Friday, November 27, 2020

 

#பாடசாலைகளின்_நாயகன்
#கோ_வெங்கடாசலபதி (#அரசின்_ஊரக_வளர்ச்சித்துறை #கமிஷனர்)
————————————————









#உத்தமர்_காந்தியின்_சபர்மதி #ஆஸ்ரமம்_போல கட்டட அமைப்போடு அன்றைய சென்னை மாநில அரசால் தென் மாவட்டங்களில் பல தொடக்கப் பள்ளிகள் ஓடு வேய்ந்த சாய்ப்போடு (தாழ்வாரம்),கடந்த 1950-1965 வரை துவங்கப்பட்ட கட்டிடங்களை இன்று பார்க்கலாம். அதை அதிகமாகத் துவங்கக் காரணமாக இருந்தவர்
கோ. வெங்கடாசலபதி (அரசின் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர்)ஆவார்.

இன்றைக்கும் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் (தேனி, திண்டுக்கல்), அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் (விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்), ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் (திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி), கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளில் இம்மாதிரியான பள்ளிக் கட்டடங்களின் திறப்பு விழாக் கரு நிற பலகையில் பல இடங்களில் இவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

காந்தியின் செயலாளராக இருந்த குமரப்பாவுக்கு நெருக்கமானவர் வெங்கடாசலபதி. கிராமகளின் வளர்ச்சி, சர்வோதயா பூமிதான இயக்கத்திலும் என பங்கேற்றவர். வெங்கடாசலபதி பிறந்து வாழ்ந்த கல்லுப்பட்டி,பேரையூர் பகுதியில் கேட்டால் கூட அவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சினிமா நடிகர்களைக் கேட்டால் அவர்களுக்குத் தெரிகின்றது.

என்ன செய்ய தியாக சீலர்களை நினைக்க மக்களுக்கு விருப்பம் இல்லை. பிறகு எப்படி அமைப்பு ரீதியாக நாடு அனைத்து வகையிலும் மேம்படும்?

கோ.வெங்கடாசலபதி பற்றிய குறிப்புகள் வெளிவருமாறு;

கோ. வெங்கடாசலபதி (சூலை 30, 1909 - சூன் 13, 1969) மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகேயுள்ள கோபி நாயக்கன் பட்டியில் பிறந்தார்.

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 1931 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் கைதானார். தனது ஊரில் கிராம ஊழியர் சங்கத்தை ஏற்படுத்தினார். அதை அவரது நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரரருமான காமராஜர் துவக்கி வைத்தார். 1937 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா போர்டு துணைத் தலைவரானார்.

மதுரை மாவட்டம் தி.கல்லுப்பட்டிக்கு அருகில் உள்ளது கோபிநாயக்கன்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமம் பல விடுதலைப் போராட்ட வீரர்களையும், காந்திய சிந்தனையாளர்களையும் தமிழ்நாட்டுக்குத்தந்த பெருமையுடைய கிராமம்.

தி.கல்லுப்பட்டியில் ‘காந்தி நிகேதனம்’ ஆரம்பித்த காந்தியத் தொண்டர் கோ.வெங்கடாசலபதி பிறந்த கிராமம் இதுதான். காந்தியாரின் கிராம வளர்ச்சி, ஜே.சி.குமாரப்பாவின் கிராமப் பொருளாதாரச் சிந்தனை இரண்டையும் ஒருங்கே பெற்றவர் கோ.வெங்கடாசலபதி அவர்கள். இவர் முன்னாள் முதல்வர் கு.காமராஜ் அவர்களின் நெருக்கமான நண்பரும்கூட. இவரது முயற்சியால் தென் தமிழகத்தில் பல கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவர் கோபிநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராகவும் இருந்துள்ளார்.

பாப்பையாபுரம், சுப்புலாபுரம், அரசபட்டி, கரையாம்பட்டி, காவெட்நாயக்கன்பட்டி, கூவலப்புரம், பாரைப்பட்டி, அழகாபுரி, செவலூர், குமிளங்குளம், நடையனேரி, முருகனேரி, சிலார்பட்டி, நரிக்குடி, தாதன் குளம், சின்னப்பரெட்டிப்பட்டி போன்ற கோபிநாயக்கன்பட்டியிலிருந்து சுமார் 5 மைல் தொலைவுக்குள் உள்ள அனைத்து கிராமக் குழந்தைகளும் இந்தப்பள்ளியில்தான் வந்து படித்தார்கள்.

தே.கல்லுப்பட்டியில் 1940 ல் காந்தி நிகேதன் ஆசிரமத்தைத் துவக்கினார்.
காந்தியின் அறிவுரைப்படி 1946 ல் ஆதாரக் கல்வி பள்ளி துவக்கப்பட்டது. பின் 1953ல் உயர் ஆதாரக் கல்வி பள்ளியாக உயர்ந்தது.
காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா ஓய்வுக் காலத்தில் ஆசிரமம் வந்தார். அவர் சட்டப்பூர்வமாக 1956 ல் ஆசிரமத்தை பதிவு செய்து முதல் தலைவரானார்.
தமிழக முதல்வராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், அரசின் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனராக கோ.வெங்கடாசலபதி நியமித்தார். கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக "பிர்கா வளர்ச்சி' எனும் திட்டத்தை செயல்படுத்தினார்.
சென்னை கிராமப் பஞ்சாயத்து சட்டத்தை (1950) நடைமுறைப்படுத்துதல், பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கிய சென்னை மாநில பஞ்சாயத்துச் சட்டம் உருவாவதிலும் (1958) முக்கியப் பங்கு வகித்தார்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பூமிதான இயக்க நிறுவனர் வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளாணி, பக்தவச்சலம் மற்றும் பல்வேறு தலைவர்கள், கவர்னர்கள் இவர் தொடக்கிய காந்திநிகேதன் ஆசிரமத்திற்கு வந்துள்ளனர்.
இந்த ஆசிரமத்தின் மூலம் கிராமங்களில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு கதர், தேனீ வளர்ப்பு, மட்பாண்டம், பனை வெல்லம், கைக்குத்தல் அரிசி, கைக்காகிதம், தோல் உற்பத்தி உட்பட பல தொழில்கள் உருவாக்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது...

#கோ_வெங்கடாசலபதி
#G_Venkatachalapathi
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-06-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்