தாமிரபரணி போற்றுதும்.
---------------------------------
பொருநை போற்றுதும்.
---------------------
தாம்ரபர்ணீம் து கெளந்தேய கீர்த்தயிஷ்யாமி தாம் ஸ்ரணு
யத்ர தேவைஸ்தபஸ்தப்தம் மஹதிச்சத்பிராச்ரமே
(ஸ்ரீ வியாச மஹாபாரதம், வன பர்வம், தீர்த்த யாத்ர பர்வம், ஸ்லோகங்கள் 14-15)
(குந்தி புதல்வனே, தாம்ரபர்ணியின் பெருமையைச் சொல்கிறேன், கேள். முக்தியடையும் ஆசையில், தேவர்களும் இங்குத் தவம் செய்துள்ளனர். வனத்தில் வாசம் செய்கையில், யுதிஷ்டிரருக்கும் பிற பாண்டவர்களுக்கும் குரு தெளம்யர் கூறுவது)
நம்மாழ்வாரால் பொருநல் என்றும், கம்பநாட்டாழ்வாரால் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை என்றும், சேக்கிழார் பெருமானால் தண்பொருந்தம் என்றும், குமரகுருபரரால் அங்கயற்கண்ணியின் எல்லையில்லாக் கருணைபோல் பொங்கும் பொருநை என்றும், டாலமி காலத்து கிரேக்கர்களால் சோலன் என்றும், மகாகவி பாரதியாரால் தமிழ் கண்டதோர் வையை பொருநை என்றும் போற்றப்பட்டுள்ள தாமிரவருணித் தாய், பொதியத்தில் பிறந்து புன்னைகாயலில் கடலரசனோடு சங்கமிக்கிறாள்.
கொற்கையின் முத்துக்கள், கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்கள், வடகரையிலும் தென்கரையிலும் நின்று அருள்பாலிக்கும் நவதிருப்பதி-நவகைலாயத் திருக்கோயில்கள், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, திருவைகுண்டம், திருச்செந்தூர், பத்தமடை, குற்றாலம், கழுகுமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட உன்னத ஊர்கள், ஆதிச்சநல்லூர் ஆதிநாகரிகம், தமிழும் இசையும் ஆன்மிகமும் பொங்கிப் பிரவகித்த பாண தீர்த்தகல்யாண தீர்த்தபாம்பன் அருவிப் பாய்ச்சல்கள், விடுதலைப் போரின் விழுப்புண்கள் என்று தாமிரவருணியின் பெருமைகள் ஏராளம் ஏராளம்! ரத்ன பரீக்ஷ என்ற தலைப்பின்கீழ், நவரத்தினங்கள் குறித்து விவரிக்கிற கெளடில்ய சாணக்யர், மஹேந்திர மலையை ஒட்டிய கடலில் கிடைக்கும் முத்துக்களை மஹேந்திரம் என்றும், பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் கிட்டும் முத்துக்களை பாண்டியகவாடகம் என்றும் விவரித்தாலும், தாமிரவருணி ஆற்று முகத்துவாரத்தில் கிடைப்பனவற்றைத் தனிச் சிறப்போடு தாம்ரபர்ணிகா என்று பெருமைப்படுத்துகிறார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ விளம்பி ஆண்டில், தாமிரவருணித் தாய், மஹா புஷ்கரப் பெருவிழா காண்கிறாள். கொண்டாட்டத்திற்குக் கேட்க வேண்டுமா?
ஈதோ தண்பொருநை!
தாமிரவருணி என்கிறார்களே, இவளுக்கும் தாமிரத்துக்கும் (செப்பு என்னும் உலோகம்) என்ன தொடர்பு? பொருநை என்னும் பெயரின் பொருத்தம் என்ன? திருவிடைமருதூர் போல், திருப்புடைமருதூர் என்று ஓர் ஊராமே! அரவங்குளத்து ஜடாயு தீர்த்தக் கரைதான், ஜடாயுவிற்கு ராமபிரான் அந்திமக் கிரியைகள் செய்த இடமா? திருவாரூர்த் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பதுபோல், பாபநாசப் படித்துறை அழகு என்பது வழக்கமோ! திருவள்ளூர் வீரராகவப் பெருமாளின் அடியார்கள் குடியேறிய இடம், (திருநெல்வேலி) வீரராகவபுரம் ஆகிவிட்டதோ? பூலித்தேவன், கட்டபொம்மன் தொடங்கி, வ.வு.சி, பாரதியார் தொடர்ச்சியாக, சுவாமி சிவானந்தர், (கோடகநல்லூர்) சுந்தர சுவாமிகள், (மனோன்மணியம்) சுந்தரனார், வேதாந்த பாகவதர், வி வி சடகோபன், ரசிகமணி டிகேசி, சென்னிகுளம் ரெட்டியார் என்று எத்தனை எத்தனை மாமனிதர்கள் இவளின் கரையில்!
#பொருநை #தாமிரபரணி #திருநெல்வேலி #நிமிர_வைக்கும்_நெல்லை #டாக்டர்_சுதா_சேஷய்யன் #Porunai #Tamirabarani_River #Tirunelveli #Nimira_Vaikkum_Nellai #Dr_Sudha_Seshaiyan #KSRadhakrishnan_Postings #KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-08-2018
No comments:
Post a Comment