Tuesday, April 25, 2023

தமிழகமுதல்வர் ஸ்டாலின் அவர்களே

#


நேற்று தங்களோடு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள சிலர் அல்ல பலர், 2006 இல் இருந்து 2018 வரை முள்ளிவாய்க்கால் பிரச்னையிலிருந்து பல பிரச்னைகளுக்காகவும் -  2006 - 2011  தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2 ஜி விவகாரத்தில் இருந்து தொடங்கி ஊழல் என்று திமுகவுக்கும், கலைஞருக்கும், தங்களுக்கும் எதிராகவும் கூப்பாடு போட்டவர்களாக இருந்தார்கள். அந்த கூப்பாடுகளைச் சமாளிக்கக் கூடிய கேடயமாக அப்போது நான் உங்களுக்குப் பயன்பட்டேன்.
 
தாங்கள் ஈழப்பிரச்சனையில் ஐநா சபைக்குச் செல்ல ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்ததும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தங்கள் கலந்து கொண்டபோது அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததிலும் முன்னணியில் இருந்தேன். அப்போது எல்லாம் கூப்பாடு போட்டவர்கள்தான் இவர்கள். திமுகவுக்கும், கலைஞருக்கும், தங்களுக்கும் உழைத்தவர்களாகிய என்னைப் போன்றவர்கள் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு, இப்போது வெளியே நிற்கிறோம். அன்றைக்கு திமுகவுக்கு எதிராக கோஷம் போட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு திமுகவுக்கு உழைத்தவர்கள் போல, களப்பணியாற்றியவர்கள் போல புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். நல்லது. நாளைக்கு திமுக எதிர்க்கட்சியான பிறகு இவர்களே  திரும்பவும் உங்களைத் திட்டுவார்கள்.
****
தலைவர் கலைஞர் தன்னோடு நுண்மான் நுழைபுலம் மிக்கவர்களை அருகில் வைத்துக் கொள்வார். முரசொலி மாறன், நாஞ்சிலார், வைகோ அவர்களோடு இருப்பதை பெரும் மகிழ்வாக நினைப்பார். என்னிடம் ஒருமுறை, “உன்னைப் போன்ற விவரங்கள்,  தரவுகள் தெரிந்தவர்களோடு இருப்பது எனக்கு பலம்ப்பா ” என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இது தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. 
எப்படியோ விழாக்கள் எடுத்து பாசாங்‌குத்தனமாக முதல்வருக்கு சந்தோஷத்தைக் கொடுப்பவர்கள்தான் உண்மையான கட்சி களப்பணியாளர்கள் என்று நினைக்கிறார் போலும். அப்படி அவர் நினைத்தால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டது மாதிரி இன்றைய முதல்வரும் ஏமாற்றப்படுவார். கலைஞர் போல எந்த சோதனையையும் தாங்கக் கூடிய வல்லமை முதலமைச்சருக்கு வராது. 
 முதலமைச்சர் அவர்களே, போலிகளை ஒதுக்குங்கள். பதவி இருந்தால் போலிகள் எழுந்து நிற்பார்கள். பதவி இல்லையென்றால் காக்கிச் சட்டையைப் பார்த்து பயந்து ஓடிவிடுவார்கள். இது உங்களுக்கே தெரியும். 

சைதை இடைத்தேர்தல்,. ஆண்டிபட்டி இடைத் தேர்தல், வேளச்சேரியில் உங்கள் வீட்டிற்கு நள்ளிரவில் போலீசார் வந்தபோது முழுமையாக நான் அங்கிருந்து கண்ட காட்சிகள் இவற்றை எல்லாம் உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். சொல்ல வேண்டியதைச் சொல்வதும், பதிவு செய்ய வேண்டியதும் என் கடமை. எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் முற்றும் தெரிந்த முதலமைச்சருக்கே உரியது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023

#மாண்புமிகுமுதல்வர்ஸ்டாலின்அவர்களே, 

திடீரென்று  பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் அவருடைய இரண்டாவது வீடியோவை இன்று தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார். எந்தவித உழைப்பும் இல்லாமல் உங்களால் பதவி கொடுக்கப்பட்ட மனிதர் அவர். அரசியலில் அவரை உச்சத்தில் வைத்தீர்கள். சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பி ஆட்சி நடத்தினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் விட மாட்டார்கள். 
 நேற்று வரை வெளியேயும் சட்டமன்றத்திலும் தி.மு.கவையும், தலைவர் கலைஞரையும் உங்களையும் திட்டியவர்களை எல்லாம் நீங்கள் அழைத்து அவர்களுக்கு பதவிகளை அள்ளித் தந்து கௌரவிப்பீர்கள். தி.மு.கவுக்காக உண்மையிலேயே உழைத்தவர்களைத் தள்ளி வைப்பீர்கள்; நீக்குவீர்கள். நன்றாக இருக்கிறது, உங்கள் அரசியலும் உங்களுடைய அறம் சார்ந்த அணுகுமுறைகளும்! வாழ்க தி.மு.க! வேறு என்ன சொல்ல முடியும்? 
 
கலைஞர் ஐம்பது ஆண்டு காலம் கடுமையான சோதனை காலங்களிலும் தி.மு.க வைக் கட்டியமைத்து, வளர்த்துச் சென்றார். இப்போது என்ன சொல்ல?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...