Saturday, August 25, 2018

தமிழ் தேசியம், வந்தேறிகள் issues......

minnambalam.com சிறப்புக் கட்டுரை: தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இன்று தமிழ் தேசியம் குறித்த விவாதங்கள் பல தளங்களில் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டில் வசிக்கும் “வந்தேறிகள்” குறித்த குரலும் உரக்க ஒலிக்கிறது. இந்தச் சூழலில் தேசிய இனங்கள், தமிழ் தேசியம், சுயாதிகார உரிமை ஆகியவை பற்றியெல்லாம் திறந்த மனதோடு விவாதிக்க வேண்டியுள்ளது.

தேசிய இனங்களின் தோற்றம்

தேசிய இனங்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வரலாம். உலக நாகரிகங்கள் தோன்றியவுடன் மானிடம், இனம் இனமாகக் கூடி வாழ்ந்தது. அப்படிக் கூடி வாழ்ந்த இனங்களுக்குள் சில பொதுவான குணங்களும், தன்மைகளும், உறவுமுறைகளும் ஏற்பட்டன. சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியபோது, தங்கள் இனம், தங்கள் மண் என்ற பார்வைக்குத் தள்ளப்பட்டன. அந்த மக்களிடையே பேச்சு வழக்கில் மொழி தோன்றியது. இப்படியான சில காரணிகளால் கூட்டாகக் கூடி வாழ வேண்டிய நிலைக்கு இயற்கை தள்ளும்போது பொது அமைப்பு ரீதியான சில வரையறைகளுக்குட்பட்டு ஓர் இனம், தங்களைச் சார்ந்த மண் (தேசம்) வாழ உட்படுகிறது. அந்த இனம், மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர் நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது.

ஒரு நாட்டில் பல தேசிய இனங்கள்

ஒரு நாட்டில் நிலையாகக் குடி வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்துக்குட்பட்டது. உதாரணத்துக்கு கனடாவில் கியூபிக் பிரச்சினையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரெஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டுவிடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

ஒரு தேசிய இனத்தைப் பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இதைக் குறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒரு தேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள் இருப்பதால் அது ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்று கருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.

மதமும் தேசிய இனமும்

அரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர் என்றும், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர் என்றும், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுக்கள் எனவும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைமைகள், இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்லர் என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது.

தேசிய இனத்திற்கு மொழி, மரபு ரீதியான பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பவையே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (State) அழைக்கப்படுகிறது. நாடு (State) என்பது அரசு. அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தைக் குறிப்பிடுவதாகும். அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் (Nation) என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாச்சாரம் கொண்டதாக இயங்க வேண்டும்.

ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதுவும் இல்லை என ஜான் ஹட்சின்சன், ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் (Nationalism) என்ற ஆங்கில நூலில் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிப் பன்மையில் ஒரு குடையின் கீழ் கூட்டாட்சி என்று சொன்னாலும், ஒற்றையாட்சிதான் இங்கு நடக்கிறது.

தமிழகத்தின் வரலாறு

தொல்காப்பியர் குறிப்பிட்டவாறு, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’’ தமிழகத்தின் எல்லைகள் அக்காலத்திலேயே வரையறுக்கப்பட்டது. இந்த எல்லைகள் அமைந்த இந்த நிலையை ஒரே மொழி, இலக்கியச் செறிவுகள், தொன்மையான இனப் பண்பாடுகள் ஒருங்கிணைந்து அமைந்த இந்த மண்ணில் அரசு (Government) அமைந்து நிர்வாகத்தைப் பரிபாலிக்க வேண்டும். இதன் கீழ் குடிகள் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைகள் சீராக்கப்படும். இப்படித்தான் தேசிய இனங்கள், பொதுப் பழக்கவழக்கத்தில் தங்களுக்காகவே அமைத்துக்கொள்கின்ற நாடு, அரசு ஆகும்.

அதற்கு அடிப்படை ஒரே மொழியும், கலாச்சாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம். இது நேஷனாலிட்டி என (Nationality) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தமிழ் தேசியத்தின் நிலை என்ன?

தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்து, தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ்மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது. ஆதியில் தமிழ்மொழி காலத்தில் வழக்கத்தில் இருந்த ஹீப்ரூ, லத்தீன் போன்ற மொழிகள் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. தமிழ்மொழி இன்னமும் கன்னித் தன்மையோடு சிரஞ்சீவியாகப் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் கீழ் வட்டார வட்டாரங்களாக நிர்வாகம் இருந்தது. ஒரு குடையின் கீழ் காஷ்மீரிலிருந்து தென்குமரி வரை யாரும், எந்த மன்னரும் ஆட்சி செய்யவில்லை. ஆங்கிலேயர் வருகை, விடுதலைப் போராட்டம் முடிந்து நாடு விடுதலை பெற்ற பின் பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியக் குடியரசு என்று அமைந்தது. விடுதலை பெற்று 71 ஆண்டுகளாகியும் இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களில் பிரச்சினைகளும், வட்டார ரீதியிலான புறக்கணிப்புகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

வரலாற்றில் இமயமும் குமரியும்

தொல்காப்பியப் பாயிரம் தமிழகத்தின் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய்க் கல்லெடுத்தது, யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரீகர்களும் புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்தது ஆகியவை எல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலே சங்க இலக்கியங்கள், இமயம் - பொதிகை – குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று இமயம் முதல் குமரி வரை என்றும் இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுவதையும் காண முடிகிறது.

“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே…” (புறநானூறு 2)

“பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய…” (புறநானூறு 39)

“பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன….” (புறநானூறு 369)

“தென்குமரி வடபெருங்கல்….” மதுரைக் காஞ்சி (வரி 70)

“பேரிசை இமயம் தென்னங்குமரியோடு ஆயிடை…..” பதிற்றுப்பத்து (பாடல் 11)

என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுடன்

சிறுபாணாற்றுப்படை (வரி 48),

நற்றிணை (பாடல் 356 வரி 3, பாடல் 369 வரி 7),

குறுந்தொகை (பாடல் 158 வரி 5),

பரிபாடல் (பாடல் 1 வரி 51, பாடல் 5 வரி 48),

பரிபாடல் திரட்டு (பாடல் 1 வரி 77),

அகநானூறு (பாடல் 127 வரி 4, பாடல் 265 வரி 3)

இவ்வாறான தரவுகளால் இந்தியாவின் வடபுலத்துக்கும், தென்புலத்துக்குமான தொடர்புகள் இருந்துவந்துள்ளதாகச் சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதை மேலே குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

நதி நீர் தாவாக்கள், சமன்பாடற்ற நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களின் செயல்பாடு என்பதில் மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்தியாவில் இந்தி எதிர்ப்புக்குத் தமிழ்நாடு 1965இல் கிளர்ந்து எழுந்தது. ஆந்திரத்தில் தெலங்கானா போராட்டம், காஷ்மீர் சிக்கல், பஞ்சாப் பிரச்சினை, அசாம் மாணவர் போராட்டம், வடகிழக்கு மாநிலங்களின் உரிமை மீட்பு அமைப்புகளின் செயல்பாடுகள் எல்லாம் நாம் கவனித்தோம்.

பல மாநிலங்களும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகின்றன. இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி என்று நாம் வகுத்துக்கொண்டாலும் அந்தக் கூட்டாட்சியின் வீரியம் செயல்பாடுகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், கூட்டாட்சியா அல்லது சரிபாதிக் கூட்டாட்சியா என்பதைக் குறிப்பிடவில்லை.

புதிய அதிகார மையங்கள்

இப்போது நிதி ஆயோக் என்ற அமைப்பு உள்ளது. இதற்கு முன் இது திட்டக் கமிஷனாக இருந்தது. இதைக் குறித்து ஒரு வார்த்தைகூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. என்றாலும் ஒரு சூப்பர் கேபினெட்டாக டெல்லியில் இது இயங்கிவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தன் விருப்பத்திற்கேற்றவாறு வினாக்களை எழுப்பித் தான்தோன்றித்தனமாகவும் நடந்துகொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிதி கமிஷனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், நிதி ஆயோக்கிற்கு உள்ள அதிகாரங்கள் நிதி கமிஷனுக்குக் கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு மாநில அரசை மத்திய அரசும் திட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பும் இதுவரை நடத்தி வந்த முறை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இதனால்தான் மாநிலங்களுடைய அபிலாஷைகளும், நியாயமான ரணங்களும், மொழிவாரியாக தங்களுடைய தேசிய இனத்தைப் பாதுகாக்க இந்தியக் கூட்டாட்சியில் மத்திய அரசிடம் போர்க் குணத்தைக் காட்டுகிறது. இந்த நிலையில் மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கூட்டாட்சி பாதுகாப்பு, பிரிவு 356ஐ நீக்குவது, அதிகாரப் பட்டியல்களை மாற்றியமைப்பது, நிதிப் பகிர்வதில் தாராளம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைக்கு மத்திய – மாநில உறவுகளில் உள்ளன.

மாநில சுயாட்சி என்பது காங்கிரஸாரின் குரல்தான். 1915இல் கோபால கிருஷ்ண கோகலே தனது அரசியல் சாசனம் (Political Testament) என்ற நூலில் மாகாணங்களவை, அதற்கான சுய உரிமைகள் பற்றி முதன்முதலாகத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் காலத்திலும், மாகாண சுயராஜ்யம் என்பதையும் காங்கிரஸார் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இன்றைய சூழலில் தமிழ் தேசியம்

தமிழ் தேசியம் என்பது, தொன்மையான உரிமை. அதனுடைய தன்மைகளைப் பாதுகாத்து தமிழர்களுடைய நலனைப் பேணுவது அவசியமானதுதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையென்ன?

பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் 1990களின் தொடக்கத்தில் தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததன் விளைவால், தமிழ் தேசியம் என்றொரு நோக்கத்தை எட்ட முடியுமா என்பதைப் பல ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தி சிந்தனை செய்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகியுள்ளதை உணர முடிகிறது. தமிழ் தேசியத்தில் நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. தேசிய இனத்தின் கலாச்சாரம் அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்துவிட்டன. உலக சார்பு நடைமுறைகள் இன்றைக்கு மேல்நோக்கி வருகின்ற நிலையில் தனி தேசியப் பிணைப்பு என்ற வகையில் சில தடைகளும் பெருகிவருகின்றன.

உலக நிலவரம்

இலங்கையில் எல்லாக் காரண காரியங்களும் நியாயங்களும் இருந்தும் விடுலைப் புலிகள் கடுமையாக போராடியும், தமிழர்கள் தொடர்ந்து 44 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் இன்னும் அவர்களுடைய நியாயமான நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வரலாற்றில், 2008இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பிரிந்த நாடுகள் ஆகும்.

போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும்; நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிடம் இருந்தும்; ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.

மக்கள் பொது வாக்கெடுப்புகளின் விநோதத் தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு 'ஆம்' என்றும், 25 வாக்கெடுப்புகள் 'இல்லை' என்றும் வாக்களித்துள்ளன. 1990களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன. சோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் எட்டு நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து மூன்று நாடுகள் பிரிந்தன, எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரிப் பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது.

சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருந்தன. எனவே நீண்ட காலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிவினை நிகழவில்லை.

பெர்னான்டோ ஆர். டீசன் தன்னுடைய The Theory of Self-determination என்னும் நூலில் சுயநிர்ணயம், பிரிந்து செல்லும் உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான தகுதிகள் அந்தப் பிரச்சினைகளில் இருக்க வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கிறார். அது மட்டுமல்ல, இன்றைய சந்தை ஜனநாயகம், தாராளமயமாக்கலால் சுயநிர்ணய உரிமை சிறிது சிறிதாக மட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இன்றைய உலகில் தமிழ் தேசியம் சாத்தியமா?

இப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியம் சாத்தியப்படுமா என்பதுதான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்திற்குச் சாதகமாக இல்லை என்பதுதான் என் போன்றவர்களின் கருத்து. தமிழ் தேசியம் என்பது புனிதமாகக் கருதப்பட வேண்டிய விஷயமாகும். அதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.

எனவே, இதை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து, அடுத்த நகர்வு என்னவென்ற கவனிக்க வேண்டும். இப்படியான அக, புறச் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டிற்குச் சாத்தியமில்லை. ஈழத்தில் நியாயங்கள் இருந்தும், கடுமையாகப் போராடியும் வெற்றி இலக்கை இன்னும் அடையவில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய நம் மீது உலக நாடுகளின் பார்வையும் அங்கீகாரமும் மிகவும் அவசியம். அது சாத்தியமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவ்வாறு சாத்தியமாகும் வரை மாநில சுயாட்சி பெற முயற்சிப்பது, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுவை இணைந்து தென்மாநிலங்கள் கூட்டுறவான சமஷ்டி முறையில் திராவிட நாடு என்ற நிலைப்பாட்டில் இணைந்து தங்களுக்கான நலன்களைப் பேணி பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க முனைப்புக் காட்டுவது ஆகியவைதான் இன்றைய சாத்தியமாகும்.

இந்தக் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறாகக்கூட இருக்கலாம். நான் குறிப்பிட்ட கருத்துகளைக் கொண்டு விவாதம் நடத்தி எது தமிழகத்திற்கு நலன் பயக்குமோ அதை முன்னெடுங்கள்.

வந்தேறிகள் பிரச்சினை

மற்றொரு பிரச்சினை வந்தேறிகள். இந்த மண்ணில் பிறக்காமல், இந்த மண்ணுக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகாவும் இதயசுத்தியோடு போராடாமல் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்து ஆதாயத்தைப் பெற்றவர்களைக் குறை சொல்லலாம். ஆனால், தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து இதைத் தாயகமாகக் கொண்டு அவர்களின் வழி வழியாக வந்து தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாக போராடும் நல்லுள்ளங்களையும் வந்தேறிகள் என்று காயப்படுத்துவதனால் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை. அரசியலமைப்புச் சட்டம் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்கிறது. அதை மீறியும் வந்தேறிகள் என்று சொன்னால் அது தனிப்பட்ட முறையில் தன் இருப்பைக் காட்டிப் பரபரப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும்.

வந்தேறிகள் என யாரைச் சொல்கிறார்கள், அதற்கான அளவீடுகள் என்ன, குறியீடுகள் என்ன, அதற்கான தகுதியும் தன்மையும் தரமும் எப்படி வகுக்கப்படுகின்றன என்பதெல்லாம் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்து, சுவாசித்து தமிழகத்திற்காகப் பாடுபடுபவர்களை வந்தேறிகள் என்று சகட்டுமேனிக்கு அர்த்தமற்றுப் பேசுவது நியாய அரங்குகளில் எடுபடாது.

உண்மையாகத் தமிழகத்தை வாட்டிக் கொழுக்கும் வந்தேறிகள் யாரென்று கண்டறியுங்கள். உரத்த குரலில் பேசுங்கள். உலகமே மானிடம் வந்து செல்கின்ற பூமிதான். யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை.

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பணிக்குச் செல்வது குதிரைக் கொம்பாக இருந்தது. இன்றைக்கு எனது கிராமத்திலேயே 40, 50 பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கேயே நிரந்தரக் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள். உலகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டுக்கு அவர்கள் உழைக்கிறார்கள். வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் இல்லை.

எனவே, இந்தக் காலகட்டத்தில் தாராளமயமாக்கப்பட்ட சந்தை ஜனநாயகத்தில் போர் கொண்டு தனி நாடு பிரிந்தது எனக்குத் தெரிந்தவரை பங்களாதேஷ். அதன்பின் ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன. மற்ற நாடுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து சென்றதெல்லாம் உலக நாடுகள் தலையீடு, ஐநா தலையீடு, இரு நாடுகளும் கூடி மனமுவந்து பிரிந்து செல்வது என்றுதான் நிகழ்ந்தன.

இன்றைய தொலைத்தொடர்பு, சமூக வலைதளங்கள், தாராளமயமாக்கல் என்ற வகையில் நாம் கோரும் தமிழ் தேசியமும், வந்தேறிகள் என்று ஓர் அளவுகோல் இல்லாமல் பேசுவது எந்த வகையிலும் பயனளிப்பதில்லை. அந்த நோக்கத்திற்கே ஊறு விளைவித்துவிடும். இந்தப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.

(கட்டுரையாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதை சொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். மின்னஞ்சல்: rkkurunji@gmail.com)

http://www.minnambalam.com/k/2018/08/23/30

http://www.minnambalam.com/k/2018/08/24/5

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...