Wednesday, August 2, 2023

#அன்றைய (1940-‘50 கள்)திருநெல்வேலி மாவட்டத்தில்பொதுவுடைமை இயக்கம்…. #பதவியை நாடா சர்வபரி தியாகிகள்.

#அன்றைய (1940-‘50 கள்)திருநெல்வேலி
மாவட்டத்தில்பொதுவுடைமை 
இயக்கம்…. #பதவியை நாடா
சர்வபரி தியாகிகள்.
—————————————
 இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் கண்ட பெருமை திருநெல்வேலிக்கு உண்டு. கோரல் மில் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தவர் வ. உ. சி. இடதுசாரி அரசியல் எண்ணங்களுக்கு இடம் கொடுத்தது திருநெல்வேலி.

  தூத்துக்குடி கோரல் மில், விக்கிரமசிங்கபுரம் ஆலை வேலை நிறுத்தம் போன்ற நிகழ்வுகள் நெல்லை மண்ணில் பொதுவுடைமைக் கொள்கைக்கு வித்திட்டது. தொடக்க காலங்களில் பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை,தூத்துக்குடி வி. சங்கரநாராயணன், சிந்துபூந்துறை சோ. சண்முகம் பொதுவுடைமைக் கொள்கைக்கு இங்கு அடித்தளம் போட்டவர்கள்.

 ஆர் நல்லகண்ணு, ஏ. நல்ல சிவன், சு. பாலவிநாயகம், தொ.மு. சி.ரகுநாதன், வி.  மீனாட்சிநாதன், கோவில்பட்டி ஐந்து முறை கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சோ. அழகிரிசாமி, (இவரை எதிர்த்து ஒரு முறை திமுக வேட்பாளராக நான் போட்டி யிட்டேன்)கோடங்கால் கே. கிருஷ்ணசாமி, எஸ் . எஸ். தியாகராஜன்,தி.க.சி, இலஞ்சி ஐ. வி.ராமகிருஷ்ணன், பூதலபுரம் ஆர். வேல்சாமி தேவர்,பி. பாபநாசம், எம். பாண்டியன், ஆர்.வி. அனந்தகிருஷ்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ. முருகானந்தம், செங்கோட்டை காமாட்சி, பெ.சீனிவாசன், சொர்ணம், வி.எஸ் . காந்தி,
 சிவகிரி கே. செல்லையா, எஸ். எஸ்.  தியாகராஜன் போன்ற எண்ணற்றோர் இந்த மண்ணில் பொதுவுடைமை இயக்கம் வளரத் தங்களையே அர்ப்பணம் செய்தவர்கள். தோழர் ப. மாணிக்கம் கட்சி பொறுப்பு செயலராக பணியாற்றினார்.

  எஸ். வி. காட்டே,ஜீவா, பி. ராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் நெல்லைக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பாடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் இராமச்சந்திர நெடுங்காடி அவர்களின் ஒத்துழைப்போடு ஐந்து இடங்களில் கட்சி கிளைகளை அமைத்தது. மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சாம்பவர் வடகரையில் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஏ. சுப்பையா முதல் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1949 ஆம் ஆண்டு நடைபெற்ற நெல்லை சதி வழக்கில் 97 பேர் சேர்க்கப்பட்டனர். அதில் கைதாகாத கே. பாலதண்டாயுதம், வி. மீனாட்சிநாதன், பயில்வான் அருணாச்சலம் ஆகியோர் மீது தனியாக 1953ல் விசாரணை நடத்தி கே. பாலதண்டாயுதம், வி. மீனாட்சிநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் என்.டி. வானாமமலை, பாளை. சண்முகம் ஆகியோர் வாதாடினர். 92 பேர் மீது ஓராண்டு விசாரணை நடத்தி 78 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேர் தண்டிக்கப்பட்டனர்.

  ப. மாணிக்கம், ஆர். நல்லகண்ணு, பூதலபுரம் வேல்சாமி, வேலாயுதம், கே.பி. எஸ்.மணி, வி.அழகு முத்து,ஐ.மாயாண்டி பாரதி,ஆர்.கிருஷ்ணக்கோனார்,எம். பொன்னு  ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு ஐந்தாண்டு தண்டனையும்,ஒருவருக்கு இரண்டு ஆண்டு தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டு தண்டனையும் வழங்கப்பட்டன. நெல்லை சதி வழக்கில் குற்றவாளிகளைத் தேடி நெல்லை, தூத்துக்குடி,அம்பாசமுத்திரம், நாங்குநேரி,கோவில்பட்டி,எட்டயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற காவல் துறையினர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடுகளைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தினர்.சிபிஐ என ஒன்று பட்ட கட்சி(1964 முன்பு )அன்று இருந்தது. திருநெல்வேலி மாவட்டம் குறிப்பாக எட்டையபுரம் பகுதி கிராமங்கள் இவர்களின் ‘தலைமறைவு’(underground)சரணாலயம்.
இப்படி அம்பாசமுத்திரம், நாங்குநேரி சில பகுதிகள் உண்டு.

 1940 இல் நாங்குநேரியில் ஆர் .நல்ல கண்ணு, வழக்கறிஞர் என்.டி.வானமாமலை,பேராசிரியர் என். வானமாமலை ஆகியோர் அக்ரஹாரம் நுழைவுப் போராட்டம் நடத்தினர். அதே போன்று களக்காட்டில் ஆர்.நல்லகண்ணு, முத்துமாணிக்கம் போன்றோர் நடத்தினர். நாங்குநேரி,அம்பாசமுத்திரத்தின் அருகே உள்ள கோடாரங்குளம் பகுதிகளில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம், நாங்குநேரி மடம் ஆகியோருக்கு சொந்தமான நில குத்தகை பிரச்சினைகளில் ஏழை விவசாயிகளுக்காக ஆர்.நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சோ. அழகிரிசாமி, கோடங்கால் கே. கிருஷ்ணசாமி, எங்கள் வீட்டிற்க்கு வருவதுண்டு.
ஆர்.நல்லகண்ணுவுடன் சோ. அழகிரிசாமிக்கு எங்கள் பகுதியில் தேர்தல் பணி ஆற்றியதுண்டு.
சோ. அழகிரிசாமி சட்டக்கல்லூரியில் நான் அனுமதி பெற எனக்கு உதவினார்.இவர்கள் பதவியை நாடா சர்வபரி தியாகிகள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-8-2023.
@tncpim 
Cpi Tamilnadu CPI திருநெல்வேலி மாவட்டக் குழு CPIM SupportersCMahendran MahendranSathiya Bharathi
கோவில்பட்டி நியூஸ்டைம்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...