Wednesday, July 3, 2019

நீரின்றி அமையாது உலகு - ஊற்றில் நீர் சுரக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்.

இன்றைய(3-7-2019)தினமணியில் வெளிவந்துள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்த எனது பத்தி.
நீரின்றி அமையாது உலகு - ஊற்றில் நீர் சுரக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்.
-----------------------------
வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளுக்கு சென்றபோது, அந்த கந்தக மண்ணில் கொளுத்தும் வெயிலில் ஊற்றில் நீர் சுரக்கும் என நம்பிக்கையில் வேலிக்காட்டில் மக்கள் காத்திருக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. வைப்பாற்றில் எப்பொழுது தண்ணீர் கிடைக்கும் என்று பிளாஸ்டிக் குடங்களும், தேங்காய் சிரட்டை, நீண்ட மூங்கில் கட்டைகளால் செய்யப்பட்ட சிரட்டையை வைத்துக் கொண்டு பெண்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது.
குளங்கள் தூர்வாரப்படவில்லை. ஆற்று மணலை கொள்ளையடித்து விற்றாயிற்று. மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டோம். இயற்கையை கபளீகரம் செய்துவிட்ட பிறகு சாதாரண பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை. ஏன் கடல்நீரை குடிநீராக மாற்றி குளிர்பான நிறுவனங்களுக்கு அளிக்காமல் சுவை நீராக இருக்கும் தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவங்களுக்கு யாரோ வீட்டு சொத்தாக அள்ளி இறைத்ததால் வந்த வினை தான் இன்றைக்கு தண்ணீர் பஞ்சம். அது மட்டுமல்லாமல் தாமிரபரணியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மட்டுமல்லாமல், கோவில்பட்டி, தூத்துக்குடி நகர், விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வரை உள்ள மக்களுக்கு தாமிரபரணி நீர் தாகத்திற்கு பயனளிக்கிறது.
தாகம் எடுக்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. என்ன செய்ய? தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை. இப்படியானதொரு கொடூர சூழ்நிலை வரும் என்று என்னுடைய சமூக வலைத்தளங்களில் 2017லிருந்து எச்சரித்து வந்திருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் ரேசனில் தண்ணீர் வழங்குவதையும், அங்குள்ள மக்களின் பாடுகளையும் சொன்னபோது, ஒரு மெத்தப் படித்தவர், மக்களின் பிரதிநிதியாக நீண்டகாலம் இருந்தவர். அரசியல் களத்திலும் பிரதானமாக இருப்பவர். என்னுடைய பதிவுகளை பார்த்து ஏகடியமாக, “இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வராதுங்க. சும்மா பயமுறுத்தாதீங்க” என்றார். அப்படி வரக்கூடாத கவலையான தண்ணீர் பஞ்சம் தமிழகத்திற்கு வந்துவிட்டது.
ஏனெனில், நம்மிடம் தொலைநோக்கு பார்வையில்லை. அவ்வப்போது, பிரச்சனை என்றால் மண்டை வலிக்கு அனாசின் மாத்திரை போடுவதுபோல, காவிரிக்கு, முல்லை – பெரியாறுக்கு பேசிவிட்டு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சிந்திக்காத, புரிதலில்லாத நெஞ்சங்களும் அதற்கான செயல்பாடுகளும் இல்லையென்றால் இப்படித்தான் தீர்க்க முடியாத தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும். இப்போது நிலைமை என்ன?
தென்னமெரிக்காவில் கேப் டவுன் நகரில் கடந்த 4, 5 ஆண்டுகளாக ரேசனில் தண்ணீர் கொடுக்கும் நிலையைப் போன்ற நிலைமைகள் வந்துவிடக்கூடாது என்று போர்க்கால நடவடிக்கைகளிலாவது அனைவரும் ஒருங்கிணைந்து கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். தண்ணீர்த் தேவைக்கு அதிக விலை கொடுத்தாலும், உரிய நேரத்தில் தேவையான அளவு கிடைத்திராத பரிதாப நிலை. தண்ணீர் பஞ்சத்தினால் சட்ட ஒழுங்கும், வெட்டுக் குத்து கூட நடந்துவிடுமோ? என்ற அச்சங்கள் எழுகின்றன. லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கும் போது, மல்லுக்கட்டலும், முட்டல்களும் பெண்கள் மத்தியில் நடக்கின்ற நிலைமை. இராமாவரம் வட்டாரத்தில் இதனால் ஒரு பெண் மீது அரிவாள் வெட்டு நடந்துள்ளது.
சென்னையில் உணவு விடுதிகளும் மூடப்படும் நிலை, மருத்துவமனைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. சென்னையில் 13 மருத்துவமனைகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் பாலவாக்கம் தண்ணீர் ஒரு காலத்தில் சுவையான தண்ணீராக இருந்தது. அது தற்போது மாறி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல் நீர்மட்டம் உள்ளே வந்துவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் நிலத்தடி நீரில் கடல்நீர் சேர்ந்து தான் அந்த தண்ணீர் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆகிவிட்டது.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி, பேரூர் போன்ற இடங்களில் செயல்பாட்டிற்கு வந்தது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் உப்பு நீக்கப்பட்டு கால்சியம், மெக்னீசியம், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், புளோரைடு போன்ற முக்கிய சத்துகள் நீரில் திரும்பவும் சேர்க்கப்பட்டு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மெக்சிகோவில் தான் பெரிய திட்டமாக அமைந்துள்ளது. அடுத்து அரபு நாட்டில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 20,516 உப்புநீரை நன்னீராக்கும் ஆலைகள் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரி மழை 96 செ.மீ. ஆகும். கடந்த 2018இல் 81 செ.மீ. தான் மழை பெய்தது. கடந்த 2019 துவக்கத்திலிருந்து மே மாதம் வரை 10லிருந்து 15 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 3.4 செ.மீ. மழை தான் பெய்தது. இந்த சிக்கல் வருமென்று தெரிந்தும் மாநில அரசும் மெத்தனப் போக்கில் இருந்தது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ. 122 கோடியும், மற்ற பகுதிகளில் குடிநீர் விநியோகிக்க ரூ. 36 கோடியும் ஒதுக்கி அதை முறைப்படுத்தவுமில்லை, கண்காணிக்கவும் இல்லை. அதை மாநில அரசு ஒருங்கிணைக்கவும் இல்லை. கிராமப்புறங்களில் புதிய ஆள்துளை குடிநீர்க் கிணறுகள், பழுதடைந்த குடிநீர் குழாய்கள், பாழடைந்த குடிநீர் கிணறுகள் ஆகியவற்றை சீர் செய்திருக்க வேண்டும். அதிலும் சரியான கவனிப்பில்லாமல் மெத்தனப் போக்கில் அரசு நிர்வாகம் இருப்பதும் ஒரு காரணம்.
இதை குறித்து அரசு அதிகாரிளை தொடர்புக் கொண்டாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசியை கூட எடுப்பதில்லை. இராமநாதபுரத்தில் குடிநீருக்கு பெரும் திண்டாட்டம் தான். வைகை ஆறு, பெரியகுளத்தில் ஊற்றை தோன்றி தண்ணீர் வரும் வரை மணிக்கணக்கில் காத்திருந்து கிடைத்த தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. தண்ணீர் வந்தாலும் வரும், வராமலும் இருக்கும், சொல்வதற்கில்லை. இதே நிலை தான் திண்டுக்கல்லிலும் உள்ளது. இந்த ஊருக்கு ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று வேடிக்கையாக பேசுவது உண்டு.
தேனி நிலத்தடி நீர் அதிகமுள்ள வட்டாரம் என்றாலும் அங்கும் குடிநீர் பஞ்சமே. காவிரி பாயும் திருச்சியிலும் 1000 அடிக்கு மேலாக போர்வெல் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதேபோல, தஞ்சையிலும் காவிரி – கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் இப்போது தேவைக்கு போதுமான தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள திருமானூர் நீரேற்ற நிலையத்தின் கிணறுகளில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தென்பென்னையாறு, மணிமுக்தாறு, கோமுகியாறு, மலட்டாறு, கெடிலம் போன்ற ஆறுகளெல்லாம் வற்றி வறண்டுவிட்டது. கள்ளக்குறிச்சி, செஞ்சி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் வரை தண்ணீர் பற்றாக்குறை. புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் கொம்யூனிலும் நீரளவு குறைந்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் நெருக்கடி. திருவண்ணாமலை, வெயில் வாட்டியெடுக்கும் வேலூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. காவிரியில் நீர் வற்றிவிட்டதால் சேலத்துக்கு வரவேண்டிய குடிநீரும் முறையாக வருவதில்லை. சேலத்தில் நிலத்தடி நீரும் இல்லாததால் 270 கோடி ரூபாயில் 2015இல் துவக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.
தருமபுரி மாவட்டத்திலும் ஒகேனக்கல் தண்ணீர் வரத்தில்லாமல் குடிநீர் பற்றாக்குறை. அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் வறட்சியினால் கிடைக்க வேண்டிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதில்லை. வரும் தண்ணீரை அங்குள்ள அரசு சிமெண்ட் ஆலைகள் எடுத்துக் கொள்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வறண்ட குடிநீர் கிணறுகளும் ஏரி, குளங்களால் 10 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் வழங்குதல் கிடையாது. கரூர் வட்டாரத்திலும் பெரும் பிரச்சனை தான். தொழில் பகுதியான திருப்பூரில் 1000 ரூபாய்க்கு 1000 லிட்டர் வாங்க வேண்டிய நிலையில் தொழிற்கூடங்கள் உள்ளன. கோவையிலும் 2 வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி நீரின் வரத்தும் பற்றாக்குறையில் தான் உள்ளது. மழை வளம் அதிகமுள்ள நீலகிரியிலும் குடிநீர் திண்டாட்டம் தான். ஊட்டிக்கு பார்சன் வேலியிலிருந்து தண்ணீர் கிடைக்கக் கூடிய ஏற்பாட்டை செய்யலாம். அதேபோல, குன்னூருக்கு ரேலியா அணையிலிருந்தும், கூடலூர், பந்தலூர், கோத்தகிரிக்கு தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மேட்டுப் பகுதியில் தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் திட்டங்கள் வேண்டும். ஊட்டி சுற்றுலாத் தலம் என்பதால் விடுதிகளிலும் நீர் வேண்டும். சுற்றுலாப் பயணிகளும் சிரமமாக உள்ளன.
மதுரை மாநகரிலும் வைகை அணையின் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 1.10 கோடி லிட்டரும், மற்ற வகையில் 4.90 கோடி லிட்டரும் மற்ற நீராதாரங்களின் மூலமாக கிடைத்து வந்தது.
ஆனால், இந்தளவு கூட கிடைக்காமல் பற்றாக்குறையில் உள்ளது. வானம் பார்த்த விருதுநகர் மாவட்டத்திற்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தான் கைகொடுத்தது. எனவே இங்கு இது தான் பிரச்சனை. திருநெல்வேலி மாவட்டத்திலும் தாமிரபரணி நீர் குறைந்துவிட்டதாலும், மற்ற மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தாமிரபரணி நீர் செல்வதால் இங்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு.
துவக்கத்திலேயே சொன்னவாறு தூத்துக்குடி ஒரு வானம் பார்த்த பூமி. இங்கும் பெரும் தட்டுப்பாடு தான். பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியபின் சற்று மழை பெய்ததால் முழுமையாக தட்டுப்பாடு தீரவில்லை என்றாலும், தென்மேற்கு பருவக்காற்று மழையினால் ஓரளவிற்கு இந்த மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனை இருப்பதாக சொல்கின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் பெரும் தட்டுப்பாடு. ஆனால், பொன்னேரி, காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து தான் தண்ணீர் எடுத்து வந்து சென்னைக்கு கடந்த காலத்தில் விற்பனை செய்ததுண்டு.
இப்படி தமிழகம் முழுவதும் வறட்சியும், குடிநீருக்கே தட்டுப்பாடு என்று நிலையில் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 1829 குடிமராமத்து பணிகளுக்காக ரூபாய். 500 கோடி ஒதுக்கியுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த நீர்நிலைகள் உரிய முறையில் குடிமராமத்து செய்யப்படுமா என்பது தான் நமது கேள்வியே. மண் அள்ளிப் போடும் இந்த வேளையில் அரசு பணத்தை அரசு ஒதுக்கிய பணிகளுக்கு செய்யாமல் அந்த பணத்தை இடைத்தரகர்கள் கொண்டு செல்லக் கூடாது. தமிழகத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கும் என்று கூறினாலும், நீர்நிலைகள் பாதுகாப்பு பணிகள் சீராக நடந்திடவும் கண்காணிப்பும் தேவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ 60,000 நீர்நிலைகள் இருந்தன. அது தற்போது பாதி எண்ணிக்கையில் தான் ஏரிகளும், குளங்களும், நீர்நிலைகளும் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆயக்காட்டு மற்றும் குடிமராமத்து பணிகளை முறையாக செய்யவும் எனது பொது நல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீர்நிலைகளை அழித்தோம், மரங்களை அழித்தோம், காடுகளை அழித்தோம். அதன் விளைவுகள் தான் இன்றைய குடிநீர் தட்டுப்பாடு. உலகில் 122 நாடுகளின் தரவரிசையில் தண்ணீர் பற்றாக்குறை, நல்ல தண்ணீர் கிடைக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் கடைசியாக 120வது இடத்தில் இருப்பது ஒரு வேதனையான விடயமாகும். இப்படி தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று ஐ.நா. மட்டுமல்ல, முன்னால் இயங்கிய திட்டக்குழுவும், தற்போதைய நிடி ஆயோக் எச்சரிக்கை விடுத்ததெல்லாம் நாம் புறந்தள்ளினோம்.
நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை. நிலத்தடி நீரானது மேல்மட்ட நிலத்தடி நீர், உட்புற நிலத்தடி நீர் என்று இரு வகையுண்டு. இது குறித்தெல்லாம் வெள்ளந்தி விவசாயிகள் அறிவார்கள். ஆனால் வெற்றுச் சவடால் பேசுபவர்கள் இது குறித்தெல்லாம் அறிய முற்பட மாட்டார்கள். இது தான் பொதுவாழ்வு. உலகளவில் சோமாலியாவும், மெக்சிகோவும் தான் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்தது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் தண்ணீர் பஞ்சத்தில் மிகுதியாக பாதிக்கப்பட்டது. இந்தளவில் இந்தியாவில் பெங்களூரு, சீனாவின் பீஜிங், இந்தோனேசியாவின் ஜகார்த்தா, எகிப்தின் கெய்ரோ, மாஸ்கோ, இஸ்தான்புல், மெக்சிகோ, லண்டன், டோக்கியோ, மியாமி போன்ற நகரங்களும் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. நம்மிடம் முறையான தண்ணீர் விநியோக கொள்கையும், செயல்பாடுகளும் ஆய்வு செய்து இன்றைய தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப முறைப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவப் பேராசான் குறளின் வழியாக நடந்து நீரை பாதுகாப்போம். எதிர்காலத்தின் தேவையை ஒழுங்குபடுத்துவோம் என்ற வைராக்கியம் இல்லையென்றால் மானுடம் எதிர்காலத்தில் தழைக்காது என்பதை இந்த அகிலம் உணர வேண்டும்.

-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...