#சிலரின்_புரிதலுக்காக…
#ஸ்டெர்லைட்_ஆதியும்_அந்தமும்...
#1992முதல்….. @Sterlite Sterlite Copper
(சுருக்கமாக)
———————————————————-
தூத்துக்குடியில் மீலா விட்டான் அருகே அமைந்த ஸ்டெர்லைட் இப்போது மூடப்பட்டுவிட்டது.
ஆரம்பகட்டத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் அதைக் கவனித்தும் களப்பணி ஆற்றியவன் என்கிற முறையிலும் சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்.
ஸ்டெர்லைட் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு அங்கிருந்து மாம்பழ விவசாயிகாள் விரட்டப்பட்டு ,அதற்குப் பிறகு குஜராத்,கேரளாவில் அமைக்க முடிவெடுத்தார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆதரித்தாலும், கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பால் அங்கே அமைக்க முடியாமல், தூத்துக்குடியில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 1992- காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைய திட்டமிடப்பட்டது; தொடக்க விழாவும் நடந்தது. இப்போது ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடம் கருவேல முள் மரங்கள் நிறைந்த வேலிக்காடாக இருந்தது. ஜார்ஜ் பெர்ணான்டஸ், அண்ணன் பழ.நெடுமாறன், ஆண்டன்கோமஸ் போன்றோருடன் அங்கே சென்று ஆரம்பகட்டத்தில் - அதாவது 1993 இல் திமுக-மதிமுக பிரியும் முன் - போய் பார்த்து, அது கூடாது என்று ஜார்ஜ் பெர்ணான்டஸ் அறிக்கைவிட்டார். இந்த வரலாறு இன்று எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
அதற்குப் பிறகு,தி.மு.க.விலிருந்து ம.தி.மு.க. பிரிந்தது. அப்போதிருந்து மதிமுகவின் கட்சி, அமைப்பு பணிகள் என்று தீவிரமாக இருந்தபோது, 1996 இல் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் தமிழகத்தில் நடந்தன. மதிமுக 180 இடங்களில் போட்டியிட்டபோது மூன்றே மூன்று பேர்தான் அதில் டெபாசிட் பெற்றோம். கோவில்பட்டியில் நானும், விளாத்திகுளத்தில் வைகோவும், சங்கரன்கோவில் தங்கவேலுவும்தான் டெபாசிட் பெற்றோம். எங்கள் ஆதரவு பெற்ற வேட்பாளராக வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் (சட்டசபை துணைத்தலைவராக இருந்தவர்) இருந்தார். அந்த மூவரில் அதிகப்படியான வாக்குகளை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகளை அடியேன் பெற்றேன். இந்தநிலையில் அரசியல், கட்சி ஆரம்பித்த பணிகளால் மதிமுக ஆரம்பித்த பணிகளினால் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.
இருப்பினும் அது குறித்து வழக்குத் தொடுக்க வேண்டும் என்று முதற்கட்டமாகத் தீர்மானித்தோம். அப்போது கிரீன்பீஸும் வழக்குத் தொடுக்கத் தயாராக இருந்தார்கள். இப்படி இருந்த நேரத்தில்தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. எல்லா இடத்திலும் மதிமுக 180 இடங்களில் போட்டியிட்டு, தோல்வியைச் சந்தித்தோம். இவ்வாறு இருக்கும்போது திமுக ஆட்சி அன்றைக்கு அமைந்தது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த ஜெயலலிதா. ஆனால் அன்றைக்கு அதிமுக அரசாங்கம் எந்த அதிகாரப்பூர்வமான உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பிறப்பிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த என்.கே.கே.பெரியசாமியால் உத்தரவு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டது.
பிரச்னைகள் எழுந்தபோது, விஷவாயு போல ஆலையிலிருந்து வெளியே வரும்போது போராட்டம் தொடங்கியது. ஸ்டெர்லைட்டை எதிர்த்து வைகோ வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சொன்னபோது, நானும் தராசு பத்திரிகையில் கேள்வி – பதில் பகுதியில் பதில் சொன்ன கிருஷ்ணசாமியும் சேர்ந்து வழக்குக்கான தயாரிப்புப் பணியைச் செய்தோம். அந்த வழக்கில் ஆரம்ப கட்டத்தில் இருந்து 2001 இல் மதிமுகவை விட்டு நான் வெளியேறும்வரை வழக்கறிஞராக இருந்தேன். இப்படித் தொடர்ந்து வைகோ அவருடைய முழுமனதோடு, இதயசுத்தியோடு ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும்; அகற்றப்பட வேண்டும் என்று போராட்டங்களின் மூலமாக, நீதிமன்றங்களின் வாயிலாக முயற்சிகள் எடுத்தார். வைகோவைப் பொருத்தவரையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு விஷயத்தில் மனப்பூர்வாக உழைத்தார். அதில் யாரும் குறை காண முடியாது. ஆனால் என்னுடைய தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையில் அவரால் எவ்வளவோ ரணங்கள் ஏற்பட்டன. அது வேறு தனிப்பட்ட விடயம். அதற்காக உண்மையை மறைக்க முடியாது.
அன்றைக்கு – 1997 இல்- ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திமுக அரசு இருந்தது. நாங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். ஐந்தாயிரம் பேர் பெரிய பேரணி டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தினோம். தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி அருகே 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். வ.உ.சி.கல்லூரியில் எங்களை இருக்க வைத்து அன்று மாலை விடுதலை செய்தார்கள். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினோம். திருநெல்வேலி- ஸ்ரீவைகுண்டம்யிலிருந்து தூத்துக்குடி வரை நடைப்பயணமாகப் பிரச்சாரப் பயணமும் வைகோ தலைமையில் நடந்தது. இவை எல்லாம் அந்தக் காலத்தில் நிகழ்ந்தவை. இப்போது போராளிகள் என்று குரல் கொடுக்கிறவர்கள் பலர் யாரும் அப்போது குரல் எழுப்பவில்லை.இன்று திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள்
மு.கண்ணப்பன், பொன் முத்துராமலிங்கம், ச.தங்கவேலு, மைதீன் கான் மற்றும் எல். கணேசன் என பலரும் இதில் பங்கேற்றார்கள்.
கடந்த 1999- இல் கலைஞர் முதல்வர். அப்போது திமுக – மதிமுக தோழமை கட்சிகள். ஒரு மாலைப்பொழுதில் கலைஞர் என்னை அழைத்து ஸ்டெர்லைட் பிரச்னைக்காக மதிமுக ஏன் இந்த அளவு போராடுகிறது என என்னிடம் விளக்கமாகக் கேட்டறிந்தார். கனிமொழி, கீதா ஜீவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு தீயசக்திகள் ஊடுருவிவிட்டார்கள் என்று ஆளுநர் சொன்னதற்கு கனிமொழி நேற்று ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.
என்னைப் பொருத்தளவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தப் போராட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சிலர் உள்ளே நுழைந்து சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்று வந்திருந்தால் நிச்சயமாக அதைக் கண்டறிந்து அந்த தீயசக்திகள் அகற்றப்பட வேண்டும். தீயசக்திகளை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடியா ’ ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. ரூ.2.79 கோடியை அதற்காகப் பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவிலும், இன்றைய தமிழ் இந்துவிலும் செய்தியாக வெளிவந்துள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்? நாடாளுமன்றத்திலேயே ஓர் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக சொல்கிறார் என்றால் தீய சக்திகள் உள்ளே புகுந்திருக்குமா, இல்லையா? இதைக் குறித்து விரிவான முறையான விசாரணையும் வேண்டும். நச்சைக் கக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. வாதத்தின் அடிப்படையில், மத்திய அமைச்சரின் நாடாளுமன்ற எழுத்துப்பூர்வமான பதிலும், தமிழக ஆளுநரின் கூற்றும் உண்மையாக இருந்தால், போராட்டத்தில் மக்கள் விரோத தீய சக்திகளுக்கு இடம் அளிக்கக் கூடாது என்பதில் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டியது கடமையும் கூட.
ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2017 வரைக்கும் ஸ்டெர்லைட்டுக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்தவர்கள், அதன் மூலம் வருவாய் கிடைக்கப் பெற்ற அரசியல்வாதிகள் யாரோ? ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பார்வேடிங் ஏஜென்சி நடத்தி, அதன் மூலம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் கோடி கோடியாக வருமானத்தைப் பெற்றவர்கள் எல்லாம் இன்றைக்கு ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது. நேரத்துக்கு ஒரு வேஷமா?
கனிமொழி அவர்களே, நீங்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று 2019 இல் நாடாளுமன்றத்துக்குச் சென்றீர்கள். அதற்கு முன்பு நடந்த இந்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எத்தனை போராட்டங்கள் நடத்தினோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
அரசியலில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 1996 – 1998 காலகட்டத்தில் உண்மையாக இருந்தவர்கள் எங்களோடு கூட்டியக்கம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம். தூத்துக்குடி வட்டாரத்தைப் பொருத்தவரையில் வைகோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சம்பத், தூத்துக்குடி கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்பாதுரை ஆகியோர் களத்தில் இருந்தார்கள்.
நேற்று வரை நேரடியாகவோ, மௌனமாகவோ ஸ்டெர்லைட்டை ஆதரித்தவர்கள் இன்றைக்கு திடீரென்று ஸ்டெர்லைட்டை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள். கனிமொழி, கீதா ஜீவன் எல்லாம் குரல் கொடுக்கிறீர்கள் என்றால் அது 2017க்குப் பிறகுதான். அதற்கு முன்பு ஸ்டெர்லைட்டை திமுக ஆதரித்துக் கொண்டுதான் இருந்த்து. அப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதெல்லாம் இதை திமுக கவனிக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்புதான் நீங்கள் கவனித்தீர்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 3,000 பக்கங்கள்கொண்ட தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு, மே 18-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது
காங்கிரஸ் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. நரசிம்மராவ் காலத்தில் ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு மன்மோகன்சிங் ஆட்சியிலும் ஆதரித்தார்கள். அன்றைக்கு ஆதரித்துவிட்டு இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக ஏதோ போராளிகள் மாதிரி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக பாசாங்கு செய்வது சரியல்ல. அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த புதுச்சேரி நாராயணசாமியும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆதரவாளராகவே செயல்பட்டார்.
வேதாந்தா கம்பெனிக்கு யார் வழக்கறிஞர்? ப.சிதம்பரம், அவருடைய மனைவி நளினி சிதம்பரம்தானே? ஸ்டெர்லைட்டை ஒருபுறம் மூடச் சொல்லிவிட்டு அந்த நிறுவனத்திடம் பீஸ் வாங்கினால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒன்று அரசியலில் இருங்கள். இல்லையென்றால் வழக்கறிஞர் தொழிலைப் பாருங்கள்.
ஸ்டெர்லைட் தொடங்குவதற்கு 1993 இல் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய பிறகு, நடந்த கட்டுமானப் பணிகள், அடிப்படைப் பணிகள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அப்போதெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு இப்போது எதிர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டன முதலமைச்சருக்குத் தெரியாதா?
கனிமொழி இப்போது தூத்துக்குடி தொகுதி எம்.பி.யாக இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் (2018 க்கு முன்பு) ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உண்மையாகவே பாடுபட்டீர்களா? ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு யார் உண்மையாக அனுமதி கொடுத்தது? ஸ்டெர்லைட் யார் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.
அதேபோலவே,இன்றைக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய்யாக ஒரு வினாவுக்கு விடை (ஸ்டேட்மென்ட்) அளித்திருக்க முடியாது. கனிமொழி, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்தானே? மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பதைவிட, நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு என்று பிரிவிலேஜ் மோஷனை அந்த மத்திய அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யுங்கள் (மூவ் செய்யுங்கள்). தமிழக ஆளுநரிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்டுள்ளீர்கள். சரிதான். மத்திய அமைச்சரே கேள்வியின் வினாவுக்கு இது குறித்தான பதிலைச் சொல்லிவிட்டாரே? வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அது நாடாளுமன்ற ஆவணம் அல்லவா? தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் பேச வேண்டாம்.
ஸ்டெர்லைட் பிரச்னை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கவனித்து வருகிறேன். நான் திமுகவில் இருந்ததால் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியவில்லை. ஸ்டெர்லைட் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை, கச்சத் தீவு பிரச்னை, நதிநீர்ச் சிக்கல் குறித்தெல்லாம் நான் திமுகவில் இருந்ததால் பேச முடியவில்லை. ஏனென்றால் கட்சிக் கட்டுப்பாடு. இப்போது நான் சுதந்திரப் பறவை.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் என்ன நடந்தது என்பதைத் சொல்ல சாட்சியாக வைகோ இருக்கிறார். பழ.நெடுமாறன் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பத்,கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை ஆகியோர் இருக்கிறார்கள். தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள்,மீனவ மக்களுக்கும் இது தெரியும்.உண்மையான வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது, திமுக, அதிமுகவும் ஆதரித்தன. இன்றைக்கு வந்து புண்ணியவான்கள் மாதிரி பேச வேண்டாம். இன்னும் பல ஆதாரங்களோடு என்னால் வெளியே சொல்லவும் முடியும் என்பதைப் புரிந்து கொண்டு பேசுங்கள்.
இன்றைக்குக் கூட தமிழக முதல்வருடைய புதல்வர் அமைச்சராக இருக்கிறார் என்று ஸ்டெர்லைட்டைப் பற்றி கருத்துச் சொல்லியுள்ளார். அது அவர் உரிமை. தமிழக ஆளுநரை தூத்துக்குடிக்குச் சென்று பார் என்றும் சொல்லியுள்ளார். ஸ்டெர்லைட் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? யார் ஆட்சிக் காலத்தில் உரிய உத்தரவுகள் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டன என்று முதல்வரின் புதல்வருக்குத் தெரியுமா? அப்போது அவர் அரசியலைக் கூட அறியாத நிலையிலேயே இருந்திருப்பார்.
ஒரு பிரச்னையில் முழுமையாக ஈடுபட்டு ஏதோ சாதிக்க வந்தவர்கள் மாதிரி பேசுவதை விட்டுவிட்டு கடந்த கால வரலாற்றைப் படியுங்கள். அதற்குப் பிறகு உங்கள் கேள்விகளை முன் வையுங்கள். எதிலும் சரியான முழுமையான பங்களிப்பு வேண்டும். அல்லது அதைக் குறித்தான ஆதியும் அந்தமும் தெரிய வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ஸ்டெர்லைட்_ஆதியும்_அந்தமும்...
#1992முதல்….. #Sterlite
#Sterlite_Copper
#KSR_Post
7-4-2023.
No comments:
Post a Comment