Sunday, April 16, 2023

#குறுந்தொகை- #கொங்குதேர் வாழ்க்கை

#குறுந்தொகை- #கொங்குதேர் வாழ்க்கை
—————————————
(படிக்கவும், பார்வையில் பட்ட பதிவு. பதிவாளர் யார் என தெரியவில்லை)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே --குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்

நானூறு (401?) பாடல்களைக் கொண்ட நான்கு முதல் எட்டு அடிகளாலான குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகிய இப்பாடல் திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது.இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப் படுகிறது.

கொங்கு- பூவின் மகரந்தம்
தேர்-         தேர்நெடுக்கும்
வாழ்க்கை-வாழும்
அஞ்சிறைத்தும்பி-உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல்-மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்-கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்

செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம்
கொடுத்தனுப்பிய பாடல்

கருத்து:மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில்  என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு !

திருவிளையாடற் புராணத்திலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப் படுகிறது

தென்னவன் குல தெய்வமாகிய
மன்னர் கொங்குதேர் வாழ்க்கை இன்றமிழ்
சொன்னலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்

52 ஆம் படலம் 88 ஆம் பாடல்

குறிஞ்சித் திணைக்குரிய கூடலும் கூடுதல் நிமித்தம் பொருள்படும் அற்புதப் பாடல்.
இள வேனிற்காலத்தில் தும்பியினம் மகரந்தங்களைத் தேடும் எனும் செய்தியும் காணப் படுகிறது.பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா என்ற விவாத்ம் பாண்டியன் அவையில் நடக்க வழி வகுக்கிறது.இன்றைய கவிஞர்களைப் போல் அல்லாமல் நக்கீரன் குற்றம் குற்றமே என்கிறான்

கற்றைவார்ச் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்ட
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்று நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்  --106 ஆம் பாடல்
(உம்பரார் பதி-இந்திரன்)
இயற்கையுடன் இணைந்தது  பழந்தமிழர் வாழ்வு.

இன்று பார்வையில் பட்ட பதிவு


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...