Saturday, March 7, 2020

பேராசிரியர்மறைவு #பொதுசெயலாளர்_க_அன்பழகன்இரங்கல்

*பேராசிரியர்மறைவு*
————————————
ராபின்சன் பூங்காவில் எழுதப்பட்ட  திராவிட முன்னேற்ற கழக  முதல்  அத்தியாயத்தின் கடைசி பக்கமும் கிழிந்து விட்டதே! கழகத்தின் பொதுச்செயலாளர்  க.அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற வேதனையான செய்தி பேரிழப்பு ஆகும். 

முதன் முதலாக 1966ல் விருதுநகரில் நடந்த கழக பொதுக்கூட்டத்தில் பார்த்தது. கருப்பு  பிரேம்   போட்ட கண்ணடி, சற்று சந்தன கலர் முழக்கை சட்டையுடன் அவர் அன்று பேசிய  பேச்சி இன்றும் நினைவில் உள்ளது. காசுக்கு
தம்படி என அடிக்கடி அப்போது குறிப்பிட்டார்.

அவருக்கும் எனக்கு நேரடி தொடர்பு
என்பது1980காலக்கட்டத்தில்; பின் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது ஏற்பட்டது.  அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரிப்பார். 

கடந்த 1991 ல் ஆட்சி கவிழ்ப்பு ,ராஜிவ் படு கொலை பின் தலைவர் அவர்களின் வீட்டின்   வழக்கு   குறித்து உடனிருந்து தலைவர் கலைஞரின்  வேதனையை உணர்ந்தவராக என்னை அழைத்து, ராஜாத்தி  அம்மாள் சொன்னார். என்.கணபதி, என்.வி.என். சோமுவிடம் சொல்லியும் நடக்கலாயம். நீ எதுவும் செய்யக்கூடாதா? உன்னால் முடியும் என்கிறார்கள் என்றார். அந்தளவு
தலைவர் கலைஞர் மீது பாசத்தை கொண்டவர் . இதற்கு வாழும் சாட்சிகள் வை.கோ அவர்களும்   விஜயா தாயன்பனும் தான். அதன்பின்னர் என்னால் இயன்றதை நல்ல முறையில் சட்டபூர்மாக செய்து முடித்தேன். 

கடந்த 2012ஆகஸ்ட் மாதம் டெசோ மாநாடு நடந்த போது இரண்டு நாட்களாக  என்னை கவனித்து வந்தவர், என்னை அழைத்து ,"கடந்த இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன், முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் உனக்கான அரசியலில் வாய்ப்பு வரவே இல்லையே என்று அன்புடன் ஆறுதலாக கூறினார். 

அரசியல்பயணத்தில் நான் மனச்சோர்வு அடைந்த சில நேரங்களில் எக்ஸ்ரே பார்வை  கொண்டவராக  அதனை உள்ளுணர்ந்து  அந்த மனச்சோர்வை போக்கும் விதத்தில்  தனியாக அழைத்து பேசி  தென்றலில் சொல்லெடுத்து  தேன்கலந்து மருந்தளிப்பார். 

தினமணி நாளிதழில் என் கட்டுரைகளை வாசித்த உடன் அதே காலைவேளையில் தொலைபேசியில். அழைத்து  பாராட்டுவார். 

திருநெல்வேலி ஏ.எல்.சுப்ரமணியம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் ச.அமுதன், பெரம்பூர் கந்தன் ஆகியோர் நல்ல நூல்களெல்லம் தேடிப்பிடித்து,  உன் வீட்டில் சிறப்பான நூலகம்  நீ   அமைத்திருப்பதாக சொன்னார்கள்.  வரேன் யா ஒருநாள் நேராக  வந்து நானே பார்க்கின்றேன் என்றார். பேராசிரியர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். அவரிடத்திலும் நூலகம் உண்டு.  குறிப்பெடுக்க வேண்டுமென்றால் துல்லியமாக புத்தகத்தின் பெயர், அடுக்கப்பட்டிருக்கும் இடம் குறிப்பிட்டு ஐந்து நிமிடத்தில்  அப்பணியை முடித்துவிடுவார்.  தலைவர் கலைஞரைப் போலவே நினைவாற்றல் கொண்டவர். 

இலண்டனில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டுக்கு செல்லும் முன் அவரிடம் வாழ்த்து பெற்று சென்றது பசுமையாக நினைவில்  இருக்கின்றது. உடல் மறைந்தால் காலத்தால் அழிக்கமுடியாக பணிகளை செய்து  என்றும் நினைவுகளில் நிலைத்து இருப்பார். 

 சட்டமன்றம், மேலவை, அவை, மக்களவை என மூன்று அவைகளிலும் கடமையாற்றி அந்த அவைகளின் மாண்பை காப்பாற்றும் பொருட்டு பணியாற்றியவர். 

அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஈவிகே.சம்பத், எம்ஜிஆர்,மதியழகன் , என்.வி.நடராசன்  முத்துலட்சுமி அம்மையார் , ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி.சிற்றரசு என்ற என்ற பெருந்தலைவர்கள் பட்டியலில் ஒட்டியிருந்த கடைசி இதழும் விழுந்துவிட்டதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது. 

திருக்குறள் ஆராய்ச்சி  செய்தவர் என்பதாலோ என்னவோ அதன்படியே வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கின்றார். அரசியலில் பெறும் தலைவர்களுக்கு மத்தியில் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து தலைவராக மறைந்திருக்கின்றார்.

பேராசிரியர் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

#பேராசிரியர்மறைவு
#பொதுசெயலாளர்_க_அன்பழகன்இரங்கல்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...