Friday, April 28, 2023

இன்று உ.வே.சாமிநாதையர் நினைவு நாள்.

இன்று உ.வே.சாமிநாதையர் நினைவு நாள்.
————————————————————
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது...”

- ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரையில், நினைவு மஞ்சரி முதல் பாகம்.  

( பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை உ.வே.சா இக்கட்டுரையில் விளக்குகிறார். அவரது மாணாக்கரான பொண்டெனூ என்பவர் தன்னைப் பார்க்க வந்த தருணத்தையே மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார்). 

 "தமிழன்னையின் இளமைப் பருவத்தே அவள் புனைந்தருளிய சிறந்த பொற்பணிகள் பலவற்றைத் தேடிக்கண்டு அவற்றை மாசு நீக்கி மீண்டும் அழகுறுத்தி அவள் தெய்வத் திருமேனியில் அணிவித்து மகிழ்ந்த தமிழ்ச்செல்வர் யாவர்? தமிழ்ப் புலமைக்கு உரையாணியாக விளங்கும் தமிழ்ப் பெருந்தகையர் யாவர்? தமிழ்க் கல்வி புதியதோர் மேம்பாடுற்று எவரும் போற்றத்தக்க நிலையிலே தற்காலத்து நிலவுவதற்குக் காரணமாயுள்ள அருந்தமிழ்ப் பேராசிரியர் யாவர்? தமிழ் மக்கள் தங்களுடைய புராதன நாகரிகத்தையும், தொன்மை, பெருமை முதலியவற்றையும் நன்கு உணர்ந்து களிப்புறும் வண்ணம் செய்வித்த தமிழ் மகனார் யாவர்?  இச்செயற்கரிய செயல்களையெல்லாஞ் செய்த பெரியார் மகாமகோபாத்தியாய  தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களே ஆவர்.. " 

- டாக்டர் எஸ்.வையாபுரிப்பிள்ளை  (1942ல் திருவல்லிக்கேணி ஹிந்து இளைஞர் சங்க விழாவில் பேசிய குறிப்பினின்றும் எழுதியது).  நன்றி: "உ.வே.சா பன்முக ஆளுமையின் பேருருவம்" தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு. 

#உ_வே_சாமிநாதையர்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-4-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...