்சிட்கயே ஜஹா(ன்)ஸே
அப்தக் மகர்ஹை பாகீ, நாமோ நிஷா(ன்) ஹமாரா
இத்தகைய உயிர்க்கவிதைகளைக் கற்பனை மிகுந்த கர்வத்தோடு – சிருஷ்டி உற்சாகத்தோடு – பாடிய கவிஞர் இக்பால், கி.பி. 1873ஆவது ஆண்டு பிப்ரவரி மாதம் 22ந் தேதி பஞ்சநதிகள் பாயும் பாஞ்சாலத்திலுள்ள சியால்கோட்டில் பிறந்தார். விளையும் பயிரைத்தான் முளையிலேயே அறிந்துகொள்ளலாமே. பள்ளிப் பருவத்திலேயே அவர் புகழ் அரும்பியது. வித்தையில் முதல்வராக வித்தகம் பெற்றார். 5ஆவது வகுப்பில் படிக்கும்பொழுதே அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்றார். அரபி, பார்ஸி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் ஆர்வம் காட்டினார். ‘செகண்டரி’ படிப்பை முடித்து, உயர்தரக் கல்விக்காக லாகூர் கலாசாலையைச் சேர்ந்தார். அங்கு பேராசிரியராக இருந்த ஆங்கிலேய அறிஞர் ஆர்னால்டு என்பவரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பி.ஏ. பரீட்சையிலும் சர்வகலாசாலைக்கே முதல்வராகத் தேறிப் பொற்பதக்கங்களைப் பெற்றார். பின்னர் எம்.ஏ. பரீட்சையிலும் தேறிப் பொன்றாத புகழ் பெற்றார்.
மாணவராக இருக்கும்பொழுதே உர்தூ மொழியில் பாக்களை இயற்றும் வன்மையை அவர் பெற்றிருந்தார். பல அறிஞர்கள், கவிஞர்களின் துணையும் அவருக்குக் கிடைத்தது. தாம் எழுதிய கவிதைகளைத் தக்காணத்தில் அக்காலை சிறந்த கவிஞராகத் திகழ்ந்த ‘தாஹ்’ அவர்களுக்கு அனுப்பித் திருத்திக்கொள்வார். 1905ஆம் ஆண்டு உயர்படிப்பின் நிமித்தம் ஐரோப்பா சென்றார். இந்தப் பிரயாணத்தின் விளைவாகத்தான், துரதிர்ஷ்டவசமாக அவரது போக்கிலும் நோக்கிலும் ஓர் மாறுதல் ஏற்பட்டது.
அவர் இளமைப் பருவத்தில் பாடிய பாடல்கள் தேசபக்தி நிறைந்தவை. பாரத வர்ஷத்தின் வருந்தத்தக்க சூழ்நிலையும் மக்களின் மிடியும் சோம்பலும் அவரது நெஞ்சத்தை வருத்தின. நெஞ்சு குமுறிச் சிதறிப் பல கவிக்கனல்களைக் கொட்டினார். அவரது சொற்கள் இரத்தத் துடிப்புடன் கொந்தளித்துக் குமிழியிட்டுத் துடித்து எழுச்சி கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டு அமரகவி பாரதி பாடினார் அல்லவா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்…..
என்று. இதே ஏக்கக் குரலை – தாபக் குரலை – இக்பாலின் கவிதைகளிலும் கேட்கிறோம்.
ருலாதாஹை தேரா நஜாரா, ஹாய் ஹிந்துஸ்தா(ன்) முஜ்கூ
கே, இப்ரத் ஹிஸ் ஹை தேரா, பிஸானா ஸப் பிஸோ னோமே
அவரது பாடல் தொகுதிகளான நயாஷ்வாலா, தரானா இ ஹிந்த், ஹிந்துஸ்தான்கே பச்சோ(ன்)கா கீத் முதலியவை அவரது நாட்டுப்பற்றையும் சுதந்திர தாகத்தையும் பிரதிபலிக்கின்றன. உணர்ச்சி புரட்சியாக மாறி சொற்கள் புதுவர்ணம் பெற்றுக் கலை நிறைந்து – இசை நிறைந்து – துள்ளித் துடித்துக்கொண்டு வருகின்றன. பந்தமற்ற அவர் உள்ளம், பளிங்காகிப் பண்பாகி இயற்கை இன்பப் பெருக்காகிப் பாடல்களாகப் பரிணமிக்கின்றன. உதாரணமாக ஒரு கவிதையைப் பார்ப்போம். ‘இந்துஸ்தானம் என் நாடு; ஹிந்துஸ்தான் என் நாடு’ என்று அவர் நர்த்தனமாடுகிறார். எத்தகைய ஹிந்துஸ்தானம்? “சிஸ்தி என்ற தத்துவஞானி, ஆண்டவனின் அறிவைப் பரப்பிய ஹிந்துஸ்தானம். நானக் என்ற மகாத்மா, மத ஒற்றுமையை வளர்த்த குலிஸ்தானம். தாத்தாரியர் விரும்பி வந்து வாழ்ந்த வளநாடு. அராபியர் அண்டிவந்து பிழைத்த அற்புத நாடு. அதுவே, என் பொன்னாடு; அதுவே என் பொன்னாடு.”
சிஸ்தினே ஜிஸ் ஜமீன்மே பைஹாமே ஹக் ஸுனாயா?
நானக்னே ஜிஸ் ஜமீன்மே வஹ்தத்கா கீத் காயா?
தாத்தாரி யோனே ஜிஸ்கோ அப்னா வதன் பனாயா?
ஜிஸ்னே ஹிஜாஸியோ(ன்)ஸே தஸ்தே அரப் ஷுடாயா?
மேரா வத்தன் வஹீ(ன்)ஹை மேரா வதன் வஹீ(ன்)ஹை
பாரத புத்திரர்கள் தங்களுள் மத வேறுபாடு கொண்டு, மாச்சரியத்தை வளர்த்தது, அவரது இளநெஞ்சை உறுத்திற்று. புண்பட்ட அவரது உள்ளத்திலிருந்து பண்பட்ட பாக்கள் வெளிவந்தன. ‘மதங்களின் அடிப்படை, வேற்றுமையை வளர்ப்பதல்ல; ஒற்றுமையை வளர்ப்பதே’ என்று அவர் இடித்துரைத்தார்.
மஸ்ஹப் நஹீ ஸிக்காதா, ஆபஸ்மே பைர் ரக்னா
ஹிந்த்ஹீ(ன்)ஹம், வத்தன் ஹை ஹிந்துஸ்தான் ஹமாரா.
இந்தியத் தேசியத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊன்றுகோல் தந்த இந்தக் கவிக்குயிலின் குரல், பின்னாளில் வேறு குரலாக மாறித் தனிமையுணர்ச்சியையும் வேற்றுமையையும் வளர்த்தது! பாரத நாட்டின் துரதிர்ஷ்டமே அது. எனினும், அவரது உணர்ச்சி மிகுந்த, உத்வேகம் மிகுந்த தேசியக் குரல், பாரத நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிய சங்கநாதக் குரல் என்பதில் ஐயமில்லை.
#ksrpost
21-3-2020.
No comments:
Post a Comment