Sunday, March 22, 2020

புகழ் ஈட்டுங்கள்! - கவிஞர் மீரா


வரலாற்றைப் பாருங்கள்; கீர்த்தி மிக்க
​வளநாட்டுக் குரியவர்கள் நீங்கள்! இன்று
தரங்கெட்டு மரங்கெட்டு மாட்சி கெட்டுத்
​தாழ்ந்ததையும் எண்ணுங்கள்; பின்ன ரேனும்
அரமிருக்கும் கூர்மையினை அறிவில் தேக்கி
​அனற்காற்றை மூச்சாக்கிப் பருத்த தோளில்
உரம்ஏற்றி வாருங்கள்; ‘தமிழர் யாம்’ என்(று)
​உலகுக்குக் கூறுங்கள்; புகழ் ஈட்டுங்கள்!
இலக்கியத்தின் பூந்தோட்டம் நீங்கள்! வீரம்
​இசைபாடி நடமாடும் புறநா னூற்றின்
நிலையங்கள்; நீர்ச்சுழலை எதிர்த்துத் தள்ளி
​நீச்சலிடும் சுறாமீன்கள்; எருமைக் கூட்டம்
கலக்கிவிட்ட குளம்போல உங்கள் நாட்டின்
​கவின்கெட்டுப் போவதுவோ? சாதி வைத்துக்
குலத்துக்கோர் நீதியுரை கூறும் நூலைக்
​கொளுத்துங்கள் தீயிட்டுப், புகழ் ஈட்டுங்கள்!
பண்பாட்டின் கோயில்கள் நீங்கள்! சோழப்
பத்தினிக்குச் சிலைவைத்துப் போற்றி என்றும்
கண்போலக் காத்தீர்கள் கற்பை; அந்தக்
கற்பைஓர் கடைவீதிப் பொருளாய் மக்கள்
எண்ணச்செய் யும்கதைகள் பெருக விட்டே
இருப்பதுவோ இருட்குகையில்? தமிழ்வி ளக்கை
மண்வீட்டில் எரியவிட்ட காலம் போதும்;
மலைமேட்டில் ஏற்றுங்கள்; புகழ் ஈட்டுங்கள்!
அள்ளக்கை குறையாத செல்வத் திற்கே
​அதிபதிகள், நிதி பதிகள் நீங்கள்! இன்று
பள்ளத்தில் நிற்கின்ற கேட்டை எண்ணிப்
​பாருங்கள்; தடையுடைத்துப் பொங்கிப் பாயும்
வெள்ளத்தின் வேகத்தைப் போல்எ ழுந்து
​வீறுகொண்டு புறப்படுங்கள்; அநீதி யாவும்
உள்ளத்தின் எழுச்சிக்கே உணவாய் ஆகும்;
​ஒற்றுமைப்பண் பாடுங்கள்; புகழ் ஈட்டுங்கள்!

- மீரா

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...