Friday, March 27, 2020

#ஒரிசா_கவர்னராகவும்_சென்னை #ராஜதானி_அன்றைய_தமிழகத்தின் #ஒரிசா_எல்லை_வரை_முதல்வராக #இருந்த_நேர்மையான_பி_எஸ. #குமாராசாமி ராஜா



————————————————-
ஒரிசா கவர்னராகவும் சென்னை ராஜதானி அன்றைய தமிழகத்தின் ஒரிசா எல்லை வரை முதல்வராக இருந்த பி.எஸ. குமாராசாமி ராஜா நேர்மையானவர். தன் சொத்துக்களை அப்படியே பொது நலனுக்காக அர்பணித்தவர். 




பண்டித நேருவே வேண்டி விரும்பி முதல்வராக்கினார், ஆனால் சிலருடைய கயமைத்தனத்தால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வியுற்றார். மீண்டும் முதல்வர் ஆக பதியேற்றுக் கொள்ளுங்கள் என்று நேரு சொன்ன போது “நான் தோற்றுவிட்டேன், பதவி வேண்டாம்” என மறுத்துவிட்டார். நான் எங்கள் ஊரில் முதல்வர் பதவி தேடி வந்த போது கூட எங்களுடைய ராஜபாளையத்தில் நூல்நிலையம் அமைக்கின்ற பணியில் இருக்கின்றோம். அதனால் இப்போது பதவி ஏற்க வாய்ப்பில்லை என்று தட்டிக்கழித்த ஒருவரைப் பார்க்க முடியுமா? ஆனால் அவர் பெயரில் பழைய கிரீன்வேஸ் சாலை, குமாரசாமி ராஜா சாலை என்று அழைக்கப்பட்டும் அவர் பெயரைச் சொல்லாமல் பசுமைவழிச் சாலை என்றுதான் பத்திரிக்கைகள் அமைச்சரகள் தங்கியிருக்கின்ற சாலையினை குறிப்பிடுகிறார்கள். 

அவரது இளமைக் காலம் குறித்து இராஜபாளையம் - ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தைக் குறித்து அவர் எழுதிய நூல் அல்லையன்ஸ் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ளார். அதை நேற்று மாலை படித்த பொழுது அன்றைய தேர்தல் முறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எப்படி இருந்தது என்பதை நினைவுப் படுத்தியது.
———

‘’என் வாழ்க்கையில் முதல் முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். ஆனால் இக்காலத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா? எனினும் அக்காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தனவென்றே சொல்லலாம்.
அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்‌ஷன்தான் முக்கியமானது. அப்போது எவ்வளவு தேடிப் பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள். ஆனாலும் எலெக்‌ஷன் என்றால் ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.
அப்போது முனிசிபல் ஆபீஸ் ஸ்ரீ ஆண்டாள் சன்னதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபீசுக்கு பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் தங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஓட்டுப் போடுகிறவர்களை வேட்பாளர்கள் தங்கள் தங்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலேயோ கூட்டிக்கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் இடத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.
அங்கே ஒரு கூடையில் புளியோதரை; மற்றொரு கூடையில் தோசை; இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள். கல்யான அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதேபோல ஓட்டுப் போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாய் இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களைக் கொடுத்து உபசாரம் செய்வது. வந்தவர்கள் முதலில் புளியோதரை சாப்பிட்டுவிட்டுத்தான் ஓட்டுப் போட போவார்கள்.
புளியோதரை பொங்கல் தோசை இவைகளைச் சாப்பிட்ட பிறகுதான் ஓட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது! ஆனால் நடைமுறையில் அப்படித்தான்.
இதைத் தெரிந்துகொள்ளாமல் யாராவது நேராகப் போய் ஓட்டுப் போட்டுவிட்டால், அப்புறம் புளியோதரை தோசை ஒன்றையும் அவர் காண முடியாது! ஓட்டுப் போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார்தான் யார்? திக்கற்ற அநாதை போல் வீடு திரும்ப வேண்டியதுதனே!
ஆனால் ஒன்று: ஒரு மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு மற்றொரு மண்டபக்காரருக்கு ஓட்டுப் போடுவது அக்காலத்தில் நடந்திருக்காதென்றே நினைக்கிறேன். எனென்றால் இக்காலம் மாதிரி எலெக்‌ஷன் சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லாத காலம் அல்லவா அது?
முனிசிபல் எலெக்‌ஷன் மாதிரி அவ்வளவு ஆர்ப்பாட்டமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் குறைந்த அளவில் நடக்கும் எலெக்‌ஷன் இரண்டு உண்டு. அவைதான் (1) ஸ்ரீவில்லிபுத்தூர் சாஸ்வத நிதி (பெர்மனெண்டு பண்டு) ஆபீஸ் எலெக்‌ஷன்; (2) இந்து ஹை ஸ்கூல் கமிட்டி எலெக்‌ஷன்.
எலெக்‌ஷன் ஆன சில நாள் வரை வேட்பாளர்களின் வெற்றியையும் தோல்வியையும் பற்றித்தான் பள்ளி மாணவர்களும் மற்றவர்களும் பேசிக் கொண்டிருப்பார்கள்.’’

-நன்றி/ கனம் பி.எஸ்.குமாரசாமிராஜா எழுதிய ‘இளமை நினைவுகள்’
ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ்)
திரு ஶ்ரீநிவாஸன்.

 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...