Tuesday, March 17, 2020

#மரபு_முறை_தற்சார்பு_வேளாண்மை #தாய்லாந்தில் ‘ #மதராஸ்_முறை #சாகுபடி’ ஆனால் நமது விவசாயத்தில் நச்சு கலந்த முறைகள்......



———————————————-
தாய்லாந்து நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்கத்தக்க ஆலோசனைகளைக் கூற நெல் சாகுபடி மற்றும் பாசன வல்லுநர்கள் நால்வரை ஐ.நா. நிறுவனம் 1948இல் அனுப்பியது. அதில் 3 பேர் தமிழர்கள். ஒருவர் வங்காளி. தாய்லாந்து மக்கள் நேரடி நெல்  விதைப்பதை  மட்டுமே அறிந்தவர்கள்.  நெல் அறுவடை செய்தபின் வைக்கோலை வயலில் எரித்துவிடுவார்கள். இங்கிருந்து சென்ற வல்லுநர்கள், தமிழர்களின் வழக்கமான பசுந்தாள் பயிரிட்டு மடித்துவிடும் முறையையும், நாற்றங்காலில் விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி  நடும் முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். இந்த முறை சாகுபடியில் ஏக்கருக்கு 2 டன் விளைந்த நிலங்களில், ஏக்கருக்கு 4 டன் விளைந்தது. தாய்லாந்து விவசாயிகள் இப்படி நெல் சாகுபடி செய்யும் முறைக்கு ‘மதராஸ் முறை சாகுபடி’ என்று பெயரிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது வேறு.
நமது வேளாண் மக்களுக்கு இராசயன உரம், உயர் விளைச்சல் இரக விதைகள் ஆகியவற்றின் மூலம் தற்போதைய உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பசுமைப் புரட்சியாளர்கள் 1960களில் உறுதியளித்தனர். உண்மையில் உயர் விளைச்சல் இரக விதைகள் என்று ஏமாற்றுப் பெயர் சூட்டப்பட்ட விதைகள் எப்போதும் எங்கும் அதிக விளைச்சல் தருபவை அல்ல. தட்பவெப்ப சூழல் மற்றும் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் தரப்பட்டால்தான் விளைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த இரகப் பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவை.
1960 – 80 வரையிலான பசுமைப் புரட்சி காலத்தில் உணவு உற்பத்தி 2 முதல் 3 மடங்கு அதிகரித்தது எப்படி? இதே காலகட்டத்தில் ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாசனப் பரப்பு பன்மடங்கு விரிவடைந்தது. ஒருபோக நிலங்கள் இருபோக நிலங்களாக மாறின. இதன் காரணமாகவே மொத்த உணவு உற்பத்தி அதிகரித்தது. உயர் விளைச்சல் இரகங்களும், இரசாயன உரங்களும், வானம் பார்த்த நிலங்களில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவில்லை. தண்ணீர் மிக முக்கிய இடுபொருளானது. கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லையென்றால், பயிர் விளைச்சல் பாதிக்கும். போட்ட முதல் கிடைக்காது. இந்த நிலைமையில் விவசாயிகள் பெருமளவில் கிணறுகள் தோண்டினர். அவர்களுக்கு கடன் கொடுத்து கிணறுகள் வெட்டத் தூண்டப்பட்டது. 1960இல் 4300 இரவை எந்திரங்கள் இருந்த தமிழ்நாட்டில் 2005இல் 13 லட்சம் இறவை எந்திரங்கள். இறைக்க இறைக்க ஊறுவதற்கு நிலத்தடி நீர் வற்றாத சுரங்கம் அல்ல. எனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் மேலும் ஆழமாகக் கிணறு வெட்டினார்கள். ஏழை விவசாயிகள் தங்கள் கிணறு வற்றிப் போனதும், நிலத்தை விற்றனர் அல்லது நிலத்தடி நீரை காசு கொடுத்து வாங்கினார்கள். விவசாயிகள் வானத்தையும் பூமியையும் பார்த்து ஏங்கித் தவித்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏக்கருக்கு 2 டன் நெல் விளைந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது ஏக்கருக்கு 3 டன்னை விடக் குறைவாகவே விளைகிறது.

#மரபு_முறை_வேளாண்மை 

 #மதராஸ்_முறை_சாகுபடி’

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17-3-2020.

 #ksrpost

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...