Tuesday, April 25, 2023

#நடிகை தேவிகா-80

#நடிகை தேவிகா-80
———————————
நான் இப்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் (ECR) வசிக்கும் வீட்டு மனை நடிகை தேவிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து  வாங்கியது. தேவிகாவுக்கு  இன்றைக்கு வயது 80. கவிஞர் கண்ணதாசனுக்கு உற்ற சகோதரியாக இருந்தார். கவிஞர் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். 

அவர் என்னை ‘தம்பு-தம்பி’ என்று அழைப்பதும் உண்டு. அவர் வீட்டுக்கு பலமுறை என்னை அழைத்து, எனக்கு விருந்து அளித்ததும் உண்டு. அரசியலில் நான் முக்கிய இடத்துக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பியவர்களில் சகோதரி தேவிகாவும் ஒருவர். அவருக்கு இன்றைக்கு பிறந்த நாள். சகோதர பாசத்தோடு அவரோடு பழகிய நினைவுகள் இன்றைக்கும் மனதில் நிழலாடுகின்றன.




நடிகை தேவிகா அவர்களின் 80 வது பிறந்த தினம். (ஏப்ரல்-25--1943--மே 2--2002)

தென்னிந்திய திரைப்பட நடிகையாகிய இவர் தமிழ், தெலுங்கு உட்பட ஏறத்தாழ 150 படங்களில் நடித்துள்ளார்.

இவரது பூர்வீகம் ஆந்திரா, இயற்பெயர் பிரமீளா. இவர் அன்றைய முன்னணி கதாநாயர்கள், எம். ஜி ஆர்., சிவாஜி ஜெமினி ஆகியோருடனும், மற்று முத்துராமன், எஸ். எஸ் ராஜேந்திரன் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவர் முதல் முதலாக எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து முதலாளி என்ற படத்தில்கதாநாயகியாக நடித்தார். எம் .ஜி ஆர் அவர்களுடன் ஒரே ஒரு படத்தில் ஆனந்த ஜோதியில் மட்டும் நடித்தார். சிவாஜீயுடன் நடித்த வரலாற்று படமான கர்ணன் மிகவும் பேசப்பட்டது., குலமகள் ராதை, பலே பாண்டியா, ஆண்டவன் கட்டளை, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினியுடன் சுமைதாங்கி, ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த வெற்றிப்படமாகும். இதயத்தில் நீ, வாழ்க்கைப்படகு, முத்துராமனுடன் நெஞ்சில் ஓர் ஆலயம், மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை, வானம்பாடி, மிக சிறந்த படங்களாகும்.. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படியும் ஒரு பெண் இவர் நடித்த கடைசி படமாகும்.

இவர் நடித்த பட
பிரபலமான பாடல்கள்

அமைதியான நதியிலே

கங்கைக்கரை தோட்டம்

சொன்னது நீதானா

நினைக்க தெரிந்த மனமே

நெஞ்சம் மறப்பதில்லை

உறவு என்றொரு சொல் இருந்தால்

முத்தான முத்தல்லவோ

கண்கள் எங்கே

அழகே வா

வாழ நினைத்தால் வாழலாம்

அத்திக்காய் காய்
என பல….

****
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன் குமுதம் பத்திரிகையில்
'இந்த வாரம் சந்தித்தேன் ' என்ற கட்டுரையிருந்தது.
தேவிகா...
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
“பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்.

****

ஆள் அரவமற்ற ரோட்டில் அம்மாவும் மகளும் காருக்குள்ளே!  .அது நடுநிசி நேரம் இரவு பனிரெண்டைத் தாண்டிவிட்டது.சுற்றிலும் கும்மிருட்டு.சேலம் ஷூட்டிங் முடிந்து வரும் வழியில் கார் உளுந்தூர் பேட்டை அருகே  பிரேக் டவுன்.டிரைவரும் புரடக்ஷன் மேனேஜரும் அலை பாய்கிறார்கள். அம்மாவும் மகளும் உள்ளே போரடிக்காமல் இருக்க  ஏதேதோ பேசுகிறார்கள்.சட்டென மௌனம்.நடிகை யோசனையில் மூழ்கிப்போகிறார்.என்ன செய்கிறோம்?. எதுக்கு இந்த வாழ்க்கை?. அவரது  உள்ளத்தில் எழுகிறது கேள்வி.சினிமாவில் நுழையணும்னு நானா கேட்டேன்?. விதி இழுத்துக்கொண்டு வந்து இப்போது அத்துவானக் காட்டில்  விட்டிருக்கிறது.சிலரது வாழ்க்கை இப்படித் தான்.நாமாக எதையும் முடிவு செய்வதில்லை.எல்லாம் இந்த  பாட்டி செய்த வேலை!.. அம்மா சமாதானப்படுத்த மகளின் நினைவுகள் மெல்ல மெல்ல  பின்னோக்கிப் போகிறது.நாமும் அந்த நடுநிசியில் நடிகையை கொஞ்சம் நெருங்கி கவனிக்க!.. அட! .. நம்ம தேவிகா!.. அவருக்கு இன்று  பிறந்த நாள் என்கிறது நமது இசைக் குழு!..

காரணம் தெரியாது!..சில முகங்களை பார்த்த மாத்திரத்திலேயே நமக்குப் பிடித்துப் போய்விடும்.அதிலொரு முகம் தேவிகா!.. விரிந்த திரையில் அந்த பரந்த முகத்தைப் பார்க்கும்போதே ஒரு பரவசம்.!.. பட்டாம் பூச்சியாய் சதா படபடக்கும் கண்கள்.எப்போதும் ஈரமாகவே செதுக்கி வைத்த அதரங்கள்.எடுப்பான நாசி துடுக்கான பேச்சில் சட்டென நம்மை கட்டிப்போடும் அற்புதமான நடிகை.அறுபதுகளின் இளம் வாலிபர்களை தூங்கவிடாமல் செய்த பாவத்துக்குச் சொந்தக்காரர்.சோகமானாலும் சுகமானாலும் தனக்கென அதிலொரு தனி முத்திரை!..இந்த ஆந்திரப் பொண்ணு எப்படி கோடம்பாக்கத்திற்கு வந்து கோலோச்சியது?. நடுநிசியில் நடு ரோட்டில் யோசிக்கும் நாயகியோடு நாமும் கொஞ்சம் இணையலாம்.கண்ணை மூடி கனவில் போகும் நாயகி!..

ஸ்கூல் ட்ராமாவில தான் அந்த கலையார்வம்.பாழாய் போன கூச்சம் தான் படுத்தியெடுக்கும்.சக மாணவிகளோடு அரட்டையில் ஆர்வமில்லை.அடியே!.. பிரமிளா!.. உனக்கு ஹீரோ வேஷம்.டீச்சரா எடுத்த முடிவு!.. வாடீ!.. ஹீரோ!.. தோழிகள் மேடையேற்றியது தான் முதல் அனுபவம்.படிக்கும்போதே பாட்டியிடம் பலர் வந்து நடிக்க கேட்டார்கள்.காலஞ்சென்ற இயக்குநர்  ஆர்.பிரகாஷ் பாட்டிக்கு உறவு.பல படக் கம்பெனிகள் அவருக்குத் தெரியும்.அப்படித் தான் பிருதிவி பிலிம்ஸ் பாட்டியை நச்சரித்தார்கள்.பாப்பா சினிமாவுக்கு வந்தா எங்கேயோ போயிடும்! ..பாட்டி கரைந்தார்
புட்டிலு சான்ஸ் இப்படித்தான் கிடைத்தது.படித்துக்கொண்டே படப்பிடிப்பு. தோழிகளிடம் மூச்சு விடவில்லை.கேலி செய்வார்கள்.சின்ன வேஷம் தான்.இதைப் பார்த்துத் தான் புல்லைய்யா என்னை பக்க இண்டி அம்மாயிக்கு அழைத்தார்.தனது சொந்த மகளைப் போல பாவித்தார்.சினிமா மீது ஆர்வம் வந்தது அப்போது தான்!.... ஜாலியா கல்கத்தா பயணம்.அவ்வளவு பெரிய சிட்டியை அப்போது தான் பார்க்கிறேன்.பள்ளி படிப்பு அம்பேல் ஆனது!..பாட்டி பரபரப்பானார்.அப்பா கஜபதி நாயுடு அமைதியாக பானுமதியம்மா அழைத்தார்.

மணமகன் தேவையில் முழு சினிமா உள்ளே இறங்கியது.பானுமதியம்மாவும் தனது பெண்ணாகவே பார்த்துக்கொண்டார்.லலிதாங்கியில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது.ஆனால் எம்.ஏ.வேணு தான் என்னை ஊரறிய வைத்தவர்.ஆரம்பத்தில் முதலாளி படத்திற்கு வில்லி வேஷம் தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.பத்மினி தான் ஹீரோயின்.அவர் ரஷ்யா போனதால் நான் தப்பித்தேன்.வில்லிக்கான போர்ஷன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தபோது தான் பையன் வந்து ஹீரோயின் போர்ஷனை தந்துவிட்டுப் போனான்.எனக்கே ஆச்சரியம். வள்ளி கேரக்டருக்கு நானா?.ஏரிக் கரையின் மேலே போகும் பெண் மயிலை சினிமா ரசிகனுக்கு பிடித்துப்போனது. இன்னும் நடிப்பை மெருகேற்ற சேவா ஸ்டேஜில் இணைந்தேன்.அவங்க தான் கூப்பிட்டாங்க.சிவாஜியெல்லாம் ஸ்டேஜில் நடிக்கும்போது உனக்கென்ன?. என்னை மெருகேற்றியதில் பெரும் பங்கு ஐயா சகஸ்ரநாமத்தையே சேரும்.சினிமாவை எந்த அளவுக்கு வெறுத்தேனோ அதை விட இரு மடங்கு நாடகத்தை வெறுத்தேன்.ஆனா பாருங்க!.. திரையில் என்னைப் பார்த்து எனக்கே ஆச்சரியம். நானா இவ்வளவு பாவனையோடு நடித்தேன்.?. அம்மா கார் ரெடி!..சட்டென கண் திறந்த தேவிகா சீக்கிரம் போலாம்பா!.. காலைல வாஹினியில் முக்கியமான கால்ஷீட் என்கிறார்.பாஞ்சாலி படப்பிடிப்பில் தான் இந்த பிரேக் டவுன்.அதன் பிறகு எவ்வளவு பாத்திரங்கள்!..நாமும் கொஞ்சம் ஓட்டிப் பார்க்கலாம்.

பிரமிளா தேவியை தேவிகாவாக மாற்றியது எம்.ஏ.வேணு. ஐம்பதுகளின் இறுதியில் அமைதியாக நுழைந்த தேவிகா அதிரடி காட்டியது அறுபதுகளில் தான்.ரசிக ரஞ்சனி சபாவில்  அவரது பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம் பார்த்த ஏ.வி.எம்.தொடர்ந்து மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் தந்தது அவரே எதிர்பார்க்காதது.சகோதரிக்கு இரண்டாயிரத்து ஐநூறு. களத்தூர் கண்ணம்மா பாவ மன்னிப்பு என ஆயிரம் கூடியது.மொத்தமாக ஏ.வி.எம்.குத்தகைக்கு எடுக்க அன்றைய ஹீரோயின்களுக்கு சரியான போட்டியாக வரப்போகிறார் என்பது அன்று அவர்களுக்குத் தெரியாது.இரண்டாவது நாயகிகளுக்கு கிடைக்கும் மரியாதை தனி தான்.செட்டில் அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார்கள்.ஆனால் தேவிகா பள்ளி நாட்களில் இருந்த தேவிகா அல்ல.தான் இருக்குமிடத்தை கலகலக்க வைப்பது அவரது இயல்பாகிப் போனது.சட்டென அனைவரிடமும் ஒட்டிக்கொள்வார்.லைட் பாய் வரை தோளில் கை போடுவார்.புல்லைய்யா பந்துலு தொடங்கி பானுமதி வரை எம் பொண்ணு என வாயார வாழ்த்த தேவிகா எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்.வாழ்க்கைப் படகு காலத்தில் வாசனின் மனைவி எம் பொண்ணு என்றது மிகப் பெரிய விஷயம்.இயக்குநர்கள் பக்கத்திலிருந்தும் நல்ல பெயர் கிடைத்தது.நடித்தெல்லாம் காட்ட வேண்டிய அவசியமில்லை.இது தாம்மா உன் கேரக்டர்.!.. நீயா டெவலப் பண்ணிக்கோ!..ஆச்சர்யமா இருக்கும்.நினைத்ததை விட பெட்டரா நடித்துத் தருவார். திறமையான இயக்குநர்கள் தேவிகாவின் நடிப்பைப் பார்த்து முகம் சுழித்த வரலாரே இல்லை!..இந்தப் பொண்ணை வேறு புக் பண்ணீட்டேன் !.. என்ன பண்ணப் போகுதோ?. ஆடிப் பெருக்கில் சங்கர் உண்மையாகவே சங்கடத்தோடு தான் படத்தை ஆரம்பித்தார்.ஆனால் ரஷ் பார்த்ததும் அடடா!.. என்னமா நடிச்சிருக்கா!..தேவிகா வரும் ஃபிரேம்களில் அசத்தியிருப்பார்.இதில் சந்திரபாபு பிஸ்கோத்து பாத்திரத்தில் வருவார்.அவரது பெர்ஃபாமன்ஸை தூக்கி நிறுத்தியது தேவிகா தான்.ஆன் த ஸ்பாட்டில் சந்திரபாபு ஆக்டிங் தர தேவிகா முகத்தைப் பார்க்க வேண்டுமே!..சக நடிகருக்குத் தோதாக தன்னை மாற்றிக்கொள்ளும் லாவகம் சில பேருக்கு மட்டுமே வரும்.காட்சிகள் வரும்போது தேவிகாவையே பாருங்க.காட்சியை அவ்வளவு அழகாக மெருகேற்றியிருப்பார்.ஆனந்த ஜோதியில் மக்கள் திலகத்தோடு இணையும் தேவிகா இன்னும் கொஞ்சம் படங்களில் தலைகாட்டியிருக்கலாமோ என ஏங்க வைத்திருப்பார்.ஆனால் தெலுங்கு சினிமாவில் வட்டியும் முதலுமாக என்.டி.ஆரின் அநேக படங்களில் தேவிகாவைப் பார்க்கலாம்.ஜெமினியோடு அசத்தலாக செட்டாவார்.பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போட வா என இதயத்தில் நீ படப் பாடல் கவிஞர் வாலியின் ஆரம்ப கால ஹிட்டில் தேவிகாவிற்காக மெனக்கெட்டிருப்பார் வாலி.

நடிப்பைத் தவிர பாடல்களில் வேறொரு தேவிகா!.. இசையரசி குரலுக்கு அசத்தலாக உயிர் கொடுப்பார்.நினைக்கத் தெரிந்த மனமே கொதிக்கத் தெரிந்த நிலவே போன்ற  எத்தனை எத்தனை பாடல்கள்.கவிஞர் இவருக்காகவே மெனக்கெடுவார்.கஷ்டமான நேரத்தில் வானம்பாடிக்கு கால்ஷீட் தந்து அவரது மானத்தைக் காப்பாற்றியவர்.ஆரம்ப கால பாவ மன்னிப்பு மேரியை நம்மால்  மறக்கவே முடியாது.நடிப்பில் வெளுத்து வாங்கும் சாவித்திரியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விட்டிருப்பார்.பரபரப்பாக இருந்த சரோஜாவை குலமகள் ராதையில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியிருப்பார்.அவர் ஏற்ற லீலா பாத்திரம் வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு பேசப்பட்டிருக்காது.சிவாஜியை காதலில் வீழ்த்த அவர் வீசும் அஸ்திரங்கள் நடிகர் திலகத்தையே திக்கு முக்காட வைக்கும்!.. அப்படிப் பார்க்காதே!.. அப்படிப் பார்க்காதே!.. ஆண்டவன் கட்டளையில் அந்த புரபஸரை அலறவிட்டிருப்பார்.அன்னை இல்லத்து கீதா முரடன் முத்து சீதா ஆண்டவன் கட்டளை ராதா என்ன ஒரு வெறைட்டி!..1963 ல் தான் அதிரடி காட்டியிருப்பார்.நெஞ்சம் மறப்பதில்லை இதயத்தில் நீ குலமகள் ராதை ஆனந்த ஜோதி வானம்பாடி அன்னை இல்லம் என எங்கு திரும்பினாலும் தேவிகா இருப்பார்.ஸ்ரீதரின் பாத்திரங்களுக்கு மேலும் மெருகூட்டிய தேவிகா.நெஞ்சில் ஓர் ஆலயத்தில் எதிர்பாராத சான்ஸ்.போலீஸ்காரன் மகளின் விஜயகுமாரியை மனதில் வைத்தே அந்த சீதா கேரக்டரை படைத்தார் ஸ்ரீதர்.எஸ்.எஸ்.ஆர்.முழு ஸ்கிரிப்ட்டையும் படிச்சுப் பார்க்கணும் என்றதும் ஸ்ரீதர் கடுப்பாகிவிட்டார்.அப்படியெல்லாம் உங்க வீட்டுக்காரம்மா எனக்குத் தேவையில்லை.விஜயகுமாரி கடைசி வரை புலம்பினார்.தேவிகா இரு ஆண்களுக்கு இடையே வெளுத்து வாங்கினார்.படத்தைப் பார்த்த மீனா குமாரியே அசந்துவிட்டார்.அந்த சொன்னது நீ தானா?. சொல்!.. சொல்!..சான்ஸே இல்லை.கர்ணனின் தர்ம பத்தினி சுபாங்கியாக தேவிகா.கண்ணுக்கு குலமேது?. கண்ணா என ஆறுதல் படுத்தும் அசத்தலான பாத்திரம்.கணவனா தந்தையா?. என கலங்கி நிற்கும் சுபாவை போய் வா மகளே என வழியனுப்பும் சாவித்திரி.மகனைச் சுமந்து நிற்கும் வெட்கம்.தந்தையை நினைத்து தயக்கம்!.. இரு வேறு நிலையில் நிற்கும் தேவிகா நம் மனதில் என்றும் நிற்கிறார்.அதே போல் பாண்டியன் மார்பில் துயிலும் பட்டத்து மகிஷியாக திருவிளையாடல் கேரக்டர்.பக்குவமான நடிப்பு.மாதவனின் நீல வானத்தை தேவிகாவிற்கே பார்க்கலாம். மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா!.. நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்த  நாயகியின் ஆசை!.அசத்தும்.இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் ஏய்யா அங்கேயே நிக்கிறே? . அழகே வா!..அருகே வா!.. உதட்டைக் கடித்து ஒரு பக்கமாக விழியைச் சுழற்றி விருந்துக்கும் அழைக்கும் அழகான  தேவிகாவை திரை ரசிகன் எப்படி மறப்பான்?.
••••
மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக் காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

 
தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகி மறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்த சிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.

வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...