Wednesday, August 22, 2018

*மதராசப்பட்டினம் - மெட்ராஸ் - சென்னப்பட்டினம் - சென்னை-379ல்*



-------------------------------------
நூற்றாண்டுகளைக் கடந்த வானுயர்ந்த கட்டிடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டிடக்கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை மெருகேற்றிக் கொண்ட சென்னை தான் தென்னிந்தியாவின் நுழைவு வாயில் எனப்படுகிறது. இந்த நகரத்தின் உருவாக்கம் நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தில் நுழைந்தவுடன் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேய முகவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பணிகளுக்காக தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியை 22-08-1639 ஆம் நாளில் விலைக்கு வாங்கினார். அந்த அதிகாரப்பூர்வ நாளே சென்னை தினம் உருவான நாளாக கருதப்படுகிறது. 

அந்த இடத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பி, குடியிருப்புகளை அமைத்து தங்களின் பணிகளை மேற்கொண்டனர். பின்னாளில் பலர் அதைச் சுற்றி குடியேறத் துவங்கினர். அப்போது அந்த பகுதியை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என பல சிறிய கிராமங்களை உள்ளடக்கி நகரமாக உருவானது மதராசப்பட்டினம். வடசென்னை பகுதிகளை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னை பகுதிகளை சென்னைப்பட்டினம் என்றும் அழைத்தனர். ஆங்கிலேயர் இரண்டையும் ஒன்றிணைத்து மதராஸ் என்று அழைத்தனர். 

இப்படியான வரலாற்றைக் கொண்ட மதராஸ் பல்வேறு போர்களில் சிக்கியது. முகலாயர்களால் 1702லும், மராட்டியர்களால் 1741லும், பிரெஞ்சுக்காரர்களால் 1746லும் தாக்குதலுக்குள்ளானது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து 1746ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆங்கிலேயர் வசமானது. மீண்டும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்கு 1758ஆம் ஆண்டு போனது. இப்படியாக பலர் கைகளுக்கு சென்ற இந்த நகரத்தை சில மாதங்களில் மீண்டும் ஆங்கிலேயர் தங்கள் கொண்டுவந்து ஆட்சி நடத்தினர். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் மதராஸ் நகரமாகவே இயங்கியது. 
ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் வர்த்தகத்தை துவக்க ஒரு முக்கிய காரணம் இருந்தது. இன்று சென்னையின் வடிகால்களாக இருக்கும் அடையாறு, கூவம் ஆகிய நதிகளில் ஒரு காலத்தில் தெளிவான நீரோட்டத்துடன் படகு போக்குவரத்தும் இருந்து வந்தது. சரக்கு பரிமாற்றமும் நடந்து வந்தது. அந்த காலத்தில் சென்னைக்கு துறைமுக வசதி இல்லாததால் நடுக்கடலில் கப்பல்களில் உள்ள சரக்கு பொருட்களை படகுகளுக்கு மாற்றப்பட்டு நகருக்குள் ஆறுகளின் வழியாக கொண்டு வந்தனர். இதனால் இது முக்கிய வியாபாரத் தலமாகவும் விளங்கியது. 
இருப்பினும் புயல் காலங்களில் பல்வேறு படகு விபத்துகள் ஏற்பட்டதால் 1881 ஆம் ஆண்டில் சென்னை துறைமுகம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளியால் துறைமுகம் சின்னாபின்னமானது. இருப்பினும் 1896ஆம் ஆண்டில் பல்வேறு மாற்றங்களுடன் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது சென்னை துறைமுகம்.
காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினர். தென்னிந்தியாவின் முதல் இரயில் முனையமாக 1856இல் ராயபுரம் அமைந்தது. பின்னர் சென்னை சென்டிரல், எழும்பூர், பூங்கா நகர் என முக்கிய இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் சென்னை நகரில் டிராம் வண்டிகள் முக்கிய பங்காற்றின. மாட்டு வண்டி, குதிரை வண்டிளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1895ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிராம் வண்டிகள் மிகப் பெரிய வரப்பிரசாதமானது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நகரின் தங்க சாலை, கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு, பாரிஸ் கார்னர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கில் இயங்கியது. 

சென்னைபட்டினம் விடுதலைக்குப் பின்னரும் மெட்ராஸ் ராஜதானியாக இருந்து வந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திரப் பிரதேசம் சென்னையை உரிமை கோரியது. அப்போது பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் மெட்ராஸ் தமிழ்நாடு வசமானது. பின்னர் 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னையை மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது. 
மெட்ராஸ் மாநகரத்தை சென்னை என்று 1997ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்த நாளை 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

இத்தகைய வரலாற்று நகர்வுகளோடு பல்வேறு இயற்கை பேரிடர்களையும் தாங்கிக் கொண்டு இன்றும் தனது கம்பீரத்தை இழக்காமல் வளர்ந்து வருகிறது. ஆனால் நாம் அந்த நகரத்தின் தூய்மையையும், பழமையையும் நாசம் செய்து வருகிறோம். அழகிய கடற்கரையை மாசு செய்கிறோம், இயற்கையின் பரிசான கூவம், அடையாறு ஆறுகளை வடிகால்களாக பயன்படுத்தி வருகிறோம். சதுப்பு நிலக்காடுகளை வீட்டு மனைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து வருகிறோம். பாரம்பரியம் கொண்ட பல அழகான கட்டிடங்களையும் முறையாக பராமரிக்காமல் சிதிலமாக்கி வருகிறோம். மாறி வரும் நகரச் சூழலுக்கேற்றார் போல மக்களின் சுற்றுப்புறப் சூழலின் மீதான பார்வை சிறிதும் இல்லாமல் அறியாமை அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. இன்றைக்கு இதுகுறித்தெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படுவதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. என்ன செய்ய தகுதியானவர்களைத் தான் நாம் அனுப்புவது இல்லையே. #தகுதியே தடை 
வந்தாரை வாழ வைக்கும் சென்னை உருவாகி 379வது ஆண்டுகள் ஆகிறது.

#சென்னை மாநகரம்
#மெட்ராஸ்
#மதராசப்பட்டினம்
#சென்னப்பட்டினம
#Madras
#Chennai
#Madrasapatanam
#Chennapatanam
#St_George_Fort
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...