#தமிழகத்தில்_நிறைவு_பெறாத_மின்திட்டங்கள்
————————————————————
ஐந்து அனல் மற்றும் இரண்டு நீர் மின் நிலையங்களை தமிழக மின்வாரியம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைத்து வருகிறது. என்றாலும் இதுவரை ஒன்று கூட செயல்பாட்டுக்கு வரவில்லை. அவற்றுக்காகச் செலவிடப்பட்ட தொகை 48 ஆயிரத்து 500 கோடி.
எண்ணூர் விரிவாக்க அனல் மின் நிலையம்
சென்னை எண்ணூரில் 2014 ஆம் ஆண்டு 660 மெகா வாட் திறனில், எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 3,921 கோடி ரூபாய் செலவில். 'லேன்கோ' நிறுவனம் வாயிலாக தொடங்கப்பட்டது. அங்கு 2018 இல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டாலும், நிதி நெருக்கடியால், 17 சதவீத பணிகளே நிறைவடைந்தன. 2022- இல் பி.ஜி.ஆர்., நிறுவனம் வாயிலாக பணிகளை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான செலவு 4,440 கோடி ரூபாய். 2025 ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இன்னும் 1 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.
திருவள்ளூரில் 'வட சென்னை - 3'
திருவள்ளூரில் 'வட சென்னை - 3' என்ற பெயரில் 800 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. அங்கு 2019 - 20 இல் மின் உற்பத்தி தொடங்கவும் திட்டமிடப்பட்டது. அதற்கான செலவு 8,736 கோடி ரூபாய். ஆனால் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை
திருவள்ளூர், வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அனல் மின்நிலையம்
2014 ஆம் ஆண்டு திருவள்ளூர், வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், 1200 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, ரூ.13 ஆயிரத்து 76 கோடி செலவில் தொடங்கப்பட்டது. 'பெல்' நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அங்கு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது; இதுவரை பணிகள் முடியவில்லை
உப்பூரில் அனல் மின் நிலையம்
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1600 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. செலவு 12 ஆயிரத்து 778 கோடி ரூபாய். அங்கு 2021 இல் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததால், அந்த திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பின், பசுமை தீர்ப்பாய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து, உப்பூரில் பணிகளை தொடர முடிவு செய்யப்பட்டும், பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை
உடன்குடியில் அனல் மின் நிலையம்
உடன்குடியில் 1,320 மெகா வாட் திறனில் அனல் மின் நிலைய கட்டுமான பணியும் 2017- இல் தொடங்கியது. செலவு 7,359 கோடி ரூபாய். 2021 - 22 -இல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. இதுவரை பணிகள் முடியவில்லை
குந்தாவில் நீரேற்று மின் நிலையம்
நீலகிரி மாவட்டம், குந்தாவில் நீரேற்று மின் நிலையம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரியில் தொடங்கியது. செலவு 1,831 கோடி ரூபாய். 2021 - 22 இல் உற்பத்திக்கு திட்டமிட்ட நிலையில் இதுவரை பணிகள் முடியவில்லை
புளியஞ்சோதலையில் கொல்லிமலை நீர் மின் நிலையம்
திருச்சி மாவட்டம், புளியஞ்சோதலையில் 20 மெகா வாட் திறனில் கொல்லிமலை நீர் மின் நிலையம் அமைக்கும் பணி 339 கோடி ரூபாய் செலவில் 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. அங்கு 2021 ஏப்ரலில் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. இதுவரை தொடங்கப்படவில்லை.
மின் வாரியம், தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்து, சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஒரு மின் நிலையம் கூட இதனால் செயல்பாட்டுக்கு வரவில்லை.
#தமிழகத்தில்_நிறைவு_பெறாத_மின்திட்டங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ_இராதாகிருஷ்ணன்
#ksrpost
20-4-2023.
No comments:
Post a Comment