Friday, August 17, 2018

பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி !’ - வாஜ்பாய்

பிரிவுக்குப் பின்னர் கருணாநிதி - வைகோ முதல்முறையாகப் பேசிக்கொண்டது; அண்ணா பிறந்தநாள் எழுச்சிப் பேரணி !’ - வாஜ்பாய் குறித்து கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நினைவலைகள் என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் தனது மின்னஞ்சல் பதிப்பில் பதிவு செய்துள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/134232-ks-radhakrishnan-shares-memories-of-former-pm-vajpayee.html

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், தலைவர்கள் பலரும் வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அந்தவகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடனான நினைவுகளைத் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். வாஜ்பாய் குறித்து பேசத் தொடங்கிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,`1986-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி மதுரையில் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு  நடைபெற்றது. இதில் வாஜ்பாய்,  காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த எச்.என் பகுகுணா, என்.டி.ராமராவ், ராமுவாலியா, கே.பி. உன்னிகிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமி, கர்நாடக உள்துறை அமைச்சர் ராசையா, பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யனன் அம்பனன் உள்ளிட்டோர் பாண்டியன் ஹோட்டலில் அரங்குகூட்டத்தில் காலையில் கலந்துகொண்டனர்.
அன்று மாலை மதுரையில் அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட மாபெரும் கூட்டம் பந்தய திடலில் நடைபெற்றது. கூட்டம் முடிந்து மதுரை பாண்டியன் ஹோட்டலில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வாஜ்பாய்,எச்.என்.பகுகுணா உள்ளிட்டோர் அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செய்யப்பட்டன. மீனாட்சியம்மன் கோயில் தெற்கு வாசலுக்குச் சென்று இறங்கினோம். மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கோயிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளையும் நடந்தே செல்லலாம் என்று வாஜ்பாய் கூறியதால் சுற்றி வந்தபோது, கிழக்குச் சித்திரை வீதியின் புது மண்டபம் அருகில் வளையல்களும் மதுரை மீனாட்சி அம்மனின் ஸ்பெஷல் குங்குமம் என்று சின்ன தகர டப்பியில் அடைத்து விற்பனைக்கு இருந்தை குங்குமத்தையும் வாஜ்பாய் வாங்கிக் கொண்டார். பின்னர், கிழக்குச் சித்திரை வீதியைக் கடந்து தெற்குச் சித்திரை வீதியில் கார் ஏறினார். அப்போது வாஜ்பாயிடமும், எச்.என்.பகுணாவிடமும், மே12ம் தேதி (1986) கருணாநிதி என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்கிறார். வைகோ, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார் என ஆங்கில திருமண அழைப்பிதழை வழங்கினேன். அதை வாஜ்பாய் பிரித்து பார்த்துவிட்டு `கேலக்ஸி ஆஃப் பிப்புள் அட்டின்டிங் யுவர் மெரேஜ்’ என்றார். எனது திருமணநாளன்று வாஜ்பாயும், எச்.என்.பகுகுணாவும் தந்தி அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதிமுக தலைவர் வைகோ 1998ல் சென்னை கடற்கரையில் அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாளாக நடத்தினார். அந்த ஏற்பாடுகளை நான் முன்னின்று நடத்தினேன். அந்தக் கூட்டத்தில்தான் சேது சமுத்திர திட்டம் குறித்து வாஜ்பாய் அறிவிப்பு செய்தார். வாஜ்பாயை வரவேற்க விமானநிலையம் சென்றிருந்த வைகோ, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என மனுவை அவரிடம் வழங்கினார். தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்று ம.தி.மு.கவை துவக்கிய வைகோ, அதன்பிறகு கருணாநிதியைச் சந்திக்கவில்லை. வாஜ்பாய் வரவேற்பின் போதுதான் சந்தித்தார்.  சந்திக்கும் போது `வைகோ எப்படி இருக்கிறீர்கள். நல்லா இருக்கீங்களா’ என கருணாநிதி கேட்டார். அதற்கு வைகோ `நீங்க நல்லா இருக்கீங்களா என கேட்டார். இது அன்றைய மாலை செய்தித்தாள்களில் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டது. 5 ஆண்டுகள் பின் அவர்கள் முதன்முறையாகச் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த நானும், ம.தி.மு.க நிர்வாகிகளும் மேடையில் மாவட்டச் செயலாளர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்தோம். பிரதமர் அமரும் மேடையில் அதிகபட்சமாக 10 முதல் 15 பேர்தான் அமரலாம். முதன்முறையாக கிட்டத்தட்ட 60 பேரை அந்த மேடையில் அமர வைத்தோம். இதற்காக காவல்துறையிடம் பட்ட கஷ்டம் ஏராளம். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், பரூக் அப்துல்லா. பஞ்சாப் முதலைச்சர் பிரகாஷ் சிங் பாதல் போன்ற அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு அண்ணா பிறந்த நாளை சிறப்பித்தனர். இறுதியாக பேசிய வாஜ்பாய், வைகோவின் கோரிக்கையை ஏற்று சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிப்பை செய்தார். 140 வருடமாக கிடப்பில் இருந்தது, திட்டத்தை நிறைவேற்றுவது பா.ஜ.கவின் சாதனை என்றும் வைகோவின் முயற்சிதான் என்று பாராட்டி பேசினார்.

இதற்கிடையில் முக்கிய செய்தியை சொல்லவேண்டும். பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருக்கும். அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் மேடைக்கு பின் பக்கம் சமையலறை அமைத்து, ரவா தோசை, மசால் தோசை, இட்லி, வடை கேசரி, சூடாக தயாரித்து வட இந்திய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. வாஜ்பாய் உள்ளிட்டோர் விரும்பி சாப்பிட்டு எப்படி செய்தீர்கள் என்று வைகோவிடம் கேட்டனர். அத்வானியும், பரூக் அப்துல்லாவும் மறுமுறையும் கேட்டு விரும்பி சாப்பிட்டனர்.
இன்னொரு சம்பவத்தையும் கூறவேண்டும். ஈழத்துக்கு ஆயுதங்களை இந்திய அரசு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. வைகோ கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு ராணுவ ஆயுதங்களை தருவதை நிறுத்திவைத்தார்.

வாஜ்பாய் சாப்பாட்டுப் பிரியரும்கூட. சமீபகாலமாக உணவைக் குறைத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. அற்புதமான கவிஞர் அவர். இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். பிடித்துவிட்டதென்றால் அவர்கள் மீது அளவுகடந்த அன்பை காட்டுபவர். நகைச்சுவையோடு பேசுவது அவரது இயல்பான குணம். தன்னுடைய நாடாளுமன்ற பேச்சுகளை பிரதமர் ஆவதற்கு முன்பே மூன்று தொகுப்புகளாக வெளியிட்டார்.வங்காளதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கியபோது, `துர்கா தேவியே வருக!' என்று பாராளுமன்றத்தில் கட்சி பேதங்களைக் கடந்து பாராட்டக்கூடியவர். கருணாநிதியுடன் நல்ல நட்பை கொண்டிருந்தவர். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் நட்பு பாராட்டுபவர்' என்று வாஜ்பாய் உடனான நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

#வாஜ்பாய்நினைவலைகள் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-08-2018




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...