Monday, August 13, 2018

மறக்க முடியாத தலைவர் கலைஞரின் என் மணவிழா உரை

மறக்க முடியாத தலைவர் கலைஞரின் என் மணவிழா உரை

----------------------------------------------
என்னுடைய திருமணத்தை 12/05/1986 அன்று தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார். அவர் ஆற்றிய உரை திருமணத்திற்கு மறுதினம் (13/05/1986) முரசொலியில் வெளியானது. தலைவர் அவர்கள் காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து உன் திருமண நிகழ்ச்சி உரை முழுமையாக முரசொலியில் வந்துள்ளது. படித்துவிட்டு சொல்லப்பா என்றார். அந்த உரையை கீழே பதிவு செய்துள்ளேன்.
எனது திருமணம் மயிலாப்பூர் அன்றைய கச்சேரி சாலை, ராஜா திருமண மண்டபத்தில் திரு. பழ.நெடுமாறன் தலைமையேற்று, வைகோ வரவேற்புரை நிகழ்த்தி தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்தார். அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரத்தினவேல் பாண்டியன், வி. இராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.இராமமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோ. அழகிரிசாமி, ஜனதா கட்சித் தலைவர் இரா. செழியன், ஈழத் தலைவர்கள் அமிர்தலிங்கம் – மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், ஈழவேந்தன், சந்திரஹாசன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த திருமண விழாவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம், நடேசன் போன்றோர் கலந்து கொண்டனர். இறுதியாக என்னுடைய சீனியரும், அன்றைய தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர். காந்தி நன்றி கூறினார்.
அன்றைக்கு சபாரத்தினம் கொலை, மேலவை ஒழிப்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சியில் செய்த கண்காணிப்பு பணிகளை எல்லாம் முக்கியப் பிரச்சனைகளாக திருமணத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள். தலைவர் கலைஞருடைய உரையை இன்றைக்கும் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என் மனைவி 2014 நவம்பரில் மறைந்த அன்று, “என்னப்பா ராதா, உனது திருமணத்தில் நான்தானே தாலி எடுத்துக் கொடுத்தேன். இப்போது மலர் வளையம் வைக்க வரவேண்டியதாகிவிட்டதே” என்று விசாரித்ததையும் வைத்து இந்த உரையையும் திரும்ப படிக்கும் போது பொலபொலவென கண்ணீர் வடிகிறது.

தலைரின் கலைஞரின் உரை… -----------------------------------------------

ஈழ விடுதலைப் போராளிகள் கவனத்துக்கு:
குறிக்கோளை மறந்து செல்வோரை இனியும் தமிழகம் தாங்காது!
ராதாகிருஷ்ணன் – சரளா திருமண விழாவில் தலைவர் கலைஞர் உரை!
-----------------------------------

குறிக்கோளை மறந்து செல்வோரை இனியும் தமிழகம் தாங்காது என்பதை இன்று சென்னையில் நடைபெற்ற ராதாகிருஷ்ணன் – சரளா மணவிழாவில் பேசிய தலைவர் கலைஞர் ஈழவிடுதலைப் போராளிகள் கவனத்துக்கு சுட்டிக் காட்டினார்.


தலைவர் கலைஞர் அவர்களது உரை வருமாறு:
இன்று நம் அனைவருடைய நல்வாழ்த்துக்களையும் பெற்று மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிற அருமைத் தம்பி இராதாகிருஷ்ணனையும் செல்வி சரளாவையும் நானும் மனமார வாழ்த்தி மகிழகின்றேன். மாவீரன் நெடுமாறன் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய இளவலாக – அவர் நடத்துகின்ற இயக்கத்தினுடைய முன்னோடி தம்பியாக – அயராத உழைப்பும் ஓய்வில்லாத பணியும் இயல்பாகக் கொண்டவராக தம்பி இராதாகிருஷ்ணன் திகழ்கிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் தன்னுடைய உளப்பாங்கால் எத்தனை நண்பர்களை, உறவினர்களை பெற்றிருக்கிறார் என்பதை இந்த மணவிழா மண்டபம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஏராளமான வழக்கறிஞர்கைளை, நீதிபதிகளை, தமிழீழத் தலைவர்களை, இளைஞர்களை, அவருடைய சொந்தக் கிராமத்திலுள்ள உறவினர்களை, நண்பர்களை அவருக்கே உரித்தான நல்லியல்பால் ஈர்த்து மண்டபம் முழுவதும் குழுமியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த மேடையிலே இரண்டு நீதிபதிகளுக்கிடையில் நெடுநேரமாக அமர்ந்திருக்கிறேன். அவர்கள் அமர்ந்தவுடன் சொன்னேன், இரண்டு நீதிபதிகளுக்கிடையே நான் அகப்பட்டுக் கொண்டேன் என்று, அவர்கள், “எங்களுக்கிடையில் நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள்” என்று சொன்னார்கள். நான் சொன்னேன், “நான் பத்திரமாக இருப்பேன். உங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாது. அது தான் என்னுடைய கவலை” என்று. இனி என்ன ஆபத்து வர இருக்கிறதென்று தம்பி கோபால்சாமி வேடிக்கையாக கூறினார். ஆகவே இப்படிப்பட்ட முரண்பட்ட அல்லது வேறுபட்ட என்றுகூட சொல்லமாட்டேன்; பலரும் பல்வேறு துறைகளிலே பணியாற்றக் கூடியவர்களும் ஒருங்கிணைந்து இந்த மணமக்களை வாழ்த்துகிறோம் என்பது மிகப்பொருத்தமுடைய ஒன்றாகும். தம்பி இராதாகிருஷ்ணனுடைய உழைப்பைப் பற்றியும், அவருடைய தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் தமிழ் இன மக்கள் இங்கு மட்டுமல்ல; எங்குமே உரிமைகளை பெறவேண்டும் என்பதிலே அவருக்குள்ள ஆழ்ந்த கவலை8யப் பற்றியும் நான் மிகமிக நன்றாக அறிவேன். நம்முடைய மாவீரன் நெடுமாறன் அவர்களிடத்திலே அவர்கள் பயிற்சி பெற்று அவருடைய வழிநின்று தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக ஒல்லும் வகையெல்லாம் இன்றைக்கு அரும்பாடுபட்டு வருகிறார்.
இல்வாழ்வு நல்வாழ்வாக அமைக அவருக்கு இன்றைக்கு மலர்கனிற் இந்த இல்வாழ்வு நல்வாழ்வாக அமைந்திட வேண்டுமென்று நாமெல்லாம் வாழ்த்துகின்றோம். வாழ்த்த வந்திருக்கின்ற ஈழத்து தலைவர்களும், போராளிகளும் கூட மேடையில் இருக்கிற காட்சியினை நான் காண்கிறேன்.
அவர்களிலே மிகச் சிறந்த வழக்கறிஞராக விளங்குகின்ற நம்முடைய சிவசிதம்பரம் அவர்கள் இங்கே வீற்றிருப்பதையும் மணமக்களை வாழ்த்தியதையும் மணவிழாத் தலைவர் நெடுமாறன் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். மற்றவர்களெல்லாம் ஈழத்திலிருந்து வந்திருப்பவர்கள். அனைவரும் வழக்கறிஞர்களாக இல்லாவிட்டாலும் நம்மிடையே வழக்குரைக்க வந்திருப்பவர்கள் தான். தமிழ்நாட்டு மக்களிடத்திலே வழக்குரைக்க வந்திருக்கின்றார்கள். ஆனால் எனக்குள்ள கவலையெல்லாம் வழக்குரைக்க வந்தவர்களே புதிய வழக்குகளை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான். நான் இந்த மணமேடையிலே வந்து அமர்ந்து இந்த மணவிழா நிகழ்ச்சியை காணுகின்ற நேரத்தில் என் பக்கத்திலும், அருகிலும், எதிரிலும் அமர்ந்திருக்கின்ற ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளையெல்லாம் காணும் பொழுது நான் இங்கே பெறுகின்ற மகிழ்ச்சியினூடே ஏதோ ஒரு சுமை; ஏதோ ஒரு பளு என்னுடைய உள்ளத்தை அழுத்திக் கொண்டிருக்கிறதென்பதை நான் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அது எப்படிப்பட்ட பளு என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். நான் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உடன்பிறப்பே என்று உங்களையெல்லாம் அழைக்கின்ற நேரத்திலேகூட, நான் அண்மையிலே இழந்துவிட்ட உடன்பிறப்புகளையெல்லாம் கூட எண்ணிப்பார்த்து கண்கலங்குகின்றேன். அப்படிப்பட்ட ஒரு கலக்கத்தோடு எந்த ஒரு இனத்திற்காக நாமெல்லாம் ஒன்றுகூடி பாடுபட வேண்டும் என்று இன்றைக்கு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த முனைப்பினுடைய முனை மழுங்கிவிடக்கூடிய அளவிற்கு காரியங்கள் நடைபெறலாமா என்ற கேள்வியை மாத்திரம் தான் உங்களுடைய உள்ளத்திலே விதைத்திட விரும்புகின்றேன்.
ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதைத்தான் நம்முடைய நண்பர் சந்திரஹாசன் இங்கே வாழ்த்துரைக்கும போது கோடிட்டு காட்டினார்கள். ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குறிக்கோள் வெற்றி பெற ஒறுதி உள்ளம் படைத்த இராதாகிருஷ்ணனைப் போன்ற பலபேர் இந்த சமுதாயத்திற்கு தேவை. ஆனால் குறிக்கோளை விட்டுவிட்டு கண்ட பக்கமெல்லாம் கவனத்தைச் செலுத்துவதால் குறிக்கோளை அடைந்திட முடியாதென்பதற்கான பாரதக்கதையினுடைய சான்று ஒன்றை ஒரு சமயம் பேரறிஞர் அண்ணா அவர்கள் கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்கள். பாரத்ததில் துரோணரிடத்தில் கவுரவர்கள் நூறுபேரும், பாண்டவர்கள் ஐவரும், கர்ணன் போன்ற வேறு பல மாணவர்களும் விற்பயிற்கி பெறுகிறார்கள். அவர்களையெல்லாம் பெற்ற பயிற்சி செம்மையாக நடைபெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள துரோணர் ஒரு நாள் அந்த மாணவர்களையெல்லாம் கூட்டி வைத்து ஒவ்வொரு மாணவனாக அழைத்து ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டி அவர்களுடைய கையில் வில்லையும் அம்பையும் கொடுத்து நாணேற்றச் சொல்லி அந்த மரத்தைப் பார், அதில் என்ன தெரிகிறதென்று ஒவ்வொருவரையும் கேட்க துரியன் முதல் கர்ணன் வரையிலே கவுரவர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அந்த மரத்தின் கிளை தெரிகிறது, இலை தெரிகிறது, காய் தெரிகிறது, கனி தெரிகிறது, மலர் தெரிகிறது என்று ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவர்கள் இன்னென்ன தெரிகிறது என்று தங்களது கண்ணிற்கு தெரிவரையெல்லாம் சொன்னார்கள். இறுதியாக துரோணர் அர்ச்சுன்னை அழைத்து உனக்கு என்னப்பா தெரிகிறது! வில்லில் நாணை ஏற்றிச் சொல் என்றதும் அவன் சொன்னான், “என் கையிலே இருக்கின்ற நாணேற்றப்பட்ட அம்பனி நுனியும், மரத்தின் உச்சியிலே அமர்ந்திருக்கின்ற அந்த பறவையின் கழுத்துந்தான் எனக்குத் தெரிகிறது” என்று குறிப்பிட்டான். “நீதான் தலைசிறந்த மாணவன். உனக்கு மாத்திரம் தான் குறிக்கோள் தெரிகிறது. உண்மையான குறி எங்கே வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரிகிறது” என்று அர்ச்சுனனை துரோணர் பாராட்டினார் என்று பாரதத்திலே இந்தக் கதை வரும். நான் எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைக்கு தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்திலே சில பேருக்கு இலை தெரிகிறது. இலை தெரிகிற காரணத்தால் கிளை தெரிகிறது; கிளை தெரிகிற காரணத்தால் அந்தக் கிளையிலே இருக்கின்ற சிறுசிறு கொத்துகள் தெரிகின்றன; கொத்துகள் தெரிகின்ற காரணத்தால் அதிலே கொத்து கொத்தாக இருக்கின்ற மலர்கள் தெரிகின்றன. ஆனால் எந்த வல்லூறுப் பறவையினுடைய கழுத்து முறிக்கப்பட்டு கீழே விழ வேண்டுமென்று கருகிறோமோ அந்தப் பறவையினுடைய கழுத்தும் கையிலே இருக்கின்ற அம்பின் நுனியும் சிலபேருக்கு தெரியாமல் இருக்கின்றது. அதைத்தெரிந்து கொண்டு பாடுபடுகிறவன் தான், பணியாற்றுகிறவன்தான் உண்மையான போராளியாக இருக்க முடியும். உண்மையிலேயே குறிக்கோளிலே பற்றுடையவனாக இருக்க முடியும். அப்படி குறிக்கோளிலே – பற்றுள்ளவர்களைத்தான் இனி தமிழகம் ஏற்கும், தமிழ்நாடு தாங்கும் என்பதை உரிமையின் காரணமாக என்னுடைய அன்பு நண்பர் நெடுமாறன் தலைமையிலே நடைபெறுகிற இந்த மணவிழாவில் நான் எடுத்துக் கூறி அவர் சார்பாகவும் கூறப்படுகின்ற கருத்து இது என்பதை எடுத்துச் சொல்லி என்னையும் அவரையும் இந்தக் கருத்தில் யாரும் பிரித்திட முடியாதென்பதையும் திட்டவட்டமாகக் கூறுகிறேன். அதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, நற்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்ற அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அருமைத் தம்பி இராதாகிருஷ்ணன் அவர்கள் இனிமேல் இராதாகிருஷ்ணனாக இல்லாமல் சரளாகிருஷ்ணனாக தன்னுடைய இல்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
-நன்றி, முரசொலி. (13/05/1986)
Kalaignar Karunanidhi #Srilankan_Tamils_Issue #Highcourt_judges_issue_1986 #Abolition_of_Legislative_Council_Tamil_Nadu #Tamil_Eelam #கலைஞரும்_ஈழத்தமிழரும் #தமிழக_மேலவை_ஒழிப்பு #சென்னை_உயர்நீதிமன்ற_நீதிபதிகள்_பிரச்சனை_1986 #கலைஞர்_உரை #KSRadhakrishnanpostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 12-08-2018










No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...