Tuesday, March 10, 2020

நாட்டுப்புற_தரவுகள் #கிராமத்தில்_சில_நம்பிக்கைகள்

#நாட்டுப்புற_தரவுகள்
#கிராமத்தில்_சில_நம்பிக்கைகள்
——————————————
•தலை ஈத்துப் பசுங்கிடாரியின் சாணியில் ஒளிவு (மின்னல்) தாக்கினால் அது தங்கமாக மாறிவிடும்.

•பிணசலாடிக்கொண்டிருக்கும் நல்ல பாம்புகளின் மீது கோடித்துணியைப்
போட்டு அதன் விந்தின் கறைபட்ட அந்தத் துணியை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு போனால் எடுத்த வழக்கெல்லாம் ஜெயமாகும்.

•அரையாப்பு நோய் வந்தவன் கழுதையோடு ‘சேர்ந்’தால் நோய் குணமாகும்.

•அந்தி வேளையில் நம் வீட்டுக்கு வருகிற சம்மந்தக்காரர்கள் விளக்குப் பொருத்திய பிறகேதான் போக வேண்டும். இல்லையென்றால் நம்ம வீட்டு “லட்சுமி” அவர்களோடு போய்விடுவாள்.

•இரவு நேரங்களிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பொருளைக் கொடுக்க மாட்டார்கள்.

•திங்கள் கிழமை பிரயாணம் கூடாது. (திங்கள் பயணம் திரும்பாப் பயணம்).

•புதன் கிழமை ஈன்ற  மாட்டை சம்மந்தக்காரர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட வேண்டும்.

•வெள்ளி, செவ்வாயில் ‘கருத்து கருப்பு’ லாந்தும்.

•இழவுக்கு வந்தவர்களை வா என்று கேட்கக்கூடாது. வந்தவர்களும் போகும்போது சொல்லிக்கொள்ளாமல் போய்விட வேண்டும். (நல்ல பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல்கொள்ளாமல் போவது).

•தட்டானைப் பிடித்து (தட்டான் என்பது பறக்கும் பூச்சி) தலையைக்கிள்ளி புதைத்து வைத்தால் பணம் முளைக்கும் என்பது சிறு குழந்தைகளின் நம்பிக்கை.

•இளங்கொடியை (மாடு கன்று ஈன்றவுடன் போடும் நஞ்சுக்கொடி) நாய் தின்றுவிட்டால் மாட்டில் பால் இராது. இளங்கொடியை ஆலமரம்  முதலிய பால்மரங்களில் கட்டி  வைத்தால் மாட்டில் பால் நிறைய கறக்கும காகம் முதலிய  பறவைகள் இளங்கொடியைத் தின்றுவிடாமல் இருக்க இலந்தை மரத்திலும் கட்டிவைப்பது உண்டு.

•தலைச்சன்கள் இறந்துபோனால் சுடுகாட்டில் நம்முடைய நம்பிக்கையான ஆட்கள் கூட இருந்து பிரேதத்தை எரிக்க வேண்டும். இல்லையென்றால் மந்திரவாதிகள் வந்து “தொழில்” செய்ய மண்டையோட்டைக் கொண்டுபோய்விடுவார்கள்.

•பச்சைப்பாம்பின் வாலை பெண்கள் உருவி விட்டுவிட்டு குழம்பு வைத்தால் குழம்பு ருசியாக அமையும்.

•தோல் முட்டையிட்ட கோழியை அடித்து விட வேண்டும்.

•இரும்பு கையில் இருந்தால் பேய் பிசாசு கிட்டே வராது.

•கைராசியான ஆளை’க் கூப்பிட்டு கோழியை அடைசேர்த்து (அடைகாக்க) வைக்கச் சொல்வார்கள்.

•முயல், நட்டிய வேலியைத் தாண்டாது; வெட்டிய குளத்தில் தண்ணீர் குடிக்காது.

•ஐந்தாவது பெண்குழந்தை பிறந்தால் விசேஷம். (அஞ்சாவது பொண்ணு அடுக்கெல்லாம் பொன்னு). 
எட்டாவது ஆண்: வெட்டும் சேவகன் (புலி). நாலாவது பெண்; நடையைப் பெயர்க்கும்.

•கோழி அடைகாக்கும்போது அதை மிதித்த சேவலை “அடிக்க”க் கூடாது. அப்படி அடித்து கறி சமைத்து உண்டால் அதன் குஞ்சுகள் தக்காது.

•கர்ப்பிணிகள் மசக்கையாக இருக்கும்போது அவர்கள் விரும்பும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.  இல்லையென்றால் பிறக்கும்குழந்தையின் காதில் இருந்து சீழ் வடிந்துகொண்டே இருக்கும்.
         
•உபயோகிக்கும் சமயத்தில் பச்சிலைகளின் பெயர்களைச் சொல்லக்கூடாது. சொன்னால் நோய் குணமாகாது.

•தினவு’ எடுத்த சில எருமை மாடுகள் பருத்திமார்ப்படப்பில் ‘உறசி’னாலே போதும் சினை தங்கிவிடும்.
         
•ஒருவரையுமே கடிக்காத, ஆயிரம் வருஷம் ஆயுளையுடைய நல்ல பாம்பில் நாகரத்தினம் இருக்கும். அது நீளமாக இருக்காது. ஒரு முழம் அல்லது ஒரு சாண் என்று குறுகிவிடும்.  கண் தெரியாது; வயசாகிவிட்டதல்லவா? நடுச் சாமத்திலே நாகரத்தினத்தைக் கக்கும். அந்த வெளிச்சத்திலேதான் அதி இறை தேடும். நாம் ஒரு கூடை நிறைய மாட்டுச்சாணி கொண்டுபோய் அதன்மேல் போட்டுவிட்டால் சாணிக்குள்  நாகரத்தினம் பொதிந்துவிடும். பிறகு நாம் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் லேசாக. தேன் இறுகி கல்கண்டு ஆகிறதல்லவா அது மாதரி அதனுடைய விஷம்தான் நாகரத்தினமாக ஆகிவிடுகிறதாம்!

#நாட்டுப்புற_தரவுகள்
#கிராமத்தில்_சில_நம்பிக்கைகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...