Friday, March 13, 2020

போலிகளை_நம்புகிறாய்_போ_போ! -#கவிஞர்_மீரா

#போலிகளை_நம்புகிறாய்_போ_போ!
 -#கவிஞர்_மீரா
————————————————-
சரி, போ! போ! எக்கேடுங் கெட்டுப் போ! போ!
சமுதாய மே! அடுப்பில் மூட்டத் தக்க
எரிவிறகு தருமரமாய்ப் பட்டுப் போ! போ!
எனக்கென்ன எக்கேடுங் கெட்டுப் போ! போ!
நரிஊளைச் சத்தத்தைக் கேட்டு விட்டு
‘நாதசுரம்! யாழோசை’ என்றே உண்மை
புரியாமல் பிதற்றிக் கொண்டி ருக்கும் உன்றன்
போக்கையா ரல்மாற்ற முடியும்? போ! போ!
 
குடிலர்கள் கூடாரம் ஆய்விட் டாய் நீ!
கோட்சேக்கள் குகையாக மாறி விட்டாய்!
படிக்காத பேதைகளின் விமர்ச னத்தைப்
‘பார்அடடா!’ என்றியம்பத் தொடங்கி விட்டாய்!
தடியெடுத்த கயவர்க்குத் தாளம் போடும்
சமுதாய மே!உன்மேல் பற்றிக் கொண்ட
கொடியபிணி கொல்லவந்த மருந்து வர்தம்
குரல்வளையைப் பிடிப்பதற்கும் துணிந்து விட்டாய்!
 
தறிபார்த்து நெய்ததுணி போன்ற மென்மைத்
தத்துவத்தைத் தணல்மேலே வீசு கின்றாய்;
வெறிபோர்த்த சதைத்திமிரைக் காட்டு கின்றாய்;



வீரத்தைத் தியாகத்தைச் சத்தி யத்தைக்
குறிபார்த்துச் சுடுகின்றாய்; சமத்து வத்தைக்
குழிதோண்டிப் பிதைக்கின்றாய்! முள்ளில் லாத
‘நெறிபார்த்து வா’ என்னும் நல்லோ ரைநீ
நெஞ்சினிலே மிதிக்கின்றாய்; இதுவா நீதி?
 
வேடமிட்டுத் தழைப்போரை, ஞானி போல
வெளிச்சமிட்டுப் பிழைப்போரைப், பொருள் உடம்பைக்
கூடமட்டும் கூடிப்பின் ஒழுக்கம் பற்றிக்
கூசாமல் உரைப்போரை, மதுவ ருந்தி
ஆடமட்டும் ஆடிப்பின் அருள்பா லிக்க
ஆண்டவனை அழைப்போரை எல்லாம் நன்றாய்ச்
சாடமட்டும் சாடாமல் தழுவு கின்றாய்;
சமுதாய மே! நீதி வழுவுகின்றாய்!
 
காட்டுப்பூ மணம் வீசும் என்றால், இல்லை
காகிதப்பூ மணம் வீசும் என்பாய்; வீட்டு
மாடுப் பால் சுவைகொடுக்கும் என்றால், கள்ளி
மரத்தின் பால் சுவைகொடுக்கும் என்பாய்; நல்ல
மேட்டுநில மயில்நடனம் நன்றென் றால் நீ
மிகநன்று வான்கோழி நடனம் என்பாய்;
ஏட்டுக்காய் கறிக்குதவும் என்று வீணாய்
எண்ணுகின்றாய்; போலிகளை நம்பு கின்றாய்!......
 

......நாதியற்ற பிணமாக விரும்பும் உன்னை
நான்தடுக்க வாமுடியும்? நாச மாய்ப் போ!
 
-(#தமிழ்நாடு_தினசரி_இதழ்(மதுரை)
-1963)

 #ksrpost
13-3-2020.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...