Tuesday, August 28, 2018

இந்திய அரசியல் சாசனம் குறித்தான கேள்விக்குறிகள்…


இந்திய அரசியல் சாசனம் குறித்தான கேள்விக்குறிகள்…
---------------------------------------
நேற்றைய என் பதிவில், 1789இல் பிரெஞ்சு புரட்சி காலக்கட்டத்தில் அமெரிக்காவில் அதன் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் புதிய அரசியலமைப்பு சாசனத்தை அந்த நாட்டுக்கு பிரகடனப்படுத்தி அர்ப்பணித்தார் என பதிவு செய்திருந்தேன்.
அமெரிக்க அரசியல் சாசனம் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 329 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. அந்த சாசனத்தில் 7 பிரிவுகளில் இதுவரை 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 26 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை பார்த்தால் நமக்கே வேதனையாக இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் எடை 0.600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம் 328 பிரிவுகள் நாடு விடுதலைப் பெற்று 72 ஆண்டுகளில் 101 திருத்தங்கள் வரை நடந்தேறியுள்ளது. இன்னும் சில திருத்தங்கள் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ளது.
நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நெகிழும் தன்மையா? நெகிழாத் தன்மையா? என்பதற்கான பதிலும் இல்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பி.என்.ராவ் என்பவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ் மற்றும் முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை. அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா ​​இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.
அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.
இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.
கவர்னர்கள் என்ற தேவையற்ற பதவியை அரசியல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குகின்ற கொடையும், இன்றைக்கு நமது அரசியல் சாசனத்தில் உள்ளது தேவைதானா? இப்படி பல்வேறு நமது அரசியல் சாசனங்களில் உள்ள குழப்பங்களை நீண்ட பட்டியலே இடலாம். இவ்வளவு பக்கங்களும், பிரிவுகளும் நமது அரசியல் சாசனத்தில் இருந்தும் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய வழிகாட்டியாக அரசியல் சாசனம் இல்லை என்பது தான் யதார்த்தம்.
வேர்ட்ஸ்வோர்த் சொல்வார், பழமைக்கும், புதுமைக்கும் இடம்விட்டுவிட வேண்டும். அதை இயற்கையோ, இறைவனோ நிரப்புவான் என்று. இயற்கையாகவே அதை நிரப்பக்கூடிய சூழல்கள் இந்தியாவில் அமையவும் இல்லை. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் இப்படியான குழப்பமான
நம்மிடம் தொலைநோக்கு பார்வையோ, தடை தடங்கல்கள் இல்லாமல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கமுடியுமா என்பது தான் நம்முடைய வினா?
இன்றைக்கு மக்கள் ஜனநாயகம் என்ற கருத்து மாறி, சந்தை ஜனநாயகம் என்று மாறிவிட்டோம். இந்நிலையில் இதை குறித்தான அச்சங்களையும் கவலைகளையும் யார் கவனித்து தீர்ப்பார்களோ என்பது தான் நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி. அரசியல் சாசனம் என்பது ஒரு நாட்டின் ஜீவசக்தியாகும். அந்த ஜீவசக்தியிலேயே குழப்பங்களும் கேள்விக் கணைகளும் எழுந்தால், நிலையான ஆரோக்கியமான, அரசியலமைப்பு அணுகுமுறை எதிர்காலத்தில் இருக்குமா என்பது ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வில்லை. ஆட்சிக்கு வந்தால் போதும், நமக்கென்ன என்று ஆட்சியாளர்கள் எண்ணுவார்களானால் எதிர்காலத்தில் மிகப்பெரும் கேட்டினை சந்திக்க வேண்டியது தான்.
“Ask not what your country can do for you, ask what you can do for your country.”

#அரசியலமைப்பு_நிர்ணய_சபை
#அரசியல்_சாசனம்
#constitutional_assembly_India
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-08-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...