Sunday, June 30, 2019

தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் கொடூரமாக நாகரிகமற்ற முறையில் அன்றைய ஆளும் அராஜக அரசு கைது செய்து இன்றோடு 18 வருடங்கள் ஆகிறது.


தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் கொடூரமாக நாகரிகமற்ற முறையில் அன்றைய ஆளும் அராஜக அரசு கைது செய்து இன்றோடு 18 வருடங்கள் ஆகிறது. முதுபெரும் தமிழினத் தலைவரை கைது செய்யப்பட்டதை அறிந்த உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கைது சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்த ஒளிநாடாவை அந்த நேரத்தில் காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி அறிவாலயத்துக்கு கொண்டுவந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் சுரேஷ் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார். அது குறித்தான பத்தி..

Image may contain: 3 people, textநள்ளிரவில் கலைஞர் கைது - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் - கே.கே. சுரேஷ்குமாரின் பதிவு

சமீபத்தில் சன் டி.வி. செய்தியாளர் கே.கே.சுரேஷ்குமார் எழுதிய "நள்ளிரவில் கலைஞர் கைது" - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில செய்திகளும், பதிவுகளும் 18 ஆண்டுகளுக்கு பின் இன்றைக்கு நினைத்து பார்க்கும்பொழுது மனித உரிமைகள் ஜெயலலிதா ஆண்ட காட்டாட்சியில் எவ்வாறு மீறப்பட்டன என்பதெல்லாம் சாட்சியங்களாக உள்ளன.
நள்ளிரவில் உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில் தலைவர் கலைஞர் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் கடுமையான கண்டனக் குரலை தெரிவித்தனர். பாரதியின் வாக்கின்படி பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது அன்றைக்கு நிரூபணமானது.

அந்நூலில் திரு. கே.கே. சுரேஷ்குமார், தலைவர் கலைஞர் கைது குறித்த சி.டி.யை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளிந்து சேர்த்தக் காட்சியை அந்த நூலில் 65வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

கலைஞர் கைது கேசட் அலுவலகம் சேர்ந்த கதை

கேசட்டை எடுத்து ஓடிவந்த கே.எஸ். ராதாகிருஷ்ணனின் "சாகசம்"

கலைஞர் கைதை வெளி உலகிற்கு காட்ட உயிர் நாடியாக இருந்த அந்த விலைமதிப்பற்ற வீடியோ கேசட்டை, கேமராவில் இருந்து எடுத்து, எங்கள் எம்.டி. கலாநிதி மாறனிடம் கொடுத்தோம் என்றேன் அல்லவா! அப்போது அதை கவனித்த காவல்துறை துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், கேசட்டை பறிக்க வேண்டும் என்று பரபரப்படைந்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, அந்த கேசட்டை எங்கள் எம்.டி. அருகில் இருந்த தி.மு.க. வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனுக்கு கண்ணை காட்டி, கேசட்டை அவர் கையில் சொருகினார். 

இதையடுத்து, கேசட்டை தனது இடுப்பில் சொருகிக்கொண்ட இராதாகிருஷ்ணன், போலீசார் சந்தேகப்படாத வகையில் அங்கிருந்து மெல்ல நகர்கின்றார். போலீசார் கண்கள் கலாநிதி மாறன் அவர்களையே வட்டமடித்தபடி இருக்க இதை இராதாகிருஷ்ணன் பயன்படுத்திக் கொண்டார். வெளிச்சமான பகுதியை விடுத்து, இருட்டான பகுதிக்குள் அவர் ஓடி மறைகிறார்.

அண்ணா அறிவாலயத்திற்கு நேர் வழியில் செல்லாமல், வீடுகள் சூழ்ந்த குறுக்கு சாலைகளின் வழியே இராதாகிருஷ்ணன் முன்னேறிச் செல்கிறார். இதற்கிடையே, எங்கள் எம்.டி. கலாநிதிமாறன் கையில் கேசட் இல்லாதது கண்டு, வெகுண்டெழுந்த கிறிஸ்டோபர் நெல்சன், அந்தப் பகுதியில் இருந்து சென்ற, அனைவரையும் பிடித்து சோதனையிடுமாறு போலீசாரை விரட்டுகிறார். இரண்டு போலீசார் இராதாகிருஷ்ணன் சென்ற பாதையில் பின்தொடர்கின்றனர். 

ஆனால் ஒரு கையால் இடுப்பில் இருந்த கேசட்டை பதற்றத்துடன் பற்றியபடியே, ஓட்டமும் நடையுமாக அவர் அண்ணா அறிவாலயத்தின் பின்பக்க கேட்டை அடைகிறார். (இந்த தகவலை என்னிடம் கூறிய இராதாகிருஷ்ணன், நெல்லையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் படித்தபோது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டபோது கூட முதலில் வரவேண்டும் என்று இப்படி மூச்சு வாங்க ஓடியதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.)

கேட்டுக்கு உள்ளே இருந்த கூர்க்காவை அவர் மெல்லிய குரலில் அழைக்க, கூர்க்காவோ, "ஆகேவாலே கேட் சே ஜாவோ" (முன்வாசலுக்கு போ) என இந்தியில் சத்தமாக கூற, கடுப்படைந்த இராதாகிருஷ்ணன், நேரம் காலம் புரியாமல் கடமை உணர்ச்சியை காட்டுகிறானே என நொந்துபோய், தனது முகத்தை நல்ல வெளிச்சத்தில் கூர்க்காவிடம் காட்டுகிறார். பதற்றமடைந்த கூர்க்கா அதன் பிறகே கேட்டை திறந்துள்ளார். உள்ளே தலைதெறிக்க ஓடிய இராதாகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் சன் டி.வி.யை அடைந்து அந்த கேசட்டை சன் தொலைக்காட்சி செய்திப்பிரிவில் அப்போது பணியில் இருந்த ஏழுமலை வெங்கடேசனிடம் ஒப்படைத்த பிறகே, தான் பெரும் நிம்மதி அடைந்தேன் என்று கேசட்டை எடுத்து வந்து மயிர்க்கூச்செரியும் நிகழ்வை என்னிடம் விவரித்தார்.

அதே நேரம், கலாநிதி மாறன் அவர்களிடம் இருந்து கேசட் அனுப்பிவைக்கப்பட்டது குறித்த தகவல் வர, செய்தி தயாரிக்கும் பணி மின்னல் வேகத்தில் தொடங்கியது. கலைஞர் கைது தகவல் கிடைத்து அதிகாலை 4 மணிக்கே செய்தி ஆசிரியர் ராஜா, அலுவலகம் வந்து சேர, சூரியன் உதிக்கும் முன்பே சன் செய்தியாளர்கள் கருப்பசாமி, பால்முருகன், சிவராமன், வேலாயுதம், ரமேஷ், இந்துஜா, காயத்ரி மற்றும் கேமராமேன்கள் மணி, மாரி, மோகன், வெங்கட், லோகநாதன், பாபு, இந்திரசேனா, சேகர் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர். செய்தியாளர்களும், கேமராமேன்களும் துரிதமாக களப்பணியில் இறங்குகின்றனர். காலை 5 மணிக்கெல்லாம், சன் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பு தொடங்கியது.

கலைஞர் கைது செய்தி அறிந்து சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு மூத்த துணை ஆசிரியர்கள் துரைக்கண்ணு, மாடக்கண்ணு, ரசூல், ஜார்ஜ், சிவகங்கை மணிமாறன், விஜயரங்கம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் (இவர்களுக்கு பிற்பகலில்தான் பணி) சன் டி.வி. அலுவலகத்திற்கு காலை ஆறரை மணிக்கே பதற்றத்துடன் விரைந்து வந்தனர். பின்னர் இவர்கள் கைவண்ணத்தில் செய்தியை மேலும் மெருகேற்றும் பணி தொடங்கியது. சொக்கலிங்க ரவி, ஞானேஸ்வரி, ஈவெரா ஆகியோரின் கணீர் "டப்பிங்" குரலுடன் செய்தி தயாரிப்பாளர்கள் பாலகுமார், முரளி, ஜெகஜீவன் ராம் ஆகியோரின் "காட்சி எண்ணத்தில்" கலைஞர் கைது நிகழ்வு பின்னர் விரிவாக ஒளிபரப்பாக தொடங்கியது. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் கலைஞர் கைது செய்திகள் விடியற்காலை முதலே ஒளிபரப்பாக தொடங்கியது.

மேலும் பக்கம் 92ல், பெர்னாண்டஸ் அண்ணா அறிவாலயம் நோக்கி பயணப்பட்டனர். அந்த நிகழ்வை 'லைவ்' வாக தருகிறார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ் இப்போது பேசுகிறார்;

"மிஸ்டர் இராதாகிருஷ்ணன்.... எமர்ஜென்சி காலத்தில் நான் அனுபவித்த அவஸ்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது 1975 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் - என்னை கைது செய்ய வேட்டையை தொடங்கி இருந்தனர். வட மாநிலங்களில் - மாறுவேடம் பூண்டு நான் தலைமறைவாக திரிந்தேன். எனது இருப்பிடங்கள் தெரிந்து என்னை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வந்து கொண்டே இருந்தனர். இங்கிருந்தால் என்னை எப்படியும் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்.

அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், அப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.

நம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர். பின்னர் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டேன். மாறு வேடத்தில் ரயிலில் நான் செல்லும் தகவலை மத்திய உளவுப்பிரிவின் தலைவர் எம்.கே. நாராயணன் எப்படியோ மோப்பம் பிடித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின்படி நான் ஆந்திர மாநிலத்தில் ரயில் செல்லும்போது கைது செய்யப்பட்டேன்.

இது ஜார்ஜ் பெர்ணான்டஸின் மலரும் நினைவுகள். எமர்ஜென்சி கொடுமையின் சில பக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது"

இவ்வாறு கே.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நூலில் 145 வது பக்கத்தில், நள்ளிரவில் கலைஞர் அவர்களை கொடுமையாக கைது செய்யப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உரிய புகார் மனுவை நான் தயார் செய்து ராயப்பேட்டையில் இருந்த மாநில மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்லும்போது உடன் ஆலடி அருணாவும், ஆ. ராசாவும் வந்தனர். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பேக்ஸ் மூலமாக டெல்லிக்கு அனுப்பியும் வைத்தேன். அது குறித்தும் சுரேஷ்குமார் எழுதியுள்ளார்;

மாநில மனித உரிமை ஆணைய விசாரணை

கலைஞர் முரசொலி மாறன், டி.ஆர். பாலு மற்றும் தி.மு.க. தொண்டர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்தது. பேராசிரியர் க. அன்பழகன் தயார் செய்த புகார் மனுவை, ராயப்பேட்டையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா, தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சாமித்துரையிடம் நேரடியாக கொடுத்தனர்.

இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சாமித்துரை, ஞானசம்பந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் ஜூலை 3ம் தேதி சென்னை மத்திய சிறை சென்ற நீதிபதிகள் கலைஞரிடம் 29ம் தேதி நள்ளிரவு நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.

மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு வேலூருக்கும், மற்றொரு குழு கடலூருக்கும் சென்றன. வேலூர் சென்ற குழு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலுவிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடமும் மாநில மனித உரிமைகள் குழு விசாரணை நடத்தியது. கடலூர் சிறைக்கு சென்ற மற்றொரு குழு அங்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. வினரிடம் விசாரணை நடத்தியது. உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அனைரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நள்ளிரவில் கலைஞர் கைது என்ற நூலில் ஜூன் 29 நள்ளிரவு, ஜூன் 30, 2001ம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை விரிவாகவும், உரிய தரவுகளோடும் பத்திரிகையாளர் திரு. கே.கே. சுரேஷ்குமார் பதிவு செய்துள்ளார்.

விழுப்புரம் உணவுப்பொருள் கிடங்கில் பொன்முடி அவர்கள் சோதனை செய்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஆலிவர் சாலையில் காவல்துறையினர் அத்துமீறி நள்ளிரவில் வீட்டை சின்னாபின்னம் செய்து தலைவர் கலைஞரை கைது செய்ததும், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்றதும், கலைஞரின் முதுகுத் தண்டை பதம் பார்த்ததும், அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களை பந்தாடியதும், நீதிபதி அசோக்குமார் இதை கண்டித்ததும், மத்திய சிறையில் கட்டாந்தரையில் தலைவர் கலைஞர் அமர்ந்திருந்ததும், கலைஞரின் கைதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் உட்பட உலகமே கண்டனக் குரலை எழுப்பியது. இது தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் களம், நீதித் துறை, மக்கள் என சகலரும் இந்த கொடுமையை சகிக்காமல் முகம் சுளித்தனர். இந்த அற்புதமான பதிவை கே.கே. சுரேஷ்குமார் சிரமம் எடுத்து முறையாக பதிவு செய்தததை பாராட்ட வேண்டும்.

அரசியல் களத்தில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூலாகும்.

அன்றைக்கு ஆலிவர் சாலை, அண்ணா அறிவாலயம், சிபிசிஐடி அலுவலகம், மத்திய சிறைச்சாலை என இரவெல்லாம் அலைந்துவிட்டு அன்றைய மத்திய அமைச்சர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்தார். ஒரு சில பணிகளை ஒப்படைத்து செய்யுங்கள் என்று சொன்னதும், பேராசிரியர் அவர்களும் காலை 7 மணிக்கெல்லாம் அறிவாலயம் வந்து விட்டார்கள். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வமும், நானும் இது குறித்து மனுவை தயார் செய்து பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தமிழகத்தில் அசாதாரண நிலைமை உள்ளது. எனவே 356ஐ பிரயோகப்படுத்தவேண்டும் என்ற மனுவை தயார் செய்துகொண்டிருக்கும்போது, அன்றைய சென்னை மாநகர் காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் சன் டி.வி. யில் கலைஞர் கைது காட்சிகளை நிறுத்தவேண்டும் என்று அறிவாலயம் வந்தபோது, அவரை எதிர்கொண்டு வாக்குவாதம் செய்து தகராறு செய்தததெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. சைலேந்திரபாபு தலைமையில் வந்த காவல்துறையினர் தொண்டர்படையை அடித்து அறிவாலயத்தில் முன்னாள் இருந்த கழிப்பறைகளையெல்லாம் உடைத்தார்கள். அப்போது சைலேந்திர பாபுவுடன் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தலைவர் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஆகஸ்ட் 12ம் தேதி பேரணியில் நடந்த சம்பவங்களிலும் முன்னிருந்து எதிர்கொண்டதும், தலைவர் கலைஞரோடு இது குறித்து புகார் மனு கொடுக்க ராஜ் பவன் சென்றதெல்லாம் விரிவான பதிவுகள் செய்யவேண்டும் என்று நினைத்துள்ளேன். தலைவர் கலைஞருடைய கைது தமிழக அரசியலில் ஒரு கரும்புள்ளி ஆகும்.

இந்த சம்பவங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கலான நேரங்களில் ஆற்றியப் பணிகள் எல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. 1992ல் தலைவர் கலைஞர் அவர்கள் திரு. என். கணபதியிடமும், என்.வி.என். சோமுவிடமும் ஒரு பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் தீர்வு காண சொல்லும்போது தாமதமாகிவிட்டது. அந்த வழக்கை முறையாக நடத்தி வழக்கு மன்றத்தில் 28 ஜூன் 1992 அன்று தீர்ப்பை பெற்றதும் இன்றைக்கு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை (Tr Pet (Crim) No. 77-78. 2003) பெங்களூருக்கு மாற்றியதில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தீர்ப்பைப் பெற்றதும் அடியேன்தான் என்று பலருக்கு தெரியாது. இதற்கு சாட்சியாக இருந்த அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனோ, டெல்லி சம்பத்தோ இல்லை. ஆனால் ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது அவரது நேர்முக செயலாளர் அகிலன் ராமநாதன் இன்றைக்கும் இருக்கின்றார். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த காவல்துறையினரின் அத்துமீறலையும், அவரது கைது குறித்து அவரது துணைவியார் தொடுத்த வழக்கிலும் (SHRC No. 3132/2001) அடியேன் ஆஜராகி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இதையெல்லாம் முறையாக, கவனமாக செய்ததற்குத்தான் முரசொலி மாறன் அவர்கள் பொதுக்குழுவிலேயே என்னை பாராட்டி பேசியது தினமலர் இதழில் வெளிவந்தது.

அதன்பின் 2012ல் ஈழப் பிரச்சினையில் டெஸோ திரும்ப அமைத்து தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை லண்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த ஈழத் தமிழர் மாநாட்டில் அழைத்து பேச வைத்ததும், அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தா. பாண்டியன், டி. ராஜா, திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ள அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தளபதி மு.க. ஸ்டாலின் நிறைவுரை ஆற்றியதெல்லாம் அடியேனது முயற்சிகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பதவியில் முன்னாளோ, இந்நாளோ, இல்லாமல் களப்பணியினால் இந்த அளவு நினைவுகூறப்படுகிறோம் என்கிற அங்கீகாரம் மட்டும் போதும்.

தகுதியே தடை என்ற நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் பணி செய்துகொண்டிருப்பது கடமை. பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் நடத்திய மாநாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலைச் சொன்னேன். அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் லண்டனில் கலந்துகொண்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனைப் பேருக்கு முன்னால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரத்த குரலில் பதில் சொன்னது இன்றைக்கும் நினைவில் உள்ளது. இது நடந்தது 2012ல்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019

ஜெயா அருணாசலமும், படையப்பாவும்.

ஜெயா அருணாசலமும், படையப்பாவும்.
--------------
ஜெயா அருணாசலம் மறைவு செய்தி செய்தித்தாள்களில் வந்துள்ளது.
Image may contain: 1 person, smilingஒரு சிறந்த சமூக சேவகி. Working Women's Forum என்ற ஒரு அமைப்பை நடைபாதை வியாபாராம், பட்டுப்புழு உற்பத்தி, கைவினை பொருட்கள், சலவைத் தொழில் போன்ற அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் வளர்ச்சிக்காக 1978இல் தொடங்கினார். திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 
ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் தணிக்கைக்கு வந்தபோது அந்த திரைப்படத்தில் ‘நீலாம்பரி’ என்ற கதாப்பாத்திரம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒத்துள்ளது. எனவே இதற்கு சான்றிதழ் வழங்கமுடியாது என்றார். நான் ஏன் வழங்கமுடியாது? என்றும், அதை மறுத்து தணிக்கைகுழு சான்றிதழ் வழங்கலாமே என்று வாதிட்டேன். அப்போது சக தணிக்கை குழு உறுப்பினர்கள் எனது கருத்தை ஆதரித்ததால் என்னுடைய வாதத்தை ஏற்றுக் கொண்டு படையப்பா திரைப்படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. இல்லையென்றால் குறித்த காலத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் திரைக்கு வந்திருக்காது. இதுபற்றி அன்றைக்கு தினமலர் நாளிதழ்கூட செய்தி வெளியிட்டிருந்தது.

ஜெயா அருணாசலம் ஒரு நல்ல பண்பாளர். பி.ஏ. எக்கானமிக்ஸ் படித்தவர். காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பீகார் முதல்வராக இருந்த பகவத் ஜா ஆசாத்திற்கு சம்மந்தியுமாவார். அவருக்கு பன்முகத்தன்மைகள் கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019

World Parliament Day

Today on Sunday's #WorldParliamentDay

It is a fora for real people’s representatives for welfare actions in the democratic Nation.
For everyone who says environmentalists need not be political. #LetIndiaBreathe #WaterCrisis

Image may contain: text

பாஞ்சாலி சபதம்

"தோன்றி அழிவது வாழ்க்கைதான் - இங்குத்
துன்பத்தொடின்பம் வெறுமையாம் - இவை
மூன்றில் எதுவருமாயினும் - களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்! - நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தகைப்பரோ? - துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால்? - விதி
போன்று நடக்கும் உலகென்றே - கடன்
போற்றியொழுகுவர் சான்றவர்"....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுதும் கிராமங்களில் #கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கீழேயுள்ள மாதிரி விண்ணப்பத்தில் நிரப்பி மதுவிலக்கு போன்ற மற்ற முக்கிய கிராம தீர்மானங்களை முன் எடுக்கவும் 

அனுப்புதல்
உங்கள் முழு முகவரி

பெறுதல்
கிராம சபை தலைவர் அவர்கள்,
____________________ ஊராட்சி,
____________ ஊராட்சி ஒன்றியம்,
_____________________ வட்டம்,
___________________ மாவட்டம்.

ஐயா,

பொருள் : 28.06.2019 இன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் – உள்ளாட்சி தேர்தல் – பூரண மதுவிலக்கு – தீர்மானங்கள் தொடர்பாக.

வணக்கம். 

இன்று 28.06.2019ல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிகளை மேம்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தீர்மானம் 1 : கிராமங்களுக்கு அதிகாரமளிக்கும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
தீர்மானம் 2 : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
தீர்மானம் 3 : ____________________
தீர்மானம் 4 : ________________________

கையொப்பம் 

இடம்: 
நாள் : 28.06.2019.

28-06-2019.
No photo description available.

ஆளவந்தார்கள் என்றும் நிரந்தரமல்ல.

மாநிலங்களில் ஆட்சிகள் வரலாம், போகலாம். இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளுங்கட்சி ஆகலாம். 
ஆனால் ஆந்திரத்தில் மக்களின் வரிப்பணத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கடந்த ஆட்சியில் சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா (Praja Vedhika) கட்டிடம் இன்றைக்கு அமைந்துள்ள ஜெகன்மோகன் அரசு தரைமட்டமாக்கியுள்ளது. இது தேவைதானா? இது யார் பணம். மக்களின் பணம் தானே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை வேறு அரசு பணிக்கு பயன்படுத்தியிருக்கலாமே? இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. இந்த வழக்கில் இந்த கட்டிடத்தை இடித்து அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை யாரிடம் இருந்து பெறுவது என்பதை பின் முடிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பல கோடிகள் செலவிட்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் வீண் தானே. தற்போதைய ஆந்திர அரசு நடந்து கொண்ட முறை சரிதானா? 
Image may contain: outdoor
அதேபோல, தமிழகத்தில் கலைஞர் அமைத்த பூம்புகார், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவை எல்லாம் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டதை நம் கண் முன்னாலே பார்த்தோம். ஆளவந்தார்கள் என்றும் நிரந்தரமல்ல. ஆனால் அமைப்பியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட நல்ல செயல்பாடுகளை யார் செய்தார்கள் என்று பார்க்காமல் வன்மமில்லாமல் அதை பாதுகாப்பது தான் கண்ணியம் என்பதை பொது தளத்தில் உள்ள அனைவரும் உணர வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-06-2019
No photo description available.

ONE NATION, TWO REALITIES

American society is deeply divided —not just on values and opinions but on basic perceptions of reality. Find out why fact-checking and education will not fix the problem of dueling fact perceptions in American political culture as Morgan Marietta, co-author of ONE NATION, TWO REALITIES: Dueling Facts in American Democracy (Oxford Academic), joins Eugenio Duarte on the podcast ↙️

https://newbooksnetwork.com/morgan-marietta-one-nation-two-realities-dueling-facts-in-american-democracy-oxford-up-2019/
No photo description available.

#DakshinaChitra - தட்சிண சித்ராவில் உள்ள நூலகத்திற்கு பணி நிமித்தமாக செல்ல நேர்ந்தது.


இன்று (27-6-2019) கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முட்டுக்காட்டின் அருகேயுள்ள, பாரம்பரிய கலைகளை போற்றும்; #DakshinaChitra - தட்சிண சித்ராவில் உள்ள நூலகத்திற்கு பணி நிமித்தமாக செல்ல நேர்ந்தது. அங்கு பல கலைஞர்களை சந்திக்க முடிந்தது.
#DakshinaChitra
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-06-2019
Image may contain: 1 person, outdoor
Image may contain: 1 person, plant, tree and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: plant, tree and outdoor
Image may contain: food
No photo description available.
Image may contain: food

"பாஞ்சாலங்குறிச்சியின் வீரசரிதம்" நூல் அறிமுகவிழா

நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய #கட்டபொம்மனின் வரலாற்றைச் சொல்லும் "பாஞ்சாலங்குறிச்சியின் வீரசரிதம்" நூல் அறிமுகவிழா வரும் 30-06-2019 / ஞாயிற்றுக் கிழமை, மாலை 6 மணியளவில் நாமக்கல் லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது.
விடுதலைக் களம் அதை நடத்துகிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் வருக என்று அன்புடன் அழைக்கிறேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-06-2019
No photo description available.
No photo description available.
No photo description available.

Saturday, June 29, 2019

நாம் சுயமரியாதையோடு அடிமைத்தனம் இல்லாமல் இருந்தால் ..... அடுத்தவர் பயத்துடன் நம்மை பற்றி பின்னால் பேச வாய்ப்பு இல்லாமல் போகும்.....

நாம் சுயமரியாதையோடு அடிமைத்தனம் இல்லாமல் இருந்தால் .....
அடுத்தவர் பயத்துடன் நம்மை பற்றி பின்னால் பேச வாய்ப்பு இல்லாமல் போகும்.....

******
உங்கள் ஆற்றல் மதிப்பை உணராதவரிடம் கூட நீங்கள் சற்று தள்ளி இருந்து கொள்ளலாம். ஆனால் உங்கள் நல்ல குணத்தை சந்தேகிப்பவரிடம், முற்றிலும் விலகியே இருக்க வேண்டும்.

******
நாம் யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் கவலை அற்று ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்..

******
கருத்து வேறுபாடுகள் உண்டாவது இயல்பு. ஆனால்...
வேறுபாடுகள் விரோதங்களாகி விடக்கூடாது.வன்மம் மனித ஆற்றலுக்கு
நல்லதல்ல.

*****
நம்மை அர்த்தமில்லாமால் வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்
ஆனால் நாம் மட்டும் மனசாட்சிக்கு உண்மையாக இருப்போம்.

******
நமக்காக யாருமே இல்லை என வருத்தபடுவதை விட, தகுதியான நமக்கானவர்கள் இல்லை என கடந்து போய்விடுங்கள்...
******
யாரும் எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் பேசிட முடியாது. ஒவ்வொர்க்கிட்டேயும் ஒவ்வொரு இடைவெளி இருக்கும் . நம்பிய நெருக்கமானவரிடம் மட்டும்தான் முக்கிய விசயத்தை எந்த யோசனையும் இல்லாம மனம் விட்டு பேசிட முடியும்.ஆனால் அவரின் நம்பக தன்மை
முக்கியம்....

******
எல்லோருக்கும் தவறென்று தெரிந்தும்,எல்லோருக்கும் தட்டிக்கேட்கும்உரிமையிருந்தும்,
யாருமே அதை பேசாமலேய கடப்பது என்பதே இன்றைய போலி ஜனநாயகம்;
(உ ம்)மணல் கொள்ளையில் மக்கள் பயப்படுகிறார்கள் என்பதைவிட நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று தயங்கி நிற்கிறார்கள் என்பது தான் யதார்த்தம்.

******
சுயமரியாதை என்பது 
தற்பெருமையோ
ஆத்திரமோ 
அன்று...
பயந்து உரிமைகளை விட்டுக் 
கொடுக்க தயாராக இல்லாத மனோநிலையேயாகும்.

******
வாழ்வு என்பது லட்சியத்தைத் தேடும் தொழிலேயாகும். 
சால்பு அடைய முயல்வதே அதன் குறிக்கோள். நம்மால் முடியாதென்றோ நம்மிடம் குறைபாடுகள் உள்ளனவென்றோ எண்ணி நாம் நம்முடைய லட்சியத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது.

நான் என் பலவீனத்தை அறிவேன். குறைபாடுகளையும் அறிவேன். இவற்றை நீக்கி அருளும் படி நான் உண்மையிடம் மௌனமாக பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
******
ஆரம்ப கட்ட வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏணியாக இருந்தவர்களை மறக்காமல் 
என்றும் நன்றி பாராட்டுங்கள்.

****
தகுதியை மதிப்பது அவசியம் . தகுதியற்றவர்களால் எந்த பயனும் இல்லை; சிக்கல்தான்....
ஆனால் இன்றைக்கு #தகுதியேதடை......

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019Image may contain: bird, grass, outdoor and nature

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல விடுதலைப் புலிகள்...!

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல விடுதலைப் புலிகள்...!
மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் ஒரு வசனம்தான் “வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல” என்பது.
Image may contain: one or more people and people standingதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் சிங்கள தேசத்தின் செவிட்டில் அறைந்தது போலவும் பிடரிபிடித்து உலுக்கியது போலவும் சிங்களதேச தலைநகரின் மேல் நீதிமன்றத்தில் ஆற்றிய உரையின் முப்பத்திஓராவது வருடம் இது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிங்களதேசத்தின் கடுமையான சட்டங்களால் நசுக்கி எறிந்துவிடலாம் என்ற கனவுடன் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான முதலாவது ஆயுள்தண்டனையை சிங்களதேசத்தின் மேல்நீதிமன்றம் 24ம்திகதி பெப்ரவரி 1983ல் விதித்திருந்தபோது அதனை தகர்த்து எழுந்தது தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற பிரகடனம்.
1960 களின் இறுதியில் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்ட கருவை உருவாக்கியவர்களில் ஒருவரான தங்கத்துரை அந்நேரத்தில் சிங்களபடைகளால் மிகவும் வலைவிரிக்கப்பட்டு மும்முரமாக தேடப்பட்டவர்களில் ஒருவர்.
அவர் கைது செய்யப்பட்டு சிங்களதேசத்தின் தலைநகரில் மேல்நீதிமன்றில் அவருக்கும் தோழர்களுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்போதே இந்த நீதிமன்ற பிரகடனத்தை அவர் உரையாற்றினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலை என்பன சம்பந்தமாக இதுவரை வெளிவந்த பிரகடனங்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று-அந்த நேரத்தில் இந்த உரையானது தமிழீழ விடுதலை எழுச்சியை மேலும் உக்கிரமடைச் செய்தது.
பயங்கரவாதி என்றும் வன்முறையாளன் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தின் கறை துடைக்கும் உரையாகவே அது இருந்தது.
அவரது அந்த உரையில் அதுநாள்வரைக்கும் சிங்களம் செய்துவந்த அனைத்து பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் இருந்தது. அத்துடன் சாதாரண சிங்களமக்களின் மனதில் இயல்பாகவே தோன்றும் கேள்விகளுக்கும் சரியான விளக்கம் இருந்தது.
நீதிமன்றம் முடிந்ததும் மீண்டும் சிங்கள ஆயுதபடைகளின் சிறைக்குதான் செல்லவேண்டும் அல்லது மீண்டும் பனாகொட இராணுவ முகாமுக்கும் கொண்டு போவார்கள்.அங்கு சித்திரவதையும் மரணமும் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டும் மிகவும் உறுதியுடனும் துணிவுடனும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் சம்பந்தமான நியாயங்களை அழுத்தமாக கூறிய தங்கத்துரை அவர்கள் தனது உரையை ஆரம்பிக்கும் போதே…
கனம் நீதிபதி அவர்களே,
“சிறீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் தமிழீழ தேசத்தவர்களாகிய எம்மை விசாரிப்பதற்கு அதிகாரம் கிடையாது”
என கூறி சிங்களதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தபடியே தனது உரையை ஆரம்பிக்கிறார்.
சில இடங்களில் மகாவம்ச கனவில் மிதக்கும் சிங்களத்தின் மனச்சாட்சியை உலுப்பியபடியே அவரின் கேள்வி இருந்தது
“பிரிவினை கேட்கிறோம்…நாட்டை துண்டாட முயற்சிக்கிறோம் எனச் சொல்கிறீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?” என்ற கேள்வியின் மூலம் சிங்களதேசத்துடன் தமது விருப்பத்துக்கு மாறாகவே பலவந்தமாகவே தமிழீழதேசம் இணைக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்றை ஆணித்தரமாக சொன்னார்.
தமிழீழதேசத்தின இறைமை யாரிடமும் தாரைவார்க்கப்படவோ அடகுவைக்கப்படவோ இல்லை என்பதை தங்கத்துரை அவர்கள் தனது உரையின் தொடர்ச்சியில்,
“ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கடவே இல்லை, அதனை இணைப்பு என்ற பெயரில் நாம் யாரிடமும் தாரை வார்க்கவும் இல்லை” என்று தமிழீழ தேச இறைமையை நிலைநாட்டுகிறார்.
தமிழீழ விடுதலை பெறப்படுதல் எந்தவகையில் சிங்கள இனத்துக்கும் சுபீட்சம் தரும் என்பதை தங்கண்ணா எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.
“நாம் விடுதலை பெறுவதன்மூலம் எமது இலட்சியம் மட்டுமல்ல நிறைவேறுவது..சிங்களமக்களுக்கும் பெரும் நன்மையை செய்தவர்கள் ஆவோம்.காரணம், அதன் பின் இனப்பிரச்சனையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களமக்கள் மத்தியில் எடுபடாது.இதனால் சிங்களமக்கள் தமக்கு உண்டான பொருளாதார சமூக தளைகளில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முன்வருவர்” என்று கூறினார்.
உண்மையில் சேனநாயக்க குடும்பம், ரத்வத்தை குடும்பம் முதல் மகிந்த குடும்பம் வரைக்கும் இனப்பிரச்சினை என்ற பூச்சாண்டியை காட்டியே சிங்களமக்களை கனவுகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இதனை முப்பத்திஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லும்போது “அரசியல் பிழைப்பு” என்ற வார்த்தையையும் பாவித்திருப்பதை கவனிக்கலாம்.அற்புதமான வார்த்தை தேர்வு அது.
அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின்னான உலக ஒழுங்கு என்பது நியாயமான போராட்டங்களையும், தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றே முத்திரை குத்தி ஒடுக்கும் போக்காக இருந்து வருகிறது. இதற்கான ஒரு விடையாக முப்பத்தி ஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் சிங்களநீதி மன்றத்தில் உரக்ககூறியதை பாருங்கள்.
“எந்தவொரு தேசியஇனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகம் என்றோ பயங்கரவாதம் என்றோ உலகின் எந்த சாசனமும் கூறவில்லை” என்று கூறுகிறார்.
நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்று சிங்களதேச பிரதி சட்டமா அதிபர் குறுக்கிட்டபோது “உண்மைக்கு மேடையோ அன்றி வெளிச்சமோ போட்டு காட்டவேண்டிய தேவை இல்லை. அது மிகவும் மகத்துவம் மிக்கவை.அது வெளிவருவதை எந்த சக்தியாலும் நிரந்தரமாக தடுத்துவிட முடியாது” என்று சொல்லும்போது நிரந்தரமாக தடுத்துவிடமுடியாது என்று கூறியது இன்றைக்கும் பொருந்தும் ஒரு வார்த்தை பிரயோகம் ஆகும்.
தமிழீழ விடுதலை என்பது மானுட விடுதலையின் ஒரு அங்கமே என்பதை அறைகூவலாக நீதிமன்றத்தில் “எமது நோக்கு மிக விசாலமானது.ஆபிரிக்கண்டம் என்றால் என்ன..லத்தீன் அமெரிக்கநாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகவும் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது..அப்படி இருக்கையில் எமது அயல் தேசத்தவராகிய சிங்களமக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படி போகும்” என்று தங்கத்துரை கூறுகிறார்.
சிங்களதேசம் கொடுமையான சட்டங்களை உருவாக்குவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகவே என்று சிங்களமக்களுக்கு சொன்னாலும் ஒரு நாள் அதே சட்டங்கள் சிங்கள மக்களுக்கும் எதிராக திரும்பும் என்ற தீர்க்க தரிசனத்தை தங்கத்துரை அவர்கள் “நாம் விடுதலை அடையப்போவது நிதர்சனம்.அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டபுத்தகங்களில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட எந்த சட்டமும் எம்மை அணுக முடியாது.அப்படியாயின் அச் சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுக்கும் கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா” என்று கேட்கிறார்.
இறுதியாக தனது உரையை முடிப்பதற்கு முன்னர்,
“எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் களிக்கவோ,வேண்டுமாயின் மரணத்தைக்கூட தழுவவோ நாம் தயங்கவில்லை. ஒரு இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிக சர்வ சாதாரணமான சம்பவங்களே. இதனை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக தனது போராட்ட பாதையின்மீதான தனது உறுதியை காட்டுகிறார்.
முப்பத்தொரு வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் தலைநகரில் விடுக்கப்பட்ட இந்த நீதிமன்ற பிரகடனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கச்சிதமான தெரிவாகவும் ஆழமான ராஜதந்திர பிரயோகமாகவும் இருப்பதை இன்றும் ஆச்சர்யத்துடன் அவதானிக்க முடிகிறது..
மீண்டும் அவரது வார்த்தையிலேயே சொல்வதானால் “நாம் வெறுமனே ஆயுதங்கள் மீது காதல் கொண்டு போராட வந்தவர்களோ, வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ அல்ல.. எமது இறைமையை பெறவே போராடுகின்றோம்”
உண்மையான ஒரு போராளியாக, விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற உரையானது சிங்களத்தின் கனவை என்றாவது கலைத்தே தீரும்.

Book launching event @Odessey

Image may contain: 1 person, sitting
No photo description available.

Friday, June 28, 2019

தமிழக ஊடகங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதையொட்டி வெளியான சிறப்பு மலரில் இடம்பெற்ற தமிழக ஊடகங்கள் குறித்த கட்டுரை.
மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். இது 1925 இல் குடியரசு பத்திரிகையை ஈரோட்டில் பெரியார் துவக்கிய போது அதன் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.
"பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணை புரியும்."
No photo description available.
இவை 1934 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று வெளிவந்த தினமணி முதல் தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள்.

"உறங்கிக் கிடைக்கும் தமிழ்ச் சாதியை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பத்திரிகையின் நோக்கம்."
இவ்வாறு 1913-இல் சுதந்திர உணர்வுடன் தான் ஆரம்பித்த 'ஞானபானு' பத்திரிக்கையின் முதல் இதழில் எழுதி இருந்தார் சுப்பிரமணிய சிவா.
இவையெல்லாம் அப்போது பத்திரிகை ஆரம்பித்தவர்களுக்கு பின்னிருந்த எழுச்சியையும், மக்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தும் அன்றைய ஊடக எழுத்துக்கள்.
Image may contain: 4 people, people smiling, beard and text
அதே சமயம் வெறும் வியாபாரத்தை மட்டும் முன்னிறுத்தாத எழுத்துக்களும் கூட.
'பிதாமகன் சுத்தமான இசுப்பிரித்து நாமத்தினாலே ஆமென்' என்று 1557-இல் அச்சிடப்பட்ட முதல் தமிழ் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில் மத நோக்கம் வெளிப்பட்டாலும் அதன் மூலம் தமிழ் அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்தது. இந்திய மொழிகளில் இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல் இதுதான்.

1578 இல் தூத்துக்குடி அடுத்துள்ள புன்னைக்காயலில் அண்டிரிக் என்பவர் தமிழ்நாட்டின் முதல் அச்சகத்தை உருவாக்கியபோது அதற்கான பணத்தை அளித்தவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் தான்.
இப்படி பலருடைய ஒத்துழைப்பின் மூலம் தமிழ் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது.
1832 இல் தமிழில் வெளிவந்த முதல் இதழான ‘தமிழ் மேகசின்’ வெளிவர காரணமாக இருந்ததும் மதத்தைப் பரப்பும் நோக்கம்தான் என்றாலும் அதன் மூலம் தமிழையும் மக்களிடம் பரவலாக கொண்டு சென்றார்கள்.
அதுவரை தேவாரம் திருவாசகம் என்று சைவ சமயத்தை பரப்புவதற்காக பயன்பட்ட தமிழை கிறிஸ்தவர்கள் தங்கள் மத நோக்கத்திற்காக பயன்படுத்தினாலும் அவற்றில் மூலம் தமிழ் நவீன பட்டதும் உண்மை.
முதலில் மத நோக்கத்திற்காக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த தமிழ் பிறகு அரசியல் நோக்கங்களுக்கு பயன்பட ஆரம்பித்தது. விடுதலை உணர்வை வெளிப்படுத்தியபடி 1882 இல் இருந்து சுதேசமித்திரன் வெளிவரத் துவங்கி 1889 இல் நாளிதழ் ஆனது.
1907இல் ‘இந்தியா’ இதழும் அதை தொடர்ந்து நவ சக்தியும் வெளிவந்தன இதற்கிடையே நீதிக்கட்சியினரின் ‘திராவிடன்’, ‘சுயராஜ்யா’ இதழ்கள் வெளிவந்தன.
இதே கால கட்டத்தில் 1907இல் அயோத்திதாசர் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையும் வெளிவந்திருக்கிறது.
பிறகு டாக்டர் நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிக்கையும் வெளிவந்த பிறகு 1934இல் ‘தினமணி’ வெளிவர ஆரம்பித்தது. அப்போதே அவர்களுக்குள் போட்டி இல்லாமல் இல்லை.
தினமணி வரத் துவங்கியதும் ‘சுதேசமித்திரன்’ காங்கிரஸ் தோன்றும்முன் தோன்றிய பத்திரிக்கை என்று விளம்பரப்படுத்திய போது, ‘தினமணி’ பதிலுக்கு ‘கிழடு தட்டாத பத்திரிக்கை’ என்று சுவரொட்டிகளை ஒட்டியது. அன்றைக்கிருந்த போட்டி அந்த அளவுக்குத்தான் இருந்தது.
அப்போது இருந்த தோழமை பண்புக்கு ஓர் உதாரணம், சுதந்திர போராட்டத்திற்காக தினமணி ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் கைதாகி, சிறையில் இருந்தபோது 25.11.1940-இல் வெளியான தினமணியில் அடுத்து ஆசிரியராக பொறுப்பேற்ற ஏ.என்.சிவராமனை பற்றி இப்படி எழுதியிருந்தார்.
“தினமணி திறமையாக நடத்துவதற்கு சிவராமன் சகல குணங்களும் வாய்க்கப் பெற்றவர்”.
கல்வியறிவு படிப்படியாக பெருகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மொழியை மிக எளிமையான முறையில் கொண்டு போனது 1942இல் மதுரையில் துவங்கப்பட்ட தினத்தந்தி தான்.

பேச்சு மொழிக்கு நெருக்கமான மொழி நடையுடன் மக்களை அணுகியபோது அதை வாசித்தவர்கள் தொடர்ந்து அதன் வாசகர்கள் ஆனார்கள். 1951இல் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்ட தினமலரும் இதைத்தொடர்ந்து தனக்கென வாசகர் பரப்பை பெற்றது.
வார இதழ்களில் 1926இல் துவங்கப்பட்ட ஆனந்த விகடன் ,கல்கி,1947இல் துவக்கப்பட்ட குமுதமும் படிப்படியாக வளர்ந்து லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் அளவுக்கு வளர முடிந்தது.
வாசிப்பை பரவலாக்கிய இந்த இதழ்கள் துவக்கப்பட்ட போது, அவற்றின் விற்பனை 2000 பிரதிகளுக்குள் தான் இருந்தது.
உ.வே.சாமிநாத ஐயரின் ‘என் சரித்திரம்’ விகடனில் தொடராக வெளிவந்ததைத் தொடர்ந்து, அதே இதழில் ஜெயகாந்தன் கவனம் பெற்றார். அவருடைய பல முத்திரைக் கதைகள் அதில் வெளிவந்தன.
1936இல் துவக்கப்பட்ட ‘மணிக்கொடி’யில் டி.கே.சி, உ.வே.சாமிநாத ஐயர், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மௌனி, கு.ப.ரா போன்ற பலருடைய படைப்புகள் வெளிவந்தன.
சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து', கா.நா.சு வின் 'இலக்கிய வட்டம்' ஆகியவை வெளிவந்து பல இலக்கியவாதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திய போதும், புதுக்கவிதைகள், நவீன மொழி பெயர்ப்புகள் என்று பல முயற்சிகள் நடந்தன.
அப்போதும், அவர்களிடமிருந்த முக்கியமான கண்ணோட்டம் சார்ந்த தவறு, அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அரசியல், சமூக மாற்றங்கள் குறித்த எந்தப் பதிவையும், பார்வையையும் முன்வைக்காமல் இலக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தியது தான்.
1960 எழுபதுகளில் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்த எந்த பதிவையும் அப்போது வந்த இலக்கிய இதழ்களில் பார்க்க முடியவில்லை.
தமிழ்மொழி ஆய்வுக்காக 'செந்தமிழ்' போன்ற இதழ் 1904 இல் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும், அதைத்தொடர்ந்து ‘தமிழ்ப்பொழில்’ ‘செந்தமிழ்ச்செல்வி’ போன்ற இதழ்கள் வெளிவந்தாலும் அவற்றின் வாசகப் பரப்பு மிகவும் குறைவு.
அதே நேரத்தில் அப்போது இருந்த இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் திரண்ட உணர்வை ஒருங்கிணைக்கப் பல இதழ்களை நடத்தினார்கள் திராவிட இயக்க தலைவர்கள்.
பெரியார்- ‘குடியரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, இதழ்களை நடத்தினார். அண்ணா- திராவிட நாடு, காஞ்சி இதழ்களையும், கலைஞர் மு.கருணாநிதி-முரசொலி, முத்தாரம் இதழ்களையும் நடத்தினார்கள்.
க.அன்பழகன் – புதுவாழ்வு, சி.பி.சிற்றரசு – தீப்பொறி, கே.பி.மதியழகன் – தென்னகம், ஆசைத்தம்பி – தனியரசு என்று பலதரப்பட்ட இதழ்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
1967-இல் அமைக்கப்பட்ட திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் ஐந்து பேர் இதழாசிரியர்களாக இருந்தார்கள். “இந்த வெற்றிக்கு தினத்தந்திக்கு கால் பங்கு உரியது” என்று தேர்தல் முடிந்ததும் சொன்னார் ராஜாஜி.
சமசுகிருத சொற்கள் அதிகரித்து தமிழ் சமசுகிருதமயமாகிக் கொண்டிருந்த மாற்றத்தைச் சற்று தடுத்து நிறுத்துகிற வேலையைச் செய்தன இந்த திராவிட இயக்கத்தவர்களின் இதழ்கள்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1933 லேயே தன்னுடைய ‘குடியரசு’ இதழில் அறிமுகப்படுத்தினார் பெரியார்.
தமிழ் தேசிய உணர்வை முன்வைத்து 1949இல் மா.பொ.சி.யின் செங்கோலும் தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டு பாரதம், குறிஞ்சி, தேசிய முரசு, கடலோசை போன்றவையும் வெளிவந்தன.
பொதுவுடமை கருத்துக்களுடன் தாமரை, ஜனசக்தி, சாந்தி, தீக்கதிர், செம்மலர் என்று பல இதழ்கள் வெளிவந்தன.
திமுக சார்பில் முரசொலி, திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை’யும் அதிமுக சார்பில் நமது எம்ஜிஆர் மதிமுக சார்பில் சங்கொலி பாமக சார்பில் தமிழோசை என்று பல நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவந்தாலும், இவை அந்தந்த இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் குறுகிய வட்டத்திற்குள் நின்று விடுகின்றன.
இவற்றை கடந்து வெகுமக்கள் வாசக பரப்பிற்குள் இவற்றால் வர முடியவில்லை.
1967ல் ஆட்சிக்கு வரும் முன் பரவலாக அங்கங்கே வெளிவந்து கொண்டிருந்த திராவிட இயக்க இதழ்கள் 70-க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அபூர்வமாகிவிட்டது. இலக்கிய இதழ்களுக்கும் இதே நிலைதான்.
சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ இதழ்களை ஒரு பையில் வைத்தபடி கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி விற்க சிரமப்பட வேண்டி இருந்தது.
1965இல் ‘தீபம்’ பத்திரிகை துவங்கியபோது “இதை லாப இயந்திரமாக வளர்க்க முன்வந்த பலரை நான் அனுமதிக்காததற்கு காரணம் இதன் இலக்கும், நம்பிக்கையும் தடுமாறக் கூடாது என்பதுதான்” என்று அறிவித்த நா பார்த்தசாரதி, 1974 இல் பத்திரிகை நடத்த தன்னுடைய வீட்டை விற்க வேண்டியதாயிற்று.
பல சிற்றிதழ்கள் தொடங்கிய சிறிது காலத்தில் நின்று போவது இயல்பாக நடந்திருக்கிறது. ‘திங்கள்’ என்ற சிற்றிதழை நிறுத்தும்போது அதன் ஆசிரியரான ராமநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
துவங்கப்படும் போது பிரகடனமும் நிறுத்தப்படும்போது நம்பிக்கை இழந்த நிலையும் பல சிற்றிதழ் நடத்தியவர்களிடம் வெளிப்பட்டாலும் திரும்பத் திரும்ப கடும் இடர்பாடுகளுக்கு இடையிலும் அவை துளிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அமுதசுரபி போன்ற இடைநிலை இதழ்களின் தொடர்ச்சியாக தொண்ணூறுகளில் சுபமங்களா, புதியபார்வை, தீராநதி இவற்றைத் தொடர்ந்து காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
சிற்றிதழ்களின் வாசகர்கள் எண்ணிக்கையை விரிவடைவதற்கு இந்த இடைநிலை இதழ்கள் உதவின.
இதன் இன்னொரு விரிவாக்கமாக வெகுஜன இதழ்களில் சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுதி வந்தவர்களான கி.ராஜநாராயணன் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், சாருநிவேதிதா போன்றவர்களும் எழுதத் துவங்கி இருக்கிறார்கள்.
கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம் போன்ற நாடகக் குழுக்களில் இருந்து சிலர் திரைப்படங்களில் நடிக்கப் போனதைப் போல இந்த மாற்றமும் நடந்திருக்கிறது.
“திரைப்படம் தமிழ் நாட்டில் செய்தி தொடர்புக்கு ஒரு கருவி” என்று சி.ஆர்.டபிள்யூ டேவிட் என்பவர் ஓர் ஆங்கில நூலில் எழுதி இருக்கிறார். அந்த அளவுக்கு திரைப்படம் என்கிற ஊடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் திராவிட இயக்கத்துக்காரர்கள்.
1949 இல் நல்லதம்பி படத்தில் கதை வசனம் எழுதினார் அண்ணா, தொடர்ந்து வந்த வேலைக்காரி படத்தில் பிரபலமாகி விட்டார்.
அவரைத் தொடர்ந்து 1950இல் மந்திரி குமாரி படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் மு கருணாநிதியைப் பராசக்தி நிமிர்ந்து பார்க்க வைத்தது.
தமிழ் உரையாடல்களை ரசிக்கத்தக்கதாக மாற்றினார்கள் இருவரும். பாரதிதாசன், கண்ணதாசன் சி.பி.சிற்றரசு, ஆசைத்தம்பி, முரசொலி மாறன் என்று பலர் திரைப்படங்களில் பங்கேற்றார்கள்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ். ஆர்., எம்.ஜி.ஆர் என்று பலரும் திராவிட இயக்கச் சார்புடன் நாடகங்களிலிருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்து தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார்கள்.
1958 கே.பி.சுந்தராம்பாள் தமிழக மேல்சபை உறுப்பினர் ஆனதைப் போல, அண்ணா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோரைத் தொடர்ந்து கலைஞர் மு.கருணாநிதி, எம்ஜிஆரும் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்தார்கள்.
அன்றைக்கு அவர்களிடம் இருந்த சமூக பிரச்சனைகளுக்கு எதிரான வேகமும் ஈடுபாடும் திரைப்படங்களில் தொடர்ந்து பிரதிபலிக்கவில்லை.
1954 இலிருந்து 1959 வரை பொதுவுடமை சிந்தனையை முன்வைத்து இயங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நிரப்பிய இடத்தை அதே சிந்தனையுடன் வேறு யாரும் நிரப்பவில்லை.
நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தனக்கான அடையாளத்தை இழக்காமல் எம்.ஆர்.ராதா இயங்கிய வெளி அப்படியே வெற்றிடமாகக் கிடக்கிறது.
நண்பர்களுடைய உதவியுடன் ‘ஆசிய ஜோதி’ பிலிம்ஸ் நிறுவனத்தைத் துவக்கி ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை எடுத்த ஜெயகாந்தனை போன்ற முயற்சிகளை ஜெயபாரதி, பி.லெனின் போன்றவர்கள் தொடர்ந்தாலும்,
அம்முயற்சிகள் பரந்துபட்ட வெற்றியை பெற முடியவில்லை
எழுபதுகளுக்கு பிறகு புது இயக்குனர்களின் வருகைக்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டு இன்று வரை தொடர்கின்றன.

சில புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தாலும் வணிகப் படங்களின் வெற்றியுடன் அவற்றை ஒப்பிட முடியவில்லை.
அந்த அளவுக்கு வணிக ரீதியான ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான மொழியுடன் சில இயக்குனர்கள் இயங்க முடிந்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு வட்டார மொழிகளும் திரைப்படங்களில் இயல்பாக தற்போது இடம் பெற முடிந்திருக்கிறது.
மக்களுக்கு மிக நெருக்கமாகி விட்ட ஊடகமாக இப்போது மாறிவிட்டிருக்கிறது தொலைக்காட்சி. 1975 இல் சென்னையில் தொலைக்காட்சி நிலையம் உருவான போது முதலில் எதிர்பார்த்த அளவுக்கு அதன் வீச்சு இல்லை.
76-க்குப் பிறகு விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெறத் துவங்கின.
1989-இல் ஒளிபரப்பான ராமாயணத் தொடர் மூலம் ஒருவாரத்திற்கு தூர்தர்ஷன் சம்பாதித்த தொகை 160 கோடி ரூபாய்.
91 க்கு பிறகு பல தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு 94-இல் சன் தொலைக்காட்சி சேனலும், ராஜ் தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட்டன.
2000 ஆம் ஆண்டில் ஸ்டார் டிவி சேனல் விஜய் டிவியை வாங்கி தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகம் எங்கும் நரம்புகள் மாதிரி கேபிள் வயர்கள் மூலம் இணைக்கப் பல சேனல்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அடுத்தடுத்தும் வந்தன.
குழந்தைகளுக்காக தனி சேனல்களும் ஒரே வீட்டிற்குள் பலதரப்பட்ட பார்வையாளர்களையும் உருவாக்கியது தொலைக்காட்சி.
வீட்டிற்குள் நுழைந்த தொலைக்காட்சி அங்கு பெரும்பாலும் இருக்கும் பெண்களை குறிவைத்து நிகழ்ச்சிகளை வழங்கின. தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களை தொலைக்காட்சி எதிரே நிர்பந்தப்படுத்தியதைப் போன்ற ஈர்ப்புடன் அமர வைத்தன.
மதியம், மாலை, இரவு நேரங்களில் தொலைக்காட்சிக்காக ஒதுக்கப்படும் நேரங்களாயின. திரைப்படங்களில் கூட அவை உருவாக்கம் கற்பனையான பிம்பங்களில் இருந்து சுலபமாக விடுபட முடியும்.
அதையும் மீறிய ஒரு விதமான சார்புத் தன்மையையும், வீட்டிற்கு நேரடியாக வரும் உறவுகளைவிட தொலைக்காட்சித் தொடரில் வரும் கதாபாத்திரங்களுடன் நெருங்கிய நிலையையும் பெண்களிடத்தில் தொலைக்காட்சி ஏற்படுத்தியது.
அதனுடைய தாக்கம் சில பெண்களை மன ரீதியாக பாதிக்கும் அளவுக்கு சென்றிருப்பதை சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மனநல மருத்துவர்கள் உணர்த்துகிறார்கள்.
ரிமோட் மூலம் தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்குவதாக நினைத்தாலும் தொலைக்காட்சி தான் பலரை ‘ரிமோட்’டாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
தினமும் சராசரியாக ஒரு தொலைக்காட்சியில் 14 தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இதர சேனல்களையும் சேர்த்தால் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட தொடர்கள் வெளிவந்து, பார்வையாளர்களை கூறு போட்டுக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கான சேனல்களின் மூலமாக எத்தனையோ தகவல்களை புதுப்புது சொல்லாக்கங்களை அவர்கள் தெரிந்து கொண்டாலும், அவர்களுடைய உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை தொலைக்காட்சி இருக்கும் அறைகளில் பல மணி நேரங்களாக அசைவுகளற்று இருக்கச் செய்கிறது.
குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் துறுதுறுப்பும் விளையாட்டையும் குறைகிறது.
தொலைக்காட்சிச் சேனல்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் மூலமாக வித்தியாசமான அசைவுகளுடன் கூடிய மொழி கட்டமைக்கப்படுகிறது.

தமிழ் உச்சரிப்பில் கவனமும், அழுத்தமும் இல்லாதபடி தொலைக்காட்சிகள் வீடுகளுக்குள் உருவாக்கம் பேச்சு மொழி, தமிழைப் பேச்சு மொழியாக மட்டும் கொண்டிருக்கும் பல இளைய தலைமுறையினரின் மனதில் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இவற்றிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களை ஒலிப்பின்னலால் இணைந்திருக்கும் பண்பலை ஒலிபரப்பில் பணியாற்றுபவர்களின் காது வழியாகவும் புகட்டப்பட்டு கொண்டிருக்கும் சிதைந்த மொழியைத்தான்,
காலத்திற்கு ஏற்ற மொழியாக இளைய தலைமுறை கருதும் நிலையை உருவாக்கி இருப்பது, ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்று சொல்லலாம்.
90-களுக்குப் பிறகு பிரபலமான இணைய தளத்தின் மூலம் தமிழில் ஏராளமான வலைத்தளங்கள் தமிழ் வழியாக தொடர்பு கொள்வதில் இருந்து தமிழில் பலவற்றை பெறுவது வரை தமிழை இன்னொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன.
இலக்கிய இதழ்களை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்கிறவர்கள் இணையத் தளங்களில் பக்க நிர்பந்தங்கள் இன்றி சுதந்திர வெளியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
தொழில்நுட்பத்தின் எதிர்விளைவாக எவ்வளவு விஷயங்கள் இதே இணையம் வழியாக வந்து சேர வாய்ப்பு இருப்பது தெரிந்திருந்தாலும், இதற்காக இணையதளத்தையே மறுப்பது நவீனமான ஒரு தொழில்நுட்பத்தை இருக்கிற மாதிரி ஆகிவிடும்.
இலங்கையில் நடந்த இனப் பிரச்சினை காரணமாக உலகெங்கும் சிதறி இருக்கிற தமிழர்கள் இணையம் மூலமாக தமிழைப் பரப்பியதில் முக்கிய பங்கை வகிக்கிறார்கள்.
மொழியினால் நாடு இழந்து எங்கோ நிற்கும் அவலம் அவர்களுடைய சொந்த மொழியை எங்கிருந்தாலும் பாதுகாக்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.
மற்றவர்களுக்கு மொழி ஒரு கருவி, இவர்களைப் போன்றவர்களுக்கு மொழி ஓர் இழக்க விரும்பாத அடையாளம். அந்த உணர்வுதான் எங்கிருந்தாலும் மொழி குறித்த அவர்களுடைய கவனத்தை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
இந்த உணர்வு தமிழகத்தில் செயல்படக்கூடிய ஊடகவியல் சார்ந்தவர்களுக்கு பெரும்பாலும் இல்லை. அதற்கெல்லாம் மேலாக வலிமைமிக்க அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடத்துகிறவர்கள் இடமும் அந்த உணர்வு இல்லை.
நாளிதழ்கள், வார பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் என்று இவை அனைத்திலும் முக்கியமான அம்சமாக வெளித் தெரிவது அவற்றை நடத்துகிறவர்களுக்கு இடையிலான தொழில் போட்டி.
எப்படியாவது எதையாவது அல்லது எதை வெளிக்காட்டியாவது தங்களுடைய நிறுவனத்தை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேகத்தில், ஊடகத்திற்கான எல்லா அறநெறிகளும் மிக இயல்பாக மீறப்படுகின்றன.
காட்சி ஊடகம் எத்தனை வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சிறு உதாரணம், 2006 டிசம்பர் 27ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கில் இடப்படும் காட்சியைக் கூறலாம்.
அந்தக் காட்சியை அரை மணி நேரத்திற்குள் உலகமெங்கும் பார்த்தவர்கள் மட்டும் 300 கோடி பேர். அந்த அளவுக்கு வீரியமுள்ள தொலைக்காட்சி தமிழ்ச் சூழலில் எப்படி பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது?.
பார்ப்பவர்களை பதட்டப்படுத்திக் கொண்டே இருக்கும் தொடர்கள், இடுப்பில் கையை விட்டு கிச்சுகிச்சு மூட்டுகிற பாவனையில் பொழுதுக்கும் சிரிக்க வைக்க முயலும் நகைச்சுவை காட்சிகள்,
ரிக்கார்ட் டான்ஸ் என்கிற நடனத்தை தெருவில் ஆடுவதற்கும் ஹோட்டல்களில் ஆடுவதற்கு தடை விதித்து விட்டு,
அதற்கு சற்றும் குறையாத நடன அசைவுகளை வீட்டின் நடுக்கூடத்தில் கொண்டு செல்கிற தொலைக்காட்சிகள் என்று முழுக்க தனக்கான வணிக ரீதியான நியாயங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன இங்குள்ள ஊடகங்கள்.
இந்த வரைமுறைகளை மீறி மக்கள் தொலைக்காட்சியிலும் சில சமயங்களில் ஸ்டார் விஜய் தொலைக் காட்சிகளிலும் அரசு தொலைக்காட்சிகளிலும் மக்கள் பிரச்சினைகள் சார்ந்த சில நிகழ்ச்சிகள் வெளிவந்தாலும்,
அவையும் டிஆர்பி எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்கிற அளவுக்கு முன்பு பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. திரைப்படம் சார்ந்த விஷயங்கள் மட்டும் திரும்பத் திரும்ப காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
வார இதழ்களுக்கும் நாளிதழ்களுக்கும் இதே விதமான போட்டிகள். அவற்றின் விற்பனை உத்திகளுக்காகப் பரபரப்புக்காக எதையும் ஆதாரமற்று வெளியிடவும் அவை தயாராக இருக்கின்றன.
அவை வெளியாவதால் உண்டாகும் சமூக மற்றும் உளவியல் சிக்கல்கள், குறைந்தபட்சம் சட்ட சிக்கல்களை கூட அந்த இதழ்கள் பரிசீலிக்க முடியாத அளவுக்கு வியாபாரப் போட்டிகள் தலைதூக்கி இருக்கின்றன.
அவற்றை நிறைவேற்றும் பலிகடாக்கள் மாதிரி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு வாயில் மூச்சிரைக்க ஓடும் பந்தயக் குதிரைகளின் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் அந்தந்த ஊடகங்களில் செயல்படுகிறவர்கள்.
அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்காகத் தொடர்ந்து பரபரப்பூட்டும் “ஸ்கூப் நியூஸ்”களையோ அல்லது கலவரப்படுத்தும் காட்சிகளையோ அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
அந்த இலக்கில் அவர்கள் பின் தங்கினால், அவர்கள் புறந்தள்ளப்பட்டு, இன்னொரு குதிரை மூச்சிரைக்க ஓட ஆரம்பிக்கும்.
தினமும் கண்ணில் பட்டைக் கட்டப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியமும் பெரும்பாலான நிறுவனங்களில் அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் செய்திகளை வெளியிடுவதற்கு ஒளிபரப்புவதற்கு அவர்கள் வெளியில் கையேந்துகிற அவலம் நடக்கிறது.
நிலையாமை என்பதை தினமும் யோசிக்க செய்கிற துறையாகவும் இது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
இப்படி நாளுக்கு நாள் இதே வேளையில் தொடர்ந்து இருக்குமா என்பதே நிச்சயமற்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஊடகம் சார்ந்தவர்கள், அதை விட்டு மொழியைப் பற்றியும் அதன் சிதைவை பற்றியும் யோசிப்பார்களா?
இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.
பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று கால மாற்றத்திற்கேற்ப தமிழ்மொழியும் சுவடிகளில் படர்ந்திருந்த தன்னுடைய பழமை தன்மையை உதறித் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றாலும், தமிழ் மொழி வளத்திற்கான உயிரான அம்சங்களையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த உணர்வு எந்த ஊடகம் சார்ந்திருக்கிறவர்களுக்கும் வணிகத் தனத்தை மீறி இயல்பாக இருந்து விட்டால் போதும். தமிழ் மொழியை இளம் நாற்று போல எந்த ஊடகத்திலும் உயிர்ப்புடன் செழிக்க வைத்துவிட முடியும்.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...