Monday, March 9, 2020

நாகை_துறைமுகம்

#நாகை_துறைமுகம் 
———————————
பன்னாட்டு கடல் வாணிபத்தில் கோலோச்சியிருந்து, கடந்த 40 ஆண்டுகளாக தனது மகத்துவத்தை இழந்திருக்கும் நாகை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் குறித்து அரசு கவனம் கொள்ளாதது நாகை மக்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. 

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் சோழகுலவள்ளிப்பட்டினம் என்ற பெயருடன், தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது நாகை. பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டுமல்லாமல், பயணிகள் கப்பல் போக்குவரத்திலும் சிறந்து விளங்கிய நாகை துறைமுகம், 1980-களுக்குப் பின்னர் தன் செல்வாக்கைப் படிப்படியாக இழந்தது.

எம்.வி. சிதம்பரம் கப்பல் மட்டும் நாகை துறைமுகத்துக்கு, துறைமுக அந்தஸ்தை வழங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில், 1984-ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.வி. சிதம்பரம் கப்பலும் தனது நாகை சேவையை நிறுத்திக் கொண்டது.

வெங்காய ஏற்றுமதியை மையமாகக் கொண்டு நாகை துறைமுகத்திலிருந்து சரக்குப் போக்குவரத்துத் தொடர்ந்து வந்தது. நாகையிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெங்காயக் கூடைகள், மூட்டைகள், பினாங்கு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 1991-ஆம் ஆண்டில் போர்ட்கிளாங் துறைமுகம் கன்டெய்னர் துறைமுகமாக மாற்றப்பட்டு, மலேசியாவின் பிரதான துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. ஆனால், நாகையில் அதற்கேற்ப கன்டெய்னர் கையாளும் வசதி அப்போது இல்லாத காரணத்தால் வெங்காய ஏற்றுமதியிலும் நாகைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 1991-ம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி நாகையிலிருந்து எம்.வி. டைபா என்ற கப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே, நாகை துறைமுகத்திலிருந்து நடைபெற்ற கடைசி ஏற்றுமதி.

பின்னர், 1999-ம் ஆண்டிலிருந்து நாகை துறைமுகம் வழியே பாமாயில் மற்றும் தேங்காய் புண்ணாக்கு இறக்குமதி நடைபெற்றது. இதன்மூலம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 சிறு துறைமுகங்களில் ஓரளவு செயல்பாடும், லாபமும் கொண்ட துறைமுகங்களின் பட்டியலில் நாகை இடம் பெற்றது.

இருப்பினும், அதன் பின்னர் போதுமான வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாததாலும், நாகைக்கு அருகே காரைக்கால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதாலும், நாகை துறைமுகம் தனது விறுவிறுப்பான செயல்பாடுகளை இழந்தது. போதுமான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயில் மட்டுமே இத்துறைமுகத்தை இயங்கச் செய்து வருகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் 3-ஆவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசும்போது, ரூ. 380 கோடியில் நாகை துறைமுகம், அனைத்துப் பருவநிலைகளிலும் இயங்கக் கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு நாகை மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, நாகையில் கப்பலணை துறைமுகம் அமைக்க சென்னை ஐஐடி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆய்வின்போது கடுவையாறு முதல் கல்லாறு வரையிலான பகுதிகளை முழுமையாக இத்திட்டத்துக்குப் பயன்படுத்தவும், கல்லாறு பகுதியிலிருந்து வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலைக்கு இணைப்புச் சாலை அமைத்தால், நாகை நகரப் போக்குவரத்துக்குப் பிரச்னையின்றி துறைமுக செயல்பாடு அமையும் எனவும் கருத்துரு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, தனியார் முதலீட்டுடன் நாகையில் கப்பலணை பசுமை சூழ் துறைமுகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எல்லாம் செவிவழிச் செய்தியாகவே, கரைந்து போயின. இருப்பினும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை தற்போதைய தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மட்டும் மக்களிடம் இருந்து வருகிறது.

ஆனால், அந்த நம்பிக்கையையும் சீர்குலைப்பதாக உள்ளது நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஆ. ஜீவானந்தம் அண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்.
 நாகை துறைமுகத்துக்கு மீண்டும் புத்துயிர் அளித்து சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி. ஷிகாப் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஆ. ஜீவானந்தம் அனுப்பியுள்ள கடிதத்தில், "நாகை துறைமுகம் நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும், சரக்குகளைக் கையாளத் தேவையான நிலப்பரப்பு இல்லாததாலும், குறைவான தொழிற்சாலைகளே இருப்பதாலும், நாகைக்கு அருகே உள்ள காரைக்காலில் தனியார் துறைமுகம் இருப்பதாலும், நாகை துறைமுகத்தை மேம்படுத்த வாய்ப்புகள் குறைவு' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் செயலாளரின் இந்த பதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதி மீது அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்த நாகை மக்களை, அச்சமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பி. ஷிகாபிடம் கேட்டபோது, "சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் செயலாளரின் பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாறு, வடக்குப் பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி (ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாக) வரை துறைமுகம் அமைக்க இடம் தாராளமாக உள்ளது. இந்த இடத்தைப் பயன்படுத்தி துறைமுகம் அமைத்தால் நாகை, வேளாங்கண்ணி ஆகிய இரு நகரங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.
 இந்த சாதக அம்சங்களைக் குறிப்பிட்டு, நாகை துறைமுகத்தை மேம்படுத்தக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால், துறைமுக மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளும்போது, மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றே பதில் அளிக்கப்பட்டிருந்தது. நம்பிக்கை அளிக்கும் எந்த பதிலும் அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை' என்றார்.
 
இதுகுறித்து நாகை இந்திய வர்த்தகத் தொழில் குழும முன்னாள் தலைவரும், ஏற்றுமதியாளருமான என். சந்திரசேகரனிடம் கேட்டபோது, அவர் தெரிவித்தது:

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் கடுவையாறை நேராக கடலில் கலக்கச் செய்தால், நாகை துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான மிதவைப் படகுகள் எந்த இடையூறுமின்றி வந்து செல்ல முடியும். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடலை 5 மீட்டர் ஆழப்படுத்தினாலே 1,000 டன் முதல் 2 ஆயிரம் டன் எடையிலான சிறிய கப்பல்கள் முகத்துவாரம் வரை வந்து செல்ல முடியும்.
 அக்கரைப்பேட்டை, கல்லாறு வரை நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தி, கல்லாறு பகுதியிலிருந்து வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தினால், எவ்வித போக்குவரத்து சிரமமுமின்றி நாகை துறைமுகமும், நாகையும் மேம்படும் என்றார்.

இதுகுறித்து நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமத் தலைவர் சிவசக்தி ரவியிடம் கேட்டபோது, "ஓரிரு நாள்களில் நாகை துறைமுக அலுவலரைச் சந்தித்து, துறைமுக மேம்பாடு குறித்து ஆலோசிக்கவுள்ளோம். மார்ச் மாதத்தில் நாகை வரும் முதல்வரை சந்தித்து துறைமுக மேம்பாட்டை வலியுறுத்தவும் திட்டம் உள்ளது. வர்த்தக தொழிற்குழுமக் கூட்டத்தில் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்களைத் தொடர்ந்து வருவதுடன், அவர் அறிவித்த அனைத்துத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் அளித்தும் வரும் தமிழக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள நாகை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், நாகை துறைமுக மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

#நாகை_துறைமுகம்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...