மின்னம்பலம் இணைய இதழில் ‘*விவசாயிகள் சிந்திய ரத்தம்!*’ என்ற தலைப்பில் 1980ஆம் ஆண்டின் இறுதி நாளில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்த எனது பத்தி வெளிவந்துள்ளது. அது குறித்தான இணைப்பு.
*இணைப்பு 1* - https://goo.gl/kPTQoh
*இணைப்பு 2* - https://goo.gl/2Sr6wt
#மின்னம்பலம்
#விவசாயிகள்_போராட்டம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2018
விவசாயிகள் போராட்டம்.
-----------------------------------
- வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் குறித்தான நூலை எழுத சட்டமன்ற விவாதக் குறிப்புகளை எல்லாம் தேடினேன். குறிப்பாக, ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த எனது குருஞ்சாக்குளம் கிராமத்தில், 31-12-1980இல் நடைபெற்ற மாநிலம் தழுவிய விவசாயிகள் பந்த்தில் 8 விவசாயிகள் மீது காவல்துறை சுட்டது. சட்டமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களும், பழ. நெடுமாறன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான சோ. அழகிரிசாமி போன்றோர்களெல்லாம் குருஞ்சாக்குளம் துப்பாக்கிச் சூட்டைக் கடுமையாக கண்டித்தும், நீதி விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி பேசினர். அதற்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 05-02-1981அன்று குருஞ்சாக்குளம் என்று சொல்லாமல் துரிஞ்சாபுரம் (தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமான குறிப்புகள். நாள். 04-02-1981, தொகுதி – XI, எண். 1, பக். 196) என்று பேசி சட்டமன்ற குறிப்புகளில் தவறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். அதுமட்டுமல்ல, பேராசிரியர் சரியாக குருஞ்சாக்குளம் என்று சொன்னதைக் கூட எம்.ஜி.ஆர் குறிப்பிட்டதைப் போல துரிஞ்சாபுரம் (மேற்குறிப்பிட்ட புத்தக அறிக்கை பக். 197, நாள். 04-02-1981) என்றே குறிப்பிட்டுள்ளது.
கலைஞர் அவர்கள் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதிவிசாரணை வேண்டுமென்றும், 04-02-1981 அன்று ஆளுநர் உரையின் மீது பேசும்போது வலியுறுத்தினார். அப்போது அவர் குருஞ்சாக்குளம் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். முரசொலியிலும் 06-02-1981 அன்று முதல் பக்கத்தில் அவரின் முழு பேச்சும் வெளியாகியிருந்தது. பேராசிரியருடைய பேச்சும் முரசொலியில் வெளியாகியிருந்தது. முக்கியமான பிரச்சனையில் இப்படி கிராமத்தின் பெயரை தவறாக முதலமைச்சர் பேசிவிட்டாரே என்று நெடுமாறன் மூலம் சட்டமன்ற செயலகத்தின் கவனத்திற்கும் அப்போதே கொண்டு சென்றேன். சட்டமன்றத்தில் பேசியவுடன் அன்றைக்கு தட்டச்சு இயந்திரத்தில் அந்த பேச்சை அடித்து சரிதானா என்று சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அனுப்புவது வாடிக்கை.
நெடுமாறன் அவர்களுக்கு வந்த தட்டச்சு செய்யப்பட்ட இந்த பேச்சுக் குறிப்பில் எம்.ஜி.ஆர். தவறாகக் குறிப்பிட்டதைப் பார்த்து; அன்றைக்கு சட்டப்பேரவைச் செயலராக கி.மு. அழகிரிசாமியை சந்தித்து இதை குறித்து கவனத்திற்கு கொண்டு சென்றேன். இது குறித்து அவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவணங்களில் உங்களது ஊரின் பெயர் திருத்தப்படும் என்றும், சட்டப்பேரவை குறிப்புகளில் சரியாக அச்சிடப்படும் என்று உறுதியும் அளித்தார்.
ஆனால், ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்கு கடந்தபின் ஆவணக் குறிப்புகளைப் பார்க்கும் போது, எம்.ஜி.ஆர் பேசியது அப்படியே தவறாக அச்சிடப்பட்டுள்ளது. சட்டமன்றக் குறிப்புகளில் இப்படி இருந்தால் எப்படி? இது யாருடைய தவறு. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றுகின்றோம். அங்கு தவறாக நாடாளுமன்றக் குறிப்புகளை அச்சிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகச் சட்டப்பேரவை என்பது மக்களின் இறையாண்மையை பாதுகாக்கும் அங்கமாகும். சட்டப் பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் மிக கவனமாக அணுக வேண்டும். அந்த நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் போது எந்தத் தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது. சகல வசதிகள் இருந்தும் இவ்வாறான தவறுகள் சட்டமன்றக் குறிப்புகளில் நடக்கிறது என்றால் எவ்வளவு பெரிய அபத்தம். இதையும் புரிந்து கொள்ளாமல் அரசு பரிபாலணம் நடக்கிறது என்றால் என்ன சொல்ல. இப்படி எவ்வளவு தவறுகளும், பிழைகளும் பழைய சட்டமன்ற குறிப்பேடுகளில் உள்ளதோ? இந்த ஆவணங்களைக் கொண்டு தான் நாம் மேற்கோள் காட்டுகின்றோம்.
விதியே விதியே தமிழ்சாதியே என்ற பாரதியின் வார்த்தைகள் தான் கவனத்திற்கு வந்து தலையில் அடித்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த தவறை சட்டமன்ற அலுவலகம் திருத்துவது மட்டுமல்லாமல், இனிமேலாவது இது மாதிரியான தவறுகள் நடக்காமல் சட்டமன்ற செயலகம் விழிப்புடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் நடந்த முக்கிய போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து முதல்வரே தவறாக குறிப்பிட்டதை சட்டமன்ற செயலகத்தில் நான் நினைவூட்டி கவனத்திற்கு கொண்டு வந்தும் அதை கருத்தில் கொள்ளாமல் சட்டமன்ற நடவடிக்கைகளை தவறாக அச்சிட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம்.
அன்றைக்கு நடந்த சம்பவம் குறித்து;
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு, 31-12-1980அன்று, அந்த வருடத்தின் கடைசி நாள். நானும், தி.சு. கிள்ளிவளவனும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாளும் மாலை 5 மணியளவில் பழ. நெடுமாறன் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது நான் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்த 75159 என்ற தொலைபேசிக்கு என் பெயரைக் கேட்டு பிபி டெலிபோன் கால் வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இல்லத்தின் சொந்தக்காரர் மறைந்த மீனாட்சி அவர்கள், நெடுமாறனுடைய தொலைபேசி 7657க்கு அழைத்தார். கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ளவர்கள் பதட்டமாக உங்களைக் கேட்டு போன் செய்து கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் சொன்னபோது மணி மாலை 6.30. எப்போதும் மாநிலச் செய்திகளை வானொலியில் கேட்பதுண்டு. அப்போது தூர்தர்சன் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் செய்திகள் வரும். இதுவும் சென்னைக்கு மட்டும் தான். தமிழ்நாட்டிற்கு அப்போது இல்லை.
மாநிலச் செய்திகளை செல்வராஜ் தனது கனீர் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தேன். திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள் என்று சொன்னவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன நடந்தது என்று விசாரிக்க முடியவில்லை. உடனே 07.05க்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரை வரை செல்லும். அதை பிடிக்கமுடியவில்லை. பேருந்தில் கோவில்பட்டி சென்றேன். அதற்குப் பிறகு எங்களுடைய பகுதி கலவரமாகி, மயான பூமியில் அவல நிலையில் இருந்தன. அன்றைக்கு 1981ஆம் வருட புத்தாண்டாகும்.
இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். நாராயணசாமி நாயுடு தலைமையில் அன்றைக்கு வலுவாக இருந்த தமிழக விவசாயிகள் சங்கம், 31-12-1980 அன்று பந்த் போராட்டத்தினை அறிவித்தது. குறிப்பாக எங்களுடைய கோவில்பட்டி வட்டாரம் விவசாய சங்கங்களின் கேந்திரப் பகுதி. ஒவ்வொரு விவசாயிகள் போராட்டத்திலும் யாராவது ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாவது 1972லிருந்து ஒரு கொடுமையான வாடிக்கையாகிவிட்டது.
அமைதியாக என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமத்தில் பந்த் நடத்தியபோது காவல்துறை கிராமத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்டதன் விளைவாக போராடும் விவசாயிகள் கடுமையாக வாதிட்டும், 31-12-1980 காலை 11 மணியளவில் விவசாயிகளை கண் மண் தெரியாமல் அடித்துள்ளார்கள். இது திருவேங்கடம் நகரில் நடந்தது. அப்படி அடிபட்ட விவசாயிகளை அரவணைத்து ஆறுதல் சொல்லி அவரவர் கிராமங்களுக்கு திரும்ப்ச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ராமசுப்பு நாயக்கர் த/பெ, மல்லப்ப நாயக்கரை போலீசார் அழைத்து சென்று அடித்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் சோளம், உளுந்து போன்றவற்றை காயவைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அடித்து காயப்படுத்திவிட்டனர். இப்படி திருவேங்கடம் வட்டாரம் முழுவதும் உள்ள விவசாய கிராமங்களை துவம்சம் செய்து வந்தனர். திருவேங்கடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எங்கள் கிராமத்தில் என்றைக்கும் விவசாயிகள் சங்கம் வலுவாக இருக்கும். எனவே இந்த கிராமத்தில் காவல்துறை அத்துமீறி விவசாயிகளை அடித்து துவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காவல் துறையினர் மாலை 4 மணியளவில் குருஞ்சாக்குளம் கிராமத்திளை ஒரு பதற்றத்தை உருவாக்கியபோது சாத்துரப்ப நாயக்கர் இங்கே வரவேண்டாம், நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாத்துரப்ப நாயக்கரின் நெற்றிப் பொட்டுக்கு கீழேயே காவல் துறையினரின் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து அங்கேயே சிதறி பிணமாகி விழுந்து அந்த சாலையில் இரத்தம் பீறிட்டு ஓடியது. அவர் அருகேயிருந்த தம்பி ரவீந்திரன் இருபது வயது தான். அந்த பையனின் தொப்புளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். அதே நேரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து போது அவர் பாய்ந்து சென்று காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தார். ஆனால் கன்னாபின்னாவென்று சுட்டனர்.
ஏற்கனவே சாத்துரப்ப நாயக்கரின் மீது பாய்ந்த துப்பாக்கி ரவைகளால் அதிர்ச்சியடைந்த மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் மேலும் மேலும் கிராம மக்களின் மீது துப்பாக்கி ரவைகளை பாய்ச்சி அன்றைக்கு மனித வேட்டையை ஆடியது எம்.ஜி.ஆர் ஆட்சி. மாலை 5 மணி வரை ஒரே துப்பாக்கி ரவைகள் வெடித்த காற்றில் கலந்து புகை மண்டலமாக இருந்ததாகச் சொன்னார்கள். இந்த ரவீந்திரனுக்கு முதலுதவி கூட கொடுக்காமல் மாலையில் 3 மணி நேரம் கழித்து 7 மணிக்கு மாட்டு வண்டியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவீந்திரன், ராணுவ வீரர் ருத்திரப்பசாமி, அழகர்சாமி, ராமசாமி நாயக்கர், ரெங்கசாமி நாயக்கர், கணபதி ஆகியோர் பேருந்துகளில் இல்லாமல் மாட்டுவண்டியில் 3 மணிநேரம் இரவில் பயணித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் முறையான சிகிச்சை பெற்றனர். அவர்களில் ரவீந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் அன்றிரவே இறந்தார். மற்றவர்களை பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளை அநாதைப் பிணங்கள் போல 03-01-1981அன்று பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மயானத்தில் உறவினருக்கு கூட சொல்லாமல் காவல் துறையினரே அடக்கம் செய்து பிரேதங்களின் சொந்தக்காரர் இல்லாமல் எரியூட்டியது தான் கொடுமையிலும் கொடுமை. ஆனால் அன்றைக்கு ஆளுங்கட்சியான எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதை குறித்தான ஏற்பாடுகளிலும், அந்த மாநாட்டில் ஜெயலலிதா நாட்டியமாடும் நிகழ்விலும் அரசு நிர்வாகம் மும்முரமாக இருந்தது.
இவருக்கு முன் சுடப்பட்டு நெடுஞ்சாலையில் சாகடிக்கப்பட்ட சாத்துரப்ப நாயக்கரின் பிரேதம் முதல் நாள் மாலை 4 மணியிலிருந்து மறுநாள் முன்பகல் வரை அப்படியே கிடந்தது. இடைப்பட்ட நேரத்தில் அந்த பிரேதத்தை எடுத்து ஊர் பொதுக் கட்டிடத்தில் வைத்திருந்தனர். அடக்கம் செய்ய யாருமில்லை. ஒரே குழப்பமான, வேதனையான, இருக்கமான நிலையில் அந்த கிராமம் இருந்தது. திரும்பவும் போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் நடந்தது 31-12-1980. ஆனால், சாத்துரப்ப நாயக்கர், ரவீந்திரனுடைய பிரேதங்கள் 02-01-1981 அன்று (இரண்டு நாள் கழித்து) ரவீந்திரனுடைய தாயார் கேட்ட போது போலீசார் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர்
சாத்துரப்ப நாயக்கர் (55),
ரவீந்திரன் (17) த/பெ பெருமாள் சாமி,
இரா.வரதராசன் (30) த/பெ இராமசாமி நாயக்கர்,
ரெ.வெங்கடசாமி (22),
ராமசாமி நாயக்கர் (60),
ர. வெங்கடசாமி நாயக்கர் (50),
பெ.இரவிச்சந்திரன்
என 8 விவசாயிகளை என்னுடைய கிராமத்தில் அன்றைக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் காவல் துறையினர் சுட்டுத் தள்ளினர். இப்படி அநாதைகளாக விவசாயிகளுடைய பிணங்கள் சாலைகளிலும் சுட்டுத் தள்ளப்பட்டுக் கிடந்தது எவராலும் சகிக்க முடியாத காட்டு மிராண்டித்தனமாக அன்றைக்கு நடந்து கொண்டது கொடுமையிலும் கொடுமை.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்ட மந்திரம் என்ற காவலரை அடக்க முடியாத ஆத்திரத்திலும், வேதனையிலும், துக்கத்திலும், பொறுக்க முடியாமல் விவசாயிகள் கல்லால் அடித்து சாகடித்தனர். காவலர் மந்திரம் அதே இடத்தில் இறந்தார். இந்நிலையில் கோவில்பட்டி – இராஜபாளையம் (வழி. திருவேங்கடம்), கோவில்பட்டி - சங்கரன்கோவில் (வழி. திருவேங்கடம்), திருவேங்கடம் – விருதுநகர் (வழி. சிவகாசி), திருவேங்கடம் – கழுகுமலை (வழி. குருஞ்சாக்குளம், குருவிக்குளம்) ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளே கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை இயக்கப்படவில்லை. அந்த காலக்கட்டத்தில் நாராயணசாமி நாயுடு தொலைப்பேசியில் இது குறித்து அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். மறைந்த சாத்துரப்ப நாயக்கர் விவசாய சங்கத்தின் முன்னோடி, பொதுக்கூட்டங்களில் கடுமையாக கிராமத்து பாணியில் பேசுவார். என்னுடைய மாமனார் கு. வரதராஜன் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் விவசாய சங்கத்தின் முன்னோடி ஆவார்.
அதே போல மறைந்த சாத்துரப்ப நாயக்கருடைய தம்பி ராமானுஜம் விவசாயிகள் சங்கத்தின் மேடைகளில் பேசுவார். அதே போல வெல்லாபுரம் சுப்பாநாயக்கர், மேலப்பட்டி ஆர்.பி.இராமசாமி, வெம்பக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் கங்கர்செவல்பட்டி பெருமாள்சாமி, டி. சண்முகபுரம் சண்முகம் போன்ற பலரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு துணையாக களத்தில் நின்றார்கள். அன்றைக்கு விவசாயச் சங்கப் போராட்டத்தில் களத்தில் நின்றவர்கள் நீண்ட பட்டியல் ஆகும்.
நெல்லை மாவட்ட தென்பகுதியில் இராதாபுரம், வள்ளியூர், சாத்தான்குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் சுப்பிரமணிய நாடார், பால்பாண்டியன், அதிசய மணி போன்ற பலரும் விவசாயச் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்று நினைவுகொள்ள வேண்டியவர்கள். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதை என்னுடைய விவசாயச் சங்கப் புத்தகத்தில் தொகுத்து வருகின்றேன்.
அன்றைக்கு ஊடகங்களோ, வார இதழ்களோ, புலனாய்வு பத்திரிக்கையிசம் இல்லாத காலத்தில் இதெல்லாம் நடந்தன. இன்றைக்கு இதே பிரச்சனை நடந்திருந்தால் என்ன மாதிரியான நிலைமைகள் இருக்கும். 38 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அன்றைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்கள், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். அழகிரிசாமி அவர்கள் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்கள். ஓரளவு நான் கிராமத்திற்கு சென்று அந்தக் காலக்கட்டத்தில் ஆறுதல்படுத்த முடிந்தது. ஆண்கள் யாரும் இல்லாமல் மயானமாக காட்சியளித்தது. திருவேங்கடத்தில் வைகோ தலைமையில் திமுக சார்பில் கண்டனக் கூட்டம் 18-01-1981இல் நடந்தது. பேராசிரியர் இந்த கலவரப் பகுதி கிராமங்களை பார்வையிட்டு கண்டன உரையை ஆற்றினார். அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தாழை கருணாநிதியும் கலந்து கொண்டார். இதற்கிடையில் விவசாய சங்கத் தலைவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருந்தார். முரசொலி மாறன், வைகோ அவர்கள் இந்த துப்பாக்கிச் சூடு குறித்தான பிரச்சனையை பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.
இதே நாளில் விவசாயிகள் திருத்தணி அருகேயும், அன்றைய தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வேப்பூரிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து சட்டமன்றத்தில் 04-02-1981அன்று தலைவர் கலைஞர் எம்.ஜி.ஆரை நேரெதிரே நின்று விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயம் தானா என்று குற்றஞ்சாட்டி கேட்டார். அவரோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவில்பட்டி எஸ்.அழகிரிசாமியும் இதை குறித்து கடுமையாக அரசை சாடியும் குரல் கொடுத்தார். எம்.ஜி.ஆர் இதற்கு பதிலளிக்கும் போது ஓய்வு பெற்று ராணுவத்தினர் அந்த கிராமத்திலே உள்ளார்கள். காவல் துறையினருக்கு கடுமையான தடைகளை உண்டாக்கி உள்ளார்கள் என்று ஒரு சின்ன குழி வெட்டப்பட்ட கருப்பு-வெள்ளை புகைப்படத்தையும் காட்டினார். அவர்கள் இராணுவத்தினர் போல விவசாயிகள் காவல் துறையிடம் சண்டை போட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்று சட்டமன்றத்தில் கூறினார்.
நீதி விசாரணை நடத்தவும் தயார் என்று அன்று அறிவித்தார். அதற்கு முன் எதற்கெடுத்தாலும் நீதி விசாரணை என்று கொக்கரிக்கிறார்களே என்ற எம்.ஜி.ஆர் பின்னர் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழ. நெடுமாறன் அவர்கள் பார்வையிடவும் அப்போது வந்தார். சட்டமன்றத்தில் இதை குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தினை 23-01-1981 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சோ. அழகிரிசாமி கொடுத்த போது, பேரவைத் தலைவர் ஆளுநர் உரையாற்ற இருப்பதால் கவன ஈர்ப்புக்கு அனுமதி வழங்க முடியாதென்று 1397/81-1 ச.பே. (ம.2), 23-01-1981 என்று எண்ணிட்ட கடிதத்தின் மூலமாக பேரவைத் தலைவர் நிராகரித்தார்.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை கடுமையாக கண்டித்தனர். அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் (எம்.பி.எஸ்), ஜனதா கட்சித் தலைவர் முகமது இஸ்மாயில் போன்ற அனைத்து கட்சிகளும் நீதி விசாரணை அமைக்க கோரியும் எம்.ஜி.ஆர் எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை. இப்படியான இந்த பிரச்சனை குறித்து சொல்லிக் கொண்டே போனால் நீண்ட பதிவாகிவிடும்.
இது குறித்து அன்றைய ஆங்கில தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் விரிவான செய்திகளை அந்த காலக்கட்டங்களில் வெளியிட்டது. அன்றைக்கு ஆங்கில இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து அன்றைய சிறப்புச் செய்தியாளர் எம். நாராயணன் விரிவாக 3,4 பத்திகள் அளவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விரிவாக செய்திகளை சேகரித்து எழுதியது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பார்வைக்கு செல்ல வசதியாக இருந்தது. அதே போலவே தினமணி, தினத்தந்தி, தினமலர், தினகரன் ஏடுகளும் தொடர்ந்து விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. முரசொலியில் வைகோவின் அறிக்கையையும், கலைஞரின் சட்டமன்ற பேச்சும், பேராசிரியரின் திருவேங்கடத்தின் பேச்சும் அந்த காலக்கட்டத்தில் வெளியாகியிருந்தது.
குறிப்பாக கோவில்பட்டி, சங்கரன்கோவில் அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்தது. முதல் துப்பாக்கிச் சூடு கோவில்பட்டி பழைய அப்பனேரி கந்தசாமி நாயக்கர் (55) துவங்கி சாத்தூர் வெத்தலையூர் சீனிவாசன், இறுதியாக 1993இல் ஜெயலலிதா ஆட்சியில் இருதய ஜோசப் ரெட்டியார், வெங்கடாசலபுரம் எத்திராஜலு நாய்க்கர் வரை காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்கப்பட்டனர். இது தான் விவசாயிகளுடைய இறுதியாக நடந்த துப்பாக்கிச் சூடு துயரச் சம்பவம் ஆகும்.
விவசாயிகள் போராட்டம் 1989இல் நடந்த போது சங்கரன்கோவில் அருகேயுள்ள பணவடலியில் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தச் சென்ற பணவடலி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அய்யாபழம் மீது கல்லாலும், ஆயுதங்களாலும் அடித்து கொன்றுவிட்டார்கள் என்று நாராயணசாமி நாயுடு, பரமசிவம் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கோவையில் கைது செய்யப்பட்டு மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வழியாக இரவில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதெல்லாம் நினைவுகளாக மனதில் எழுகின்றது.
இந்த சம்பவங்கள் நடந்தது எல்லாம் தை மாதம் பிறப்பதற்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் நெல் அறுவடை செய்ய வேண்டும். நெல் அறுவடை செய்ய முடியாமல் கிட்டத்தட்ட 1985 வரை ஒவ்வொரு அடிமைகள் போல, அகதிகள் போல வாழ்ந்தது எனக்கெல்லாம் கண்ணீரினை வரவழைத்தது. அடியேன் பொது வாழ்க்கையில் இருந்தாலும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மூலமாக தான் இதை குறித்தான விவரங்களை பேசி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நிலையில் இருந்தது. இதே காலக்கட்டத்தில் தான் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து அரசின் ஜப்தி நடவடிக்கைகளையும் ஓரளவு தடுத்து நிறுத்தி, கடன் நிவாரணங்களையும் பெற்றுத் தர முடிந்தது.
விவசாயச் சங்கப் போராட்டத்தில் 1972லிருந்து அக்கறையும் ஆர்வமும் எடுத்து நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமிக் கவுண்டர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கரூர் முத்துசாமிக் கவுண்டர், செங்கல்பட்டு மாவட்டம் புழம்பாக்கம் முத்துமல்லா ரெட்டியார், வி.கே. ராமசாமி, திருத்தணி வழக்கறிஞர் சின்னிகிருஷ்ணய்யா, தருமபுரி சின்னசாமி, பொன்னேரி வாசு போன்ற பலரின் பணிகளையெல்லாம் மறக்க முடியாது. இப்படி ஒரு நீண்ட பட்டியலை நாராயணசாமி நாயுடுவின் தளபதிகளாக ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்தார்கள். திரு. செல்லமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழனிச்சாமி, மயில்சாமி போன்ற பலரின் பணிகளும் நினைவிற்கு வருகின்றன. இந்த இயக்கம் கடுமையான உழைப்பில், தியாகங்களில் வளர்ந்த இயக்கம். அந்த இயக்கத்திற்கான உரிய அங்கீகாரத்தை தமிழக மக்கள் வழங்கவில்லை.
இந்த இயக்கம் வலுப்பட்டிருந்தால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டு இன்றைய விவசாயிகள் நிம்மதியாக, கௌரவமாக இருந்திருக்கக் கூடும். நாராயணசாமி நாயுடு தனது கள உழைப்பால் அனைவரையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுடைய ஒற்றுமையை நிலைநாட்டி ஒரு ஆளுமையாக திகழ்ந்தார். ஆனால் அவரை காலமும், இயற்கையும் 1984இல் தேர்தல் நேரத்தில் பறித்துக் கொண்டது. கோவில்பட்டி பயணிகள் விடுதியின் பின் அறையில் ஓய்வில் இருக்கும் போதே நெஞ்சுவலியில் உயிர் பிரிந்தது. அங்கு செல்லும் போதெல்லாம் அவரின் முகம் நினைவில் வரும்.
கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒரு சிலை எழுப்ப பல்வேறு முயற்சிகள் செய்தாலும் ஆட்சியாளர்கள் இவரின் முக்கியத்துவம் தெரியாமல் நடந்து கொள்வதும், அதை குறித்து பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்ற நிலைப்பாடு தான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இந்த சிலை அமைக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. மறைந்த நாராயணசாமி நாயுடு ஒரு ரோல் மாடல். இவருடைய போர்குணத்தை கொண்டுதான் வடஇந்தியாவில் திக்காயத், மராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் செங்கால் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்டராவ் என்று பலரும் இவருடைய பாதையை மாதிரியாக கொண்டு விவசாயிகளின் உரிமைகளை காக்க அவர்களுடைய மாநிலங்களில் போராட்டக் களத்தை அமைத்தனர்.
திரும்பவும் செய்திக்கு வருகின்றேன். எங்கள் கிராமத்தில் 1981இல் தைப் பொங்கல் இல்லை. பிப்ரவரி 20க்கும் மேல் தான் அனைவரையும் தேடிப்பிடித்து கிராமங்களுக்கு அனுப்பக்கூடிய பணிகளை செய்தோம். அதன்பிறகு தான் இயல்பு வாழ்க்கை கிராமத்தில் திரும்பியது. அப்போது அரசியலில் ஒரு பக்கம் இருந்தாலும், விவசாய சங்கத்தில் நாராயணசாமி நாயுடுவுடன் களப்பணியிலும் அடியேன் இருந்தேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஜி.ரங்கா விவசாயத்தை நடத்துப்பா., அரசியல் எதற்கு? என்று வேடிக்கையாக சொன்னதுமுண்டு.
அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஜெராக்ஸ், பேக்ஸ், கைபேசி, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி கிடையாது. வானொலியில் தான் செய்திகள் கேட்க வேண்டும். இந்த நிலையில் அன்றைக்கு காட்டுமிராண்டித்தனமாக எம்.ஜி.ஆர் அரசு விவசாயிகள் மீது நடந்து கொண்ட போது அவர்களை பாதுகாக்க எவ்வளவோ சிரமங்கள் பட்டோம். அதை சொல்லி மாளாது.
இந்த சம்பவம் கருப்பு – வெள்ளை புகைப்படங்களாக திருநெல்வேலி பத்திரிக்கையாளரிடம் இருந்து வாங்கி வைத்திருந்தேன். ஆனால், விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் என்னோடு மயிலாப்பூர் இல்லத்தில் தங்கியிருந்தபோது, பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, என்னுடைய வீடு காவல் துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த புகைப்படங்களை எல்லாம் தூக்கிச் சென்றுவிட்டனர். காமராஜர், இந்திரா, கலைஞர், கண்ணதாசன், தேவராஜ் அர்ஸ் போன்ற பலருடன் எடுத்த அரிய கருப்பு - வெள்ளை புகைப்படங்களை அள்ளிச் சென்றனர். இதைப் திரும்பப் பெறவேண்டுமென்று அன்றைய காவல் துறை உயரதிகாரி மோகன்தாசிடம் கடுமையான சண்டையிட்டும் பெற முடியவில்லை என்பது தான் இன்றைக்கும் மனதை வேதனைப்படுத்துகிறது.
ஏதோ முடிந்ததை செய்தோம் என்ற ஆறுதல். காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. ஆனால் வரலாற்றுப் பதிவுகளில் எதிர்காலத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியவேண்டும் என்பதால் தான் எங்கள் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஓரளவு சுருக்கமாக இங்கே வைத்துள்ளேன்.
செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர்,
இணையாசிரியர், கதை சொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com
No comments:
Post a Comment