#சில_நீதிபதிகள்
#சில_நினைவுகள்.......
————————————————-
#நீதித்துறையில்_நினைவுக்கு_வரும்_
#சில_நீதிபதிகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபோது நீதிபதிகள் மகாராஜன்சி,.ஜே.ஆர்.பால், என்.எஸ். ராமசாமி, வரதராஜன் (பிற்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்). ஏ.டி.கோசல், நைனார் சுந்தரம், டி.சத்யதேவ், சாமிக்கண்ணு, கே.வெங்கடசாமி, எம்.சீனிவாசன், அப்துல் ஹாடி போன்ற நீதிபதிகளுடைய நேர்மையான அணுகுமுறையை 1970 - 1980 காலகட்டங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
சி.ஜே.ஆர்.பால் வழக்கறிஞர்களால் மறக்க முடியாத நீதிபதி. வழக்குகளை விசாரிக்கும்போது இவரது நேர்மையான அணுகுமுறையை மறக்க முடியாது. இவர் ஓய்வு பெற்ற பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் வேல் காணவில்லை. சுப்பிரமணிய பிள்ளை படுகொலையை விசாரிக்கும் ஒருநபர் கமிஷனில் நீதிபதியாக இருந்து விசாரித்தார். திரு. பழ. நெடுமாறன் சார்பில் இந்த கமிஷனில் நான் ஆஜரானதெல்லாம் உண்டு. தி.மு.க சார்பில் வழக்கறிஞர் இரணியல் ரவியும் ஆஜரானார். இவரைப் போலவே நீதிபதி என்.எஸ். ராமசாமி, வரதராஜன் (பிற்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்). ஏ.டி. கோசல், கே.வெங்கடசாமி, அப்துல் ஹாடி என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நினைவுக்கு வருகின்றனர்.
நீதிபதி நைனார் சுந்தரம் பிறவியில் கிறிஸ்தவராகவும் திருமணமாகாமலும் வாழ்ந்தார். நேரம் தவறாமல் தன் கடமைகளை நீதிமன்றத்தில் ஆற்றக்கூடியவர். எளிமையான பேச்சுக் குரல். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு எதிரே அவர் வீடு. நீதிபதியாக இருந்தாலும் பேருந்திலும் ஆட்டோவிலும் சென்றால்தான் நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்று சொல்லி சாதாரண மனிதர்களைப் போல சென்னை நகரில் பயணம் செய்வது அவரது வாடிக்கை.
நீதிபதி சாமிக்கண்ணு இறுதி வரை சாதாரண தனது பூர்விக வீடான சைதாப்பேட்டை ஆலந்தூர் வீட்டில்தான் வசித்தார். அரசு குடியிருப்புக்கு அவர் போக விரும்பவில்லை. அன்றாட வீட்டுச் செலவுக்கு 100, 200 தன் மனைவியிடம் கொடுத்து அரிசி, காய்கறிகள் வாங்கிக்கொள்ளச் சொல்வதுதான் இவரது எளிய வாடிக்கை. அம்பாசிடர் காரை அரசு கொடுத்தும் தனது பழைய ஸ்டாண்டர்டு காரிலேயே சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
கடந்த 1997 காலகட்டங்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை எதிர்த்து திரு.வைகோ வழக்குத் தொடுத்தபோது அவருக்கு வழக்கறிஞர்களாக நானும் தராசு கிருஷ்ணசாமியும், தேவதாஸும் இருந்தோம். அந்த வழக்கு நீதிபதி இ.பத்மநாபன் உள்ளடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது நான் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தால் அந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டேன். என்னுடைய நெருங்கிய சக வழக்கறிஞர்கள் பால் வசந்தகுமார், கே.பி.கே.வாசுகி, எம்.ஜெயச்சந்திரன், டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு போன்றோர் நீதிபதிகளான பின்பு எங்களிடையே நட்போ, தொடர்போ தொடரவில்லை. அதுவே நியாயமான போக்கு என்று எங்கள் நட்பு வட்டாரம் காலத்தால் உணர்த்தியது.
•உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலி மீது சில குற்றச்சாட்டுகள் கூட எழுந்தது உண்டு. ஆனால் அவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனைக்கு (சிஎம்சி) வேலூர் வரும்போதெல்லாம், தான் ஒரு நீதிபதி என்றே காட்டிக்கொள்ளாமல் சாதாரண விடுதியில் தங்கி, தான் நீதிபதி என்று கூட சொல்லி வைத்தியம் பார்க்காமல், சாதாரண மனிதர் என்ற முறையில் சிறப்பு கவனிப்பு இல்லாமல், ஏற்கனவே 3 நாட்கள் வேலூரில் தங்கி மேற்கு வங்கத்துக்குத் திரும்புவார்.
•நீதிபதி டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால் `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 6 வாரம் விடுமுறை எடுத்தார். அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!
•உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். தவற்றை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். ``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். '``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். உடனே அந்த மாஜிஸ்திரேட் ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். ``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். ``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். மகாஜன் வெளியில் வந்தார்!மெகர் சந்த் மகாஜன்.
•குரு பிரசன்ன சிங். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!
•ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தது, நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் நீதிபதி குன்ஹாவுக்கு நன்றாகவே தெரியும். அப்படியான சூழலில் சுதந்திர இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்
•நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.
•மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். ``என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள். உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.
• சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் சுப்பிரமணிய ஐயர். இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.
இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஜனாதிபதிக்கே கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி.
சில நீதிபதிகள் மீது குறச்சாட்டுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்ததும் உண்டு. ஊழல், தரமற்ற அவர்களது நூல்களைப் பிரசுரம் செய்வது, வேறு விதமான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் அகில இந்திய அளவில் எழுந்ததெல்லாம் இன்றைக்கும் செய்திகளாக உள்ளன. ஆனால் மனிதநேய, நேர்மையான நீதிபதிகளை என்றும் நாடு போற்றும்.
#சில_நீதிபதிகள்
#சில_நினைவுகள.......
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.03.2020.
#ksrpost
No comments:
Post a Comment