Wednesday, August 8, 2018

தலைவர் கலைஞர் நெடும் பயணம் புறப்பட்டார் .

தலைவர் கலைஞர்  நெடும் பயணம் புறப்பட்டார் .

திக்கற்றவர்களின் திசையே..
தெற்கில் கிளம்பிய சூரியன் மாலை நேரத்தில் கிழக்கில் மறையும் வினோதம். 
————————————————
சற்று நேரத்தில் தலைவருடைய இறுதி பயணம் இராஜாஜி மண்டபத்திலிருந்து கடற்கரையிலுள்ள அண்ணா சதுக்கத்தை நோக்கி செல்லவிருக்கிறது. எவ்வளவோ பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகிறது. இராஜாஜி மண்டபம் முன்பு ஆங்கிலேயர்களால் விருந்தினர் மண்டபம் (Banquet Hall) என அமைக்கப்பட்டு 200 ஆண்டுகளை கடந்துள்ளது. நீண்ட படிக்கட்டுகள். கணமான தூண்கள் என்ற கம்பீரக் கட்டிடத்திலிருந்து தலைவர் கலைஞருடைய உடல் நல்லடக்கத்திற்கு அவரை நேசித்த உடன் பிறப்புகளின் கண்ணீர்த் துளியோடு செல்லவிருக்கிறது. அவரும் விடை கேட்டுவிட்டார். நாமும் அவரை விட்டுப் பிரியவேண்டியத் தருணம். ஒருசில மணிகள் தான். 

கடந்த நவம்பர், 2014இல் என் துணைவியார் இறந்தபோது, நான் தாலியெடுத்துக் கொடுத்து நீங்கள் வளமாக வாழ்வீர்கள் என்று வாழ்த்தினேன். இப்போது உன் மனைவி இறந்தது வேதனை தருகிறதப்பா. அதுவும் இந்த வயதில் உனக்கு இப்படியொரு பேரிழப்பா. எத்தகைய இழப்பானாலும் தேற்றிக் கொள். நான் தான் உனது திருமணத்தை நடத்தி வைத்தேன். எனவே நானே உன் வீட்டிற்கு நேரில் வந்து மலரஞ்சலி செலுத்துகிறேன் என்று கைபேசியில் பேசினார். நான் மறுத்து நீங்கள் எனக்கு ஆறுதலாக பேசியதே போதும் நேரில் சிரம்ம எடுத்து வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். எனது மனைவியின் மரணத்திற்கு நீண்டதொரு அறிக்கையை கலைஞரும், பேராசிரியரும் வெளியிட்டனர். தலைவர் கலைஞரின் அந்த அறிக்கையில் விடுதைலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் முதன்முதலில் சந்தித்ததை குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், தளபதி, துரைமுருகன் உள்பட பல முன்னாள் மூத்த அமைச்சர்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தியதெல்லாம் மறக்க முடியாது. அத்தகைய அன்பு செலுத்திய தலைவர் பிரியும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

இப்படி ஒரு ஆளுமை இனி கிடைப்பாரா என்று தெரியவில்லை. அவருடைய இழப்பு பெரிய ரணத்தையும் இழப்பையும் மனதிற்கு தருகிறது. எவ்வளவு சம்பவங்கள், எவ்வளவு நினைவுகள். அவை யாவும் மனதில் பொதிந்த மலரும் நினைவுகளான பொக்கிஷங்களாகிவிட்டது. 

இதே ராஜாஜி அரங்கில் அக்டோபர் 02, 1975இல் பெருந்தலைவர் காமராஜருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தலைவர் கலைஞரை பார்த்தேன். அவர் அன்று முதல்வராக இருந்தார். இந்திரா காந்தி வந்தார். பெருந்தலைவர் காமராஜர் என்னை அன்போடு கோவில்பட்டி தம்பி என்று அழைப்பதுதான் வாடிக்கை. அன்றைய நினைவுகள் இன்றைக்கு நினைவுக்கு வந்தன. எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் 24இல் மறைந்தபோது, அஞ்சலி செலுத்த வந்தேன். அங்கு ஜெயலலிதாவை பீரங்கி வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிகழ்வுகளை நேரில் கண்டேன். எம்.ஜி.ஆரை பிரபாகரனும், நானும் நெருக்கமாக பல சமயங்களில் சந்தித்ததுண்டு. எம்.ஜி.ஆர்., ‘என்ன வக்கீல்’ என்று உரிமையோடு அழைப்பார். 

அதேபோல, கலைஞர் என்னை எப்போதும் ராதா என்று தான் அன்போடு அழைப்பார், ராஜாஜி மண்டபத்தில் இந்த மூவரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நிகழ்ந்தன என்பது மனதிற்குள் என்றைக்கும் நீங்கா நினைவுகளாக இடம்பெறும். இம்மாதிரியான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் எவருக்கும் கிட்டாத நிலையில், சோகமான செய்தியாக இருந்தாலும், இந்த நிகழ்வுகளை காணக்கூடிய வாய்ப்புகளை காணக்கூடிய அருட்கொடையாக விளங்கின. வாழ்க கலைஞரின் புகழ்.

#கலைஞர் 
#பொது_வாழ்வு 
#கலைஞருக்கு_நிகர்_கலைஞரே
 #அரசியல் 
#ripkarunanithi
#Public_Life 
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-08-2018










No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...