Friday, March 6, 2020

செம்மண்_கொள்ளை.

#செம்மண்_கொள்ளை
——————————

திருநெல்வேலி,தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கரிசல் மண்ணும் செம்மண்ணும் அதிகமாக இருக்கும். செம்மண் விவசாயத்திற்கும் ஏற்ற மண்ணாக இருப்பதால், அங்குள்ள விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக இதையே நம்பியுள்ளனர். இந்த நிலையில், சமீப காலமாக செம்மண் கடத்தல் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக இன்றைய தினமலர் (06.02.2020) நாளிதழில் வெளிவந்த செய்தி இதோ.

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில், ஸ்ரீவைகுண்டம் அருகே கலியாவூரிலும், வைப்பாற்றிலும், ஆற்று மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. ஜே.சி.பி., இயந்திரங்களால் தோண்டப்பட்டு, தினமும் இரவில், லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. மணல் கொள்ளை குறித்து புகார் அளித்தும், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை. வண்டல் மண் தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், தனியார் பட்டா நிலங்களில் அத்துமீறி செம்மண், வண்டல் மண் போன்றவற்றை கடத்துவதும் தொடர்கிறது. தூத்துக்குடி
-மதுரை நான்குவழிச் சாலையில், புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள, தனியார் பட்டா நிலங்களில், ஓட்டப்பிடாரம் வருவாய்த் துறையினரின் ஒத்துழைப்போடு செம்மண், வண்டல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது. 
புதூர்பாண்டியாபுரம் மற்றும் கீழஅரசரடி ஊராட்சிக்கு உட்பட்ட, துப்பாசுபட்டி கிராமத்தில், இரவு - பகலாக மண் கடத்தல் நடக்கிறது.இது குறித்து, நில உரிமையாளர்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
விதிமுறை மீறல் புதூர்பாண்டியாபுரம், கீழஅரசரடி பகுதிகளில் உள்ள, நீரோடையை தூர் வாருவது போல கணக்கு காட்டி, 50 அடி அகலத்திற்கு செம்மண் அள்ளுகின்றனர். குளங்களில், 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்ட அனுமதி கிடையாது. 
ஆனால் அங்கு, 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, வண்டல் மண் கொள்ளையடிக்கின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு, ஓட்டப்பிடாரம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உட்பட, அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
ஆயிரக்கணக்கான லோடு செம்மண் அள்ளிச்சென்ற பின், அதை எவ்வாறு மீண்டும் நிரப்புவார் என்பது, தாசில்தாருக்கே வெளிச்சம். இந்த முறைகேடு குறித்து, சுரங்கத்துறை உதவி இயக்குனர் பெர்னாட் கூறுகையில், ''நிலவியல் ஓடைகளை, அவ்வாறு எளிதாக தோண்ட முடியாது. 
அங்கு, செம்மண் அள்ள, அனுமதி தரவில்லை. 20 அடிக்கு, செம்மண் தோண்டியெடுப்பது, விதிகளுக்கு புறம்பானது,'' என்றார். நேற்று முன்தினம், தாசில்தாரிடம் புகார் அளித்தும் கூட, நேற்றும், ஜே.சி.பி., இயந்திரங்களுடன், செம்மண் அள்ளுவது தொடர்கிறது. 
மணல் கபளீகரத்திற்கு துணைபோகும், ஓட்டப்பிடாரம் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும், மணல் கொள்ளையர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

#செம்மண்_கொள்ளை
6-3-2020.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


No comments:

Post a Comment

Reached me today…